இலங்கை இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் பெற விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி! - Madawala News Number 1 Tamil website from Srilanka

இலங்கை இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் பெற விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி!


                                    (க.பிரசன்னா)
இலங்கை – ஜப்பானுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.


ஜப்பான் நீதி அமைச்சின் உதவி பிரதியமைச்சர் தலைமையிலான 18 பேரை கொண்ட ஜப்பான் பிரதிநிதிகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவின் தலைமையிலான பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :


2019 ஜூன் 19ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான இவ்வாறு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக தற்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளம் www.slbfe.lk    இன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட ஆற்றல்களைக் கொண்டு தொழில் வாய்ப்புக்காக ஜப்பான் மொழி தேர்ச்சிப் பரீட்சையான JLPT படி 4 (N4 level) வில் சித்தி எய்திருப்பது கட்டாயமாகும். மொழி பரீட்சைக்கு மேலதிகமாக 14 விசேட துறைகளில் கொண்டுள்ள ஆற்றல் மற்றும் அனுபவத்தை கவனத்திற் கொள்ளப்படுவதுடன், தொழில் வாய்ப்புகளுக்காக 18 தொடக்கம் 48 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
இலங்கை இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் பெற விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி! இலங்கை இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் பெற விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி! Reviewed by Madawala News on December 02, 2020 Rating: 5