சுயவிருப்பில் ஏமாறும் சமூகம்.



கிராமப் புறங்களில் சிறுவர்களுக்கு இடையில் இடம்பெறுகின்ற சண்டைகள் சுவாரஸ்யமானவை. அப்படியான

சண்டைகளில் சிறார்கள் தமக்கிடையில் பரஸ்பரம் கடுமையான வாய்ச் சவாடல்களை விட்டுக் கொள்வார்கள். ஆனால், அவ்விடத்திற்கு பலம்மிக்க ஒரு நபர் வருவதைக் கண்டால் ஓடிச் சென்று வீட்டுக்குள் ஒழித்துக் கொள்வார்கள். சிலர் தாயின் முந்தானைக்குப் பின்னால் ஒழிந்து கொள்வதும் உண்டு. 


இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் மேய்ப்பர்கள் போலவும், காவலர்கள் போலவும் தம்மை காட்டிக் கொள்கின்ற அநேகமாக அரசியல் தலைவர்களும் தளபதிகளும் இக்கட்டான தருணங்களில் இப்படித்தான் ஓடி ஒழிந்து கொள்கின்றார்கள். தேர்தல் மேடைகளில் பீரங்கிப் பேச்சாளராக திகழும் இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது களத்தில் காணாமல் போய்விடுகின்றார்கள். 


பெரிய சமூகப் போராளி போலவும், இந்த சமூகத்திற்காக உயிரைக்கூட துச்சமென மதிப்போம் என்றும் வீரவசனங்கள் பேசும் முன்னாள், இந்நாள் முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்னர் 'வாய்ச் சொல் வீரர்கள்' போல ஆகிவிடுவதைக் தொடர்ச்சியாக கண்;டு வருகின்றோம். 

விரும்பி ஏமாறுதல்

முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்கு பொருத்தமற்றவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் கூட, 'கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவோம்' என்று கூறுவதை நம்பி, முட்டாள்தனமாக வாக்களித்து ஆண்டாண்டு காலமாக சுய விருப்பின் பெயரில் ஏமாறிக் கொண்டிருக்கும் சமூகமாகவே முஸ்லிம்களை வகைப்படுத்த வேண்டியிருக்கின்றது. 


கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகாண சபை உறுப்பினர்களாக, முதலமைச்சர்களாக, ஆளுநர்களாக இருந்த முஸ்லிம்களுக்கும் இம்போது அவ்வாறான பதவிகளில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. சமய, சிவில் சமூகம் சார்;ந்த தலைமைத்துவங்களி;லும் சொல்லிக் கொள்ளும்படியான முன்மாதிரிகள் இல்லாமல் போயுள்ளது.  


ஏன், அடிப்படையில் பரவலாக முஸ்லிம் சமூகமும் அதே மனோநிலையிலேயே உள்ளது. இதற்குப் புறம்பாக, மேற்படி தலைமைத்துவங்களில் அப்படி ஏதும் அபூர்வமான நல்ல பண்புகள் இருந்திருந்தால், அதனை அவர்கள் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத் திறனுடன் சமூகத்திற்காக பயன்படுத்தியிருந்தால், முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி சமய, சமூக விடயங்களிலும் கடந்த 25 வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். 

இரண்டு அஜெந்தாக்கள்

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு இரண்டு விதமான நலன்கள் இருக்கும். அவரது தொழில் ரீதியான அலுவலக நலன், மற்றையது தனிப்பட்ட நலன்கள். ஒரு இக்கட்டான தருணத்தில் இரண்டு நலன்களில் எதனை முன்னிலைப்படுத்துவது என்ற சிக்கல் எழும். அதனை 'நலன்களின் மோதுகை' (உழகெடiஉவ ழக iவெநசநளவள) என்று அறிவியலாளர்கள் கூறுவார்கள். 

அவ்வாறான 'நலன்களின் மோதல்' அரசியல்வாதிகளுக்கு அதிமாகவே ஏற்படுகின்றது எனலாம். பெரிய தேசியத் தலைவர்கள்  முதல் பிரதேச சபை தவிசாளர் வரை அனைத்து மட்டத்திலும் உள்ள அரசியல்வாதிகளுக்கு இரண்டு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. ஒன்று, தமக்கு வாக்களிக்கும் மக்களது நலன்சார்ந்தது. இரண்டாவது, தமது தனிப்பட்ட அரசியல், குடும்ப, பொருளாதார நலன் மற்றும் இருப்பு சாந்தத'hக இருக்கும். தம்மை விதிவிலக்கானவர்களாக கருதுவோர்  தொப்பியை தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம். 

துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலைகளில் 'நலன்களின் மோதலுக்கு' ஆளாகும் முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சொந்த அரசியல் நலன், உயிர்ப் பாதுகாப்பு போன்ற நலன்களை முன்னிறுத்தியே பெரும்பாலும் தீர்மானங்களை எடுக்கின்றனர். இதனால் ஒரு சமூகமாக முஸ்லிம்கள் தோற்றுப் போகின்றனர். இது தவணை முறையில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. 

சமூகத்தின் தவறுகள்

ஆனால், இதற்கெல்லாம் அவர்கள் பக்கத்தில் ஒரு நியாயம் இருக்கும். காரணம் வைத்திருப்பார்கள். ஒரு கற்பிதம் சொல்வார்கள். அல்லது, காரணங்களை தயார்படுத்திவிட்டே, சமூகம் விரும்பாத அரசியல் நகர்வுகள் குறித்த முடிவுகளையே அவர்கள் எடுக்கின்றனர் என்றும் சொல்லாம். 

முஸ்லிம் மக்களை எப்படி மடையர்களாக்குவது, எப்படி ஏமாற்றுவது என்பதை கணிசமான முஸ்லிம் தலைவர்களும் எம்.பி.க்களும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். யாருக்கு எதைச் சொல்லி சமாளிக்கலாம், எந்த மக்கள் கண்மூடித்தனமாக நம்புவார்கள், யாருக்கு பாட்டுப்போட்டு பேய்க்காட்டலாம், யாருக்கு பணம் கொடுத்து வாக்குக் கேட்கலாம், எந்த மக்களது தலையில் மிளகாய் அரைக்கலாம் என்ற ஒரு பட்டியலே அவர்களிடம் இருக்கின்றது. 

முஸ்லிம் சமூகம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்கொண்ட, எதிர்கொள்கின்ற பல்வேறு நெருக்குவாரங்களுக்கு காரணம் யார் என்று கேட்டால்?..... அரசாங்கம், இனவாதிகள், ஆயுதக் குழுக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றுதான் கணிசமான முஸ்லிம்கள் சொல்வார்கள். அது உண்மையும்தான். ஆனால், இது மட்டுமே உண்மையுமல்ல என்பதை மறந்து வி;டக்கூடாது. 

சமூக சிந்தனையற்ற, உருப்படியான அரசியலுக்கு பொருத்தமற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் காலங்களில் பல தடைவை இப்பக்கத்தில் வலியுறுத்தப்பட்டது. பெருந்தேசியத்திற்கு விலைபோகின்ற, பணத்திற்கும் பதவிக்கும் சோரம்போகின்ற, ஒழுக்கமற்ற தலைவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பல வருடமாக கோரி வருகின்றனர். 

ஆனால், முஸ்லிம் சமூகம் திருந்தியிருக்கின்றதா? முஸ்லிம் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? தேர்தலில் பணத்தையும் மதுபானத்தையும் காட்டி மயக்குகின்ற வேட்பாளரை, பெண் பித்தனை, சமூகத் துரோகம் செய்தவனை, முன்னைய தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதியை, சூடு சுரணையோ சமூக சிந்தனையோ இல்லாத வேட்பாளர்களை முஸ்லிம்கள் தோற்கடித்திருக்கின்றனரா?

இந்தக் கேள்விகளில் பலவற்றுக்கு 'இல்லை' என்பதுதான் விடை. இவ்வாறான ஒரு சிலர் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த ரகமான எத்தனையோ பேர் மீண்டும் பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை பிரதிநிதித்துவ அரசியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதிய, புதுமையான அரசியல் கள்வர்கள் இன்று மக்கள் பிரதிநிதிகளாகி இருக்கின்றனர். 

எல்லோரும் பொறுப்பு

ஆகவே, இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களுக்கு அரசியல் கட்டமைப்பு ஒரு காரணம் என்றால், அதற்கு முழு முதற் காரணம் முஸ்லிம் சமூகம் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட வேண்டியுள்ளது. 

இங்கே முஸ்லிம் சமூகம் எனும்போது, அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஜம்மியத்துல் உலமா சபை, பள்ளிவாசல்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக சமூகம், பட்டதாரிகள், வசதி படைத்தோர், வியாபாரிகள், ஊடகவியலாளர்கள், பொன்னாடை போர்த்தப்பட்டால் மட்டும் சமூக சேவகராக ஆகிவிடுவோம் என நினைப்போர், பணம் கொடுத்து கலாநிதி பட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் கூட்டம், ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கூஜாதூக்கும் பேஸ்புக் போராளிகள் முதல் கடைநிலை வாக்காளர்கள் வரை சமூகத்தின் எல்லா மட்டத்தினரும் உள்ளடங்குகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். 


'ஒரு சமூகம் தானாக திருந்தாத வரை இறைவன் அவர்களை திருத்துவதில்லை' என்ற இறைவசனத்தை முஸ்லிம்கள் உண்மையில் நம்புகின்றார்கள் என்றால், அதன்படி முஸ்லிம்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அரசியல் பரப்பில் மட்டுமன்றி, சமய, சிவில் சமூக விடயங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியான அபூர்வங்கள் எதுவும் நடக்கவில்லை. மாறாக, நல்ல சிந்தனை கொண்ட பலர் தோற்கடிக்கப்பட்ட வரலாறு ஏராளம் உண்டு. 

மக்கள் திருந்தியிருந்தால், சரியான வேட்பாளர்களுக்கு வாக்களித்து, சமூக சிந்தனையுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்திருந்தால் அவர்கள் சமூகத்துக்கு சேவையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். சுதா சமூகத்திற்காக குரல்கொடுப்பார்கள், ஒரு பிரச்சினை என்று வரும்போது களத்திற்கு வருவார்கள் என்று நம்பியிருக்க முடியும். 

ஆனால், அறிவிலித்தனமான காரணங்களுக்காக பொருத்தமற்றவர்களை தலைவர்களாக வைத்துக் கொண்டும், அற்பத்தனமான நியாயங்களுக்காக சமூக சிந்தனையற்ற, 'டீல்' மன்னர்களை எம்.பி.க்களாக, பிரதிநிதிகளாக தொடர்ந்தும்தெரிவு செய்து கொண்டும் இருக்கி;ன்ற ஒரு சமூகம், இவ்வாறு எதிர்பார்த்திருப்பது எந்த வகையில் நியாயம்?! 

சீன தயாரிப்பான போலி உதிரிப் பாகத்தை பொருத்திவிட்டு, ஜப்பாளில் தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் உதிரிப்பாகம் போல சிறப்பாக பாவிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முட்டாள்தனத்தையே இந்நிலைமை நினைவுபடுத்துகின்றது. இது, இடுப்பு வலிக்கு மாத்திரை போட்டுவிட்டு, தலையிடி குறையும் என்று எதிர்பார்த்திருப்பதை போன்றதாகும். 

இதுதான் காலகாலமாக முஸ்லிம் அரசியலில் நடந்து வருகின்றது. இதில் பழைய, புதிய எந்த முஸ்லிம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் விதி விலக்கல்லர் ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான இந்த அரசியல் முஸ்லிம் சமூகத்திற்கானது என்று சொல்லப்படுவதே, இதில் மிகப் பெரிய வேடிக்கையாகும். 

நிகழ்கால நெருக்கடிகள்

யுத்தம் முடிவடைந்த பிறகு, கடந்த பல வருடங்களாக முஸ்லிம்கள் ஒருவித இனத்துவ நெருக்குவாரங்களை சந்தித்து வருகின்றனர். அவ்வப்போது மேற்கிளம்பிய மத ரீதியான அழுத்தங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இன்னுமொரு பரிணாமத்தை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது. சஹ்ரான் பயங்கரவாத கும்பல் இதற்கு பிரதான காரணம் என்பதை மறுக்கவும் முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடாத்திய ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், அதற்கான காரணத்தை இக்குழு கண்டறியவில்லை என்றாலும் சிறப்பான சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. 

அதன்படி, பல தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஓரிரு பௌத்த கடும்போக்கு இயக்கங்கள்; தொடர்பான பரிந்துரைகளும் இவற்றில் அடங்கும். அதேபோல், இஸ்லாமிய அமைப்புக்கள், மத்ரசா, புர்கா போன்றவற்றை கட்டுப்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை அறிவோம். 

இந்த அறிக்கையின்படி நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்து வருகின்றது. ஆனால், ஏனைய பரிந்துரைகளை விட முஸ்லிம்களுடன்; தொடர்புடைய விடயப் பரப்புக்களில் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்தப்படுவதாக சிங்கள அரசியல்வாதிகளே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சட்டத்தையும் நீதிப் பொறிமுறையையும் முஸ்லிம்கள் மதிக்க வேண்டும். அத்துடன் பல்லின நாடொன்றுக்கு ஏற்ற வகையில் முஸ்லிம்களுக்குள் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது எனலாம். ஆயினும், புர்கா தடை, மத்ரசா தடை பற்றிய கதைகளும் புதிய வர்த்தமானி அறிவி;த்தல்களும்; கெடுபிடிகளும், முஸ்லிம்களை இலக்காகக் கொண்டவை அல்ல என கூறப்பட்டாலும் கூட, அது பெரும்பாலும் முஸ்லிம்களுக்கே நெருக்கடிகளை கொண்டுவரும் என்பதே பட்டறிவாகும். 

அடக்கி வாசித்தல்

இந்தப் பின்னணியில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் சற்று அடக்கி வாசிப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஜம்மியத்துல் உலமா சபை போன்ற பொறுப்புவாய்ந்த அமைப்புக்கள் மட்டுமன்றி சிவில் செயற்பாட்டாளர்களும் மௌனிக்கச் செய்யப்பட்டுள்ளனர் எனலாம்.  

இன்னுமொரு வகையில் சொன்னால், முஸ்லிம் அரசியல்வாதிகளை கைது செய்வதன் மூலம் அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர் எனலாம். மறுபுறத்தில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கி;ன்ற முஸ்லிம் எம்.பிக்களை மட்டம்தட்டுகின்ற, சேறுபூசுகின்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக தெரிகின்றது. 

உதாரணமாக, றிசாட் பதியுதீன் இப்போது சற்று அடக்கி வாசிக்கின்றார். றவூப் ஹக்கீம் பிடிகொடுக்காத அறிக்கைகளை அத்திபூத்தாற்போல் வெளியிடுகின்றார். இரு முஸ்லிம் கட்சிக்ககுள்ளும் இருக்கின்ற 'கறுப்பு ஆடுகள்' அடையாளம் காணப்பட்டிருந்தாலும் கூட, எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைக் கைதிகளாக தலைவர்கள் இருக்கின்றனர். அதையே தலைவர்களும் விரும்புகின்றனர் என்பது வேறுகதை. 

அத்துடன், ஆளும் தரப்பில் அங்கம் வகித்தாலும் ஒரு அமைச்சுப் பதவியைத்தானும் பெற்றுக் கொள்ள காலம் கைகூடாத தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, முன்பிருந்த பொற்காலம்  இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாக தெரி;கின்றது. 

இதேவேளை, ராஜபக்சாக்கள் பற்றிய நிறைய ரகசியங்களையும் பிடியையும் அமைச்சர் அலி சப்ரி வைத்திருக்கின்றார் என்றும், அதனால் முஸ்லிம்கள் விடயத்தில் அலி சப்ரியை பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்றும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கு வெளியில் இருந்து மறைமுகமாக சேறுபூசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. 

எல்லைக் கோடுகளுக்குள்

முஸ்லிம்கள் சட்டத்திற்கு கட்டுப்படுவதுடன் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. அத்;துடன் இன, மத விடயங்களை ஒழுங்குபடுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும். அதேவேளை அரசியல், சிவில் சமூக ரீதியாக ஜனநாயக வழிமுறைகளில் தம்மைப் பலப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. 

இப்பேர்ப்பட்ட ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் சமய ரீதியாகவும் மட்டம்தட்டி தமது எல்லைக் கோடுகளுக்குள் நிறுத்தப்பட்டுள்ளனர். அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி சமூகத்தலைவர்களும் தமது பாதுகாப்பு வலையங்களுக்குள் நின்று கொண்டு சமூகத்திற்கு சேவையாற்றினால் போதும் என்றே இப்போது நினைக்கின்றனர். 

தமக்கான எல்லைக் கோடுகளை தாண்டிச் சென்று, அநாவசியமாக வம்பில் அல்லது பொறியில் மாட்டிக் கொள்வதற்கு யாரும் விரும்பவில்லை. அவர்கள் தங்களது எல்லைக் கோடுகளுக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர். அப்படியான தலைவர்களையே, தளபதிகளையே முஸ்லிம் சமூகம் தெரிவு செய்திருக்கி;;ன்றது என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. 

ஆனால் ஒன்று, இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது, 'இனிமேல் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும்' என்று முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற உணர்வு, உத்வேகம், தேர்தல் வரும்போது காணாமல் போய்விடும் என்பதுதான் யதார்த்தமாகும். 

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 04.04.2021)

சுயவிருப்பில் ஏமாறும் சமூகம்.  சுயவிருப்பில் ஏமாறும் சமூகம். Reviewed by Madawala News on April 06, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.