ஷுக்ரா தந்த செருப்படி..



90 களின் இறுதிப் பகுதியில் டைட்டானிக் என்றொரு படம் 
வந்தது .ஒரு பெரிய பயணக் கப்பல்,தன் கண்ணிப் பயணத்திலேயே வரலாறாகிப் போன கதை.

பயணப் பாதையில் ஒரு பனிப்பாறை இருப்பதைக்  அதன் காப்டன் அறிவுறுத்தப் படுகிறார். நீரினாலான கட்டி தானே ?அதை உடைத்துத் தள்ளிவிட்டு பயணிக்கலாம் என்று தீர்மானித்ததன் பின் விளைவுகளை நான் சொல்லத் தேவையில்லை. 

இன்றைய அத்தனை நிகழ்வும் அது போன்றது தான்.எந்த ஒரு நிகழ்வின் ஆழத்திலும் ஒரு கதையிருக்கும் என்பது உளவியல் கோட்பாடு.Iceberg theory என்று சொல்வார்கள். 

ஷுக்ரா எனும் பெண் தொலைக்காட்சி நிகழ்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.நிச்சயம் மடிக் கணணி வாங்கிடுவார்.பாராட்டப்பட வேண்டிய விடயம். 

அவர் தொலைக் காட்சியில் முகம் காட்டினார்,முதுகைக் காட்டினார்,துப்பட்டாவை சரியாக போடவில்லை.தலைமுடி தெரிகிறது என்பதெல்லாம் ஒரு சமூகத்தின் பண்பாடற்றவர்களின் ,உளவியல் கோளாறுடையவர்களின் விகிதாசாரத்தை அடையாளப்படுத்தலாம்.அது சமூகத்தின் பொதுப் பண்பாகாது. 

ஆனால் அதற்காக என் சகோதரியை அந்நியவன் அணைத்ததை நியாயப்படுத்த முடியாது. தந்தை ஸ்தானம்,அண்ணன் போல என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லவே இல்லை . அங்கு அவரின் நிர்ப்பந்தம் குறித்து கருத்து கூற  அவரிடத்தில் வாழ்ந்து பார்த்தால் தான் முடியும்.  ஆனால் அது பற்றி எனக்குத் தேவையுமில்லை. 

அவளை பாராட்டலாம்,பாராட்டாமல் வயிறெரியலாம்.இல்லை தூற்றித் துகிலுரியலாம்.எதை செய்தாலும் அத்தனையும் நீரின் மேல் தெரியும் பனிக் கட்டிகள் தான்.அதை உடைத்தாலும் உடைக்காது விட்டாலும்  ஆழத்திலிருக்கும் கெட்டியான பாறை அப்படியே தானிருக்கும். 

இங்கே கருத்து சொல்லும் பலர் மேலுள்ள பாறையைப் பற்றிக் கொண்டது மட்டுமின்றி,அர்த்தமேயற்ற வாத விவாதங்களும்,சவால்கள் மூலம் எமது சமூகத்தின் கல்வியறிவை,பகுத்தறிவை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு பெண் ,அதுவும் நோய் வாய்ப்பட்ட தந்தை .தனது கல்விக்காக லெப்டொப் ஒன்று வாங்க வசதியின்றி மாற்று வழி தேடியிருக்கிறாள்.தனக்கு திறமையிருந்ததால் அதை மூலதனமாக்கியிருக்கிறாள்.
திறமை இல்லை,அழகும் இளமையும்தான் இருக்கிறதென்றால்.... 

இன்று கைதட்டும் எமது கைகள் என்ன செய்யும்?? 

நிர்ப்பந்தம் எனும் பெயரில் அனைத்தையும் நியாயப்படுத்த முடியாது. 

எமது சமூகத்தில் இன்னும் எத்தனையோ ஷுக்ராக்களும் புஷ்ராக்களும் உண்டு.எல்லோரும் லக்ஷபதிக்கு போய் லெப்டொப் வாங்க முடியாது. 

சனிடைசர் வழங்கும் தனவந்தர்களே...
மருத்துவமனை கட்டிக் கொடுக்கும் தனவந்தர்களே...
மாஸ்க் பகிர்ந்தளிக்கும் நல்ல உள்ளங்களே...
பள்ளிவாசலை அலங்கரிக்கும் பக்திமான்களே...
கிணறு தோண்டி சுவரில் பெயர் எழுதும் நிறுவனங்களே...
ரமழானில் பேரீச்சம் பழமும்,துல்ஹஜ்ஜில் இறைச்சியும் வழங்கும் இயக்கங்களே...
பன்சலையை பழுது பார்க்கும் சகவாழ்வு மனிதர்களே... 

ஏன் உங்கள் கண்களுக்கு ஷுக்ராக்கள் தெரியவில்லை? 

மகா சமுத்திரத்தில் அழகாய் தெரியும் பனிக்கட்டியின் அழுகிய கீழ்ப் பாகம் இது.இது பற்றி எப்போது பேசுவோம்? 

எமது சமூகத்தைப் பொறுத்தவரை சில நியமங்கள் இருக்கின்றன... 

வீட்டின் கூரை ஒழுகும் ஏராளம் வீடுகளிருக்கும்.ஆனால் வருடமொருமுறை மினாராக்களை உடைத்துக் கட்டினால் தான் நன்மை கிடைக்கும். 

அடிப்படை வசதியின்றி எத்தனையோ பாடசாலைகளிருக்கும்.ஏதோ ஒரு மருத்துவ உபகரணம் கொடுத்தால் தான் மதிப்பு. 

நீர்க்கட்டணம் செலுத்த வசதியின்றி துண்டிக்கப்பட்ட இணைப்புகளிருக்க, ஏற்கனவே சமுர்தி மூலம் நீரைப் பெற்றவர் வீட்டின் முன்  கிணறு தோண்டினால்  மட்டுமே அதிக நன்மை கிட்டும். 

தந்தையில்லாப் பிள்ளைகளுக்கு உதவ ஆயிரம் பேர்.ஆனால் குடிகாரனுடைய பிள்ளைக்கும் நோயாளியான தந்தை, தாயின் பிள்ளைக்கும் உதவுவதில்லை.
தந்தை விட்டுச் சென்றிருந்தாலும் 
மரண அத்தாட்சிப் பத்திரம் கேட்பார்கள். 

வைத்தியரின் பிள்ளை,அதிபரின் பிள்ளையென்றாலும் மருத்துவம் படிக்கும் பிள்ளைகளை மட்டும் தான் தூக்கிவிடுவார்கள் .Sponsor செய்வார்கள்.
BA,BBA,LLB செய்யும் மாணவர்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. 

மருத்துவமனைகளிற்கு கதிரையும் பேனும் வாங்கிக் கொடுப்பார்கள்.கொழும்பிற்கு க்ளினிக் போக வாகனத்திற்கான பணம் செலுத்த வசதியற்றவர்கள் தெரிவதில்லை.
தேசிய வைத்தியசாலையிலும்,ரிஜ்வே மருத்துவசாலையிலும் உறவொன்றை அனுமதித்து விட்டு மரதானை புகையிரத நிலைய பென்ச்சில் சுருண்டு கிடப்பவனையும் தெரிவதில்லை. 

இப்தாரென்பார்கள், இருபத்தேழு புரியாணி என்பார்கள் .ஆயிரங்கள் கைமாறும்.கடன் பட்டு நொந்து போனவனின் மனதை  ஒரு போதும் அறிவதில்லை. 

ரமழான் வந்தால் அரிசி மூட்டைகள் வீடு வீடாய் போகும்.நிரந்தர நோயாளியின் மாதாந்த மருத்துவ செலவுகளை பொறுப்பெடுக்கத்தான் யாருமில்லை. 

அது போலத்தான் ...
கல்விக்காக உழைக்கிறோம்.சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் முன்னெடுக்கிறோம்,பெண் மருத்துவர்களை உருவாக்குகிறோம் என்ற ஓராயிரம் நிறுவனங்களின் ,அமைப்புக்களின் கண்களிற்கும் இந்த ஷுக்ரா தெரியவில்லை. 

தேவைகளை எல்லோரும் விண்ணப்பித்து சொல்ல மாட்டார்கள் வெட்கத்தால் பதுங்கியுமிருக்கலாம். 

இன்று அவளது வெற்றியை உரிமைக் கொருவோரும் சரி,அவரை தூற்றி தொங்கப் போடுவோரும் சரி..
யார் கண்ணிலும் ஏன் அவள் விழவில்லை ? நாம் திருத்த வேண்டிய புள்ளி ஏன் தென்படவில்லை? 

ஸக்காத் மூலம் ஏழ்மை கலையச் சொன்ன மார்க்கம் இஸ்லாம்.ஆண்டுகள் தோறும் பல லட்சங்கள் ஸக்காத்தாக பகிரப்படுகின்றன.ஆனால் ஏன் ஷுக்ரா கண்ணில் படவில்லை ?
ஸக்காத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறதா? 

விதவைத் தாயின் பிள்ளையென்றால் சகலதும் கொடுப்பவர்கள் ஏன் மிஸ்கீன்களை புறக்கணிக்கிறீர்கள்?? 

ஜுப்பாவும்,தலைப் பாகையும் கட்டிய மத்ரசா மாணவனை அரவணைக்கும் கைகள் ஏன் சீரூடை அணிந்த, நிரந்தர நோயாளித் தந்தையின் பிள்ளையை புறக்கணிக்கின்றன?? 

எமது சமூகத்தில் புழங்கும் பணம் போதும் ஆயிரம் ஷுக்ராக்களுக்கு லெப்டொப் வாங்கிக் கொடுக்க.
அது பற்றிய சரியான தரவுகள்,திட்டமிடல்கள்,தெளிவூட்டல்கள் நடைபெற வேண்டும். 

பனிப் பாறையின் மேல் தெரியும் பகுதியையே பற்றி தொங்கிக் கொண்டிருக்கும் கண்களிற்கு பாறையின் கீழ்ப்பாகம் தெரியாத வரை எமது திட்டங்கள்,அபிலாஷைகள்,லட்சியங்கள் என அத்தனையும் ஏட்டில் மட்டுமே இருக்கும். 

இந்த ஷுக்ரா சோற்றுப் பானையின் ஒரேயொரு அரிசி மட்டுமே.இன்னும் நிறைய ஷுக்ராக்களும்,நூராக்களும்,சலீம்களும்,நுஸ்ரிக்களும் இருக்கிறார்கள்.
அவர்களை தேடி உதவியிருந்தால் லக்ஷபத்தியில் எந்த பெண்ணும் முகம் காட்டியிருக்கும் தேவையிருந்திருக்காது.கலாச்சார காவலர்களின் வாய்க்கும் அவல் கிடைத்திருக்காது. 

"இத்தனை நாள் என்னை தேடாத நீங்கள் இன்று பாராட்டுகிறீர்களா?" என ஷுக்ரா மறைமுகமாக செருப்படியொன்று தந்திருக்கிறாள்.சமூகமாய் தலை குனியாமல் பாராட்டி பெயரெடுக்க முனைகிறோம்.

களைகளை வெட்டி விடுவதால் மட்டும் அவை ஒழிவதில்லை.வேர்கள் அகழப்பட வேண்டும்.
ஷுக்ரா தந்த செருப்படி.. ஷுக்ரா தந்த செருப்படி.. Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.