2900 பில்லியன் ரூபாவுக்கு கடன்களைப் பெற வரவு செலவு திட்டத்தில் யோசனை - Madawala News Number 1 Tamil website from Srilanka

2900 பில்லியன் ரூபாவுக்கு கடன்களைப் பெற வரவு செலவு திட்டத்தில் யோசனைவரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் காலப்பகுதியில்  பொதுமக்கள்

பார்வைக்கூடம் மற்றும் ஊடகவியலாளர் பார்வைக்கூடம் ஆகியன மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், குறித்த காலப்பகுதியில் சபாநாயகருக்கான பகுதியில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மேலும், வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர், நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேநீர் விருந்துபசாரம் இம்முறையும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும், குறித்த தேநீர் விருந்துபசாரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் ஆகியோருக்காக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் காலப்பகுதியில் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விருந்தினர்களை அழைத்துவர முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் நாளை பிற்பகல் 1.40 க்கு வரவு செலவு திட்டம் நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.


அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.


மேலும், எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 5.30 மணிவரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.


இதனையடுத்து எதிர்வரும்  23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம், டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நிறைவடையுமென குறிப்பிடப்பட்டுள்ளது


அத்துடன் அன்றைய தினம் மாலை 05 மணிக்கு வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்  நாடாளுமன்ற செயலாளர் நாயகம்  மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, 2021ஆம் ஆண்டில் அரச சேவைகளுக்கான செலவுகளுக்காக 2 ஆயிரத்து 678 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், 2021ஆம் ஆண்டுக்காக நாட்டிற்குள் அல்லது வெளிநாடுடுகளில் இருந்து 2 ஆயிரத்து 900 பில்லியன் ரூபாவுக்கு உட்பட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2900 பில்லியன் ரூபாவுக்கு கடன்களைப் பெற வரவு செலவு திட்டத்தில் யோசனை 2900 பில்லியன் ரூபாவுக்கு கடன்களைப் பெற வரவு செலவு திட்டத்தில் யோசனை Reviewed by Madawala News on November 16, 2020 Rating: 5