நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கலேவலை அசம்பாவிதம்.. (ஒரு முழுமையான பார்வை)


-  அன்சார் எம்.ஷியாம்-

மரணம் எங்கிருந்து எந்த நேரத்தில் எந்த முகமூடி அணிந்து வரும் என்று அறிந்தவர் எவருமிலர்:

  ஏழை-பணக்காரன், பாமரன்-அறிஞன், இளையோர்-முதியோர் என்ற எந்தப் பாகுபாடுமின்றி இறைவன் விதித்த நேரத்தில், விதித்த பிரகாரம் அப்படியே வந்து அள்ளிப் போட்டுச் சென்றுவிடும்.


"நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் வந்தடையும்; உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!"  என்று அல்-குர்ஆனின்  வசனங்களும் (4.17) இதனையே நமக்கு அடித்துச்  சொல்லுகின்ற  செய்தியாகும்.



மரணம் சொல்லுகின்ற செய்தியின் அழுத்தம், எல்லாப் பொழுதுகளிலும் எம்மோடு வேரூன்றி நின்றுவிடுவதில்லை. பல பொழுதுகளில் காற்றோடு காற்றாய் அது காணாமல் போய்விடுகிறது. மரண வீட்டோடோ அடக்கஸ்த்தலங்களோடோ அல்லது ஓரிரு நாட்களிலிலோ நாமும் மரணம் பற்றிய நமது நினைவுகளும் மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவதே வழமை.


ஆனால் ஒரு சில மரணங்களை அவ்வாறு இலகுவில் மறந்து விட முடிவதில்லை. அன்றாட அலுவல்களில் கரைந்து அந்தத் துயரத்தை ஆற்றிக் கொள்ள ஆற்றல் பெறுவதில்லை. அந்தக் கனதியான சோகத்தை அ‌த்தனை எளிதில் கழற்றி வைக்க இயலுவதில்லை.


அவ்வாறான ஒரு துயரம்- மரணச்சம்பவம்- நினைத்துப் பார்க்கையில் சற்றும் குறையாத ஒரு சுமை, ஆழமாகப் பாதித்த ஒரு செய்தி தான் அண்மையில் கலேவெல பிரதேசத்தில் ரங்வெடியாவ கிராமத்தில் கடந்த 19ம் திகதி திங்கட்கிழமை முழு நாட்டையும் வந்தடைந்த அந்தச் செய்தி:


*ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழைந்தைகள் ஆற்றில் தோண்டப்பட்டிருந்த குழியிலிருந்து சடலமாக மீட்பு" என்ற நாட்டையே உலுக்கிப் போட்ட செய்தி; இது வெறுமனே கண்டும் காணாததும் போல் கடந்து போகும் செய்தியல்ல.


மரணம் தன் செய்தியை மிக அழுத்தமாக பதிந்து விட்டுப் போன ஒரு ஆழ்த்துயர் நிகழ்வு.


இத்துயர்ச் சம்பவம் கேட்டு அதிர்ச்சியுறாத எவரும் இருந்திருக்கமாட்டார்கள். இன மத பேதங்களின்றி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த சோக சம்பவம் அது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழைந்தைகளைப் பலி கொண்ட ஒரு பரிதாபகரமான சோக நிகழ்வு அது.

 

எனவே, இதன் பின்னணியை, அது நமக்குக் கற்றுத் தரும் படிப்பினைகளை, பாடங்களை மற்றும் விபரங்களை சற்று நோக்குவது அவசியமாகிறது.


 குடும்ப விபரம்


தந்தை மர்சூக். விவசாயத்தோடு தொடர்புள்ள- நெல் அரைத்துக் கொடுக்கும் சிறு தொழிலொன்றை மேற்கொண்டு வாழ்வை ஓட்டி வரும் ஒரு சாதாரண தொழிலாளி. தாய் பஸ்மியா: கணவனுக்கு உதவியாகவும் நான்கு குழந்தைகளை பராமரித்தும் வரும் ஒரு வழமையான இல்லத்தரசி. நான்கு பிள்ளைகள்:  முதலாமவர், மகள் மபாசா. தற்போது உயர் தரத்தில் கற்றுக் கொண்டு இருக்கிறார். இர‌ண்டாவது, மகள் மர்வா. வயது பதினைந்து (15) மூ‌ன்றாவது, மகள் மரியம். பன்னிரண்டு(12) வயது. அடுத்தது ஒரே ஒரு மகன் அப்துல் ரஹ்மான் ஏழு (7) வயது தரம் இரண்டில் கற்றுக் கொண்டிருந்தார்.


இச்சம்பவத்தில் பலியானவர்கள் இரண்டாவதும் மூ‌ன்றாவதுமான இரண்டு மகள்களும் இளைய மகன் அப்துல் ரஹ்மானும் ஆகும்.


நடந்தது என்ன? 


சம்பவ தினத்தன்று 'உண்மையாகவே நடந்தது என்ன?'  என்று அகால மரணம் எய்திய குழந்தைகளின் சாச்சா முறைமையிலான மௌலவி பர்ஹான் அவர்கள் விவரிக்கையில், " கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே ஆற்றுக்கு குளிக்கப் போகிறோம் என்று பிள்ளைகள் வாப்பாவிடம் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள். எனது சகோதரர் அனுமதி கொடுக்க மறுத்து வந்திருக்கிறார். சம்பவ தினத்தன்று எப்படியோ தாயிடம் அனுமதியைப் பெற்று ஆற்றுக்குச் சென்று விட்டார்கள். வேறு நாட்களில் பெரியவர் எவராவது துணைக்குச்  செல்வது வழமை. அன்று அவர்கள் மூவருமே சென்றிருக்கிறார்கள். உண்மையிலே அந்த ஆறு ஒன்றும் அவ்வளவு ஆழமான ஒரு ஆறல்ல. முழங்கால் அளவில் கூட நீரில்லாத ஓர் ஆறு தான் அது' என்றார்.


'அவ்வாறாயின் எவ்வாறு நேரில் மூழ்கி இறக்க நேர்ந்தது?' என்று வினவிய பொழுது,

 "ஆற்றின் நடுவில் விவசாயத் தேவை கருதி, நீரைப் பெறும் நோக்கில்- நான்கைந்து அடி அகலமாகவும் சுமார் பதினெட்டு அடியளவில் ஆழமாகவும் தோண்டி வைத்திருந்த குழியில் போய் சிக்கியே சம்பவத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள்" என்று விவரித்தார்.



இவ்வாறு ஒரு குழியை ஆற்றின் நடுவில் தோண்டி வைத்திருந்தவர்கள் கட்டாயமாக அங்கே ஒரு குழி தோண்டப்பட்டிருப்பதற்கான   ஒரு அடையாளத்தையோ, கொடியையோ, ஒரு கயிறையோ அல்லது கம்பையோ நாட்டி, அந்த ஆபத்தை முன்னெச்சரிக்கை படுத்தி இருக்கலாம்.



இது பற்றித் தொடர்ந்தும் விவரிக்கையில்- சம்பவ தினத்தன்று ஆற்றுக்குப் போவதற்கு முன்பு- மூவரும் வீட்டையும் சூழலையும் சுத்தம் செய்து தூய்மைப் படுத்தி இருக்கிறார்கள். இளைய மகன் அப்துல் ரஹ்மான் வீட்டிலுள்ள அனைவரையும் முத்தமிட்டு முத்தமிட்டு சொல்லியிருக்கிறார் - "நாங்கள் சுத்தம் செய்து இருப்பதால் வீட்டுக்கு வருபவர்கள் புல்லிலாவது அமர்ந்து கொள்ளலாம். எனக்கு அவசரம் நான் அவசரமாய்ப் போக வேண்டும்.. அவசரமாய்ப் போக வேண்டும்" என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அது அவரது இறுதி வார்த்தைகளில் மரணத்தைத் தான் குறிப்பிட்டது போல இப்போது நினைக்கிறது" என்று சொல்லிக் கண் கலங்கினார் மௌலவி அவர்கள்.



இது இவ்வாறு இருக்க-  காலையில் ஆற்றுக்குப் போனவர்கள் வீடு திரும்பாமல் இருக்கவே-அவர்களை ஆற்றுப் பக்கத்தில் தேடிப்பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் கழுவிச் சுத்தம் செய்வதற்காக கொண்டு சென்ற ஆடைகள் கழுவிய நிலையில் கரையில் இருந்திருக்கிறது. ஆனால் அவர்களை காணவில்லை. இதனைத் தொடர்ந்து- பொலிஸாரின் உதவியுடன் உறவினர்களும் ஊராரும் ஒருசேர- குறித்த குழியில் நீர் இரைக்கும் ஒரு சில மோட்டார் இயந்திரங்களை இயக்கி, குழியில் தேடிய வேளையில்- ஒருவர் பின் ஒருவராய் அடுக்கடுக்காய் குழியின் உள்ளே சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர்கள் உயிர் பிரிந்து இருந்ததாக வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டது.


சம்பவம் குறித்து பெற்றோர் கருத்து



இது எவரும் வேண்டுமென்றே செய்த ஒரு வேலையல்ல இவ்வாறான ஒரு சம்பவம் நடக்குமென்று நினைத்திருந்தால், குழி தோண்டிய இடத்தில் எவரும் ஒரு அபாய அடையாளத்தை விட்டிருப்பார்கள். இது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ள ஒன்று. இதை ஒரு முஸ்லிம் என்ற வகையில் நாம் பொருந்திக் கொள்ளவதே எமது கடமை. மேலும் குறித்த சம்பவத்தில் நான் நீ என்றில்லாமல் முழு ஊருமே முழுக் கிராமமுமே முன் வந்து எமக்கு எல்லா வகையிலும் தோளோடு தோள் நின்று உதவினார்கள். ஆறுதலாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும் என்றார்.


மூன்று குழந்தைகளை இழந்த தாய்க்கு பெருமானார் (ஸல்) அவர்களின் வாக்கு 

உங்களில் எந்தப் பெண், தனக்கு மரணம் வரும் முன்பாக தன் குழந்தைகளில் மூன்று குழந்தைகளை இழந்து விடுகிறாரோ,  அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அங்கே கூடியிருந்த பெண்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா? என்று கேட்டார்கள். "ஆம், இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்" என்று நபி (ஸல்)  அவர்கள் மூன்று முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஸயீத் (ரலி) நூல்: புஹாரி :7310


பிரதேசவாசிகள் சொன்னவை

இது போன்ற அனர்த்தங்கள் எதிர்காலத்திலும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எமது கிராமங்களுக்கு அண்டிய பிரதேசத்தின் ஊடாக 'வயம்ப எல' என்ற ஒரு பாரிய வேலைத்திட்டம் ஒன்றின் ஆரம்ப கட்ட வேலைகள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டத்தினூடாக குறித்த மாகாணத்திற்கான நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக சொல்லப் படுகிறது. இதன் காரணமாக - கோடை காலங்களில்- இதனை  அண்மித்த கிராமங்களில் நீர் அறவே வற்றிப் போகும் நிலைமை உள்ளது. அதனால், மக்கள் ஆற்றை நோக்கியே நடை போட வேண்டி இருக்கும். எனவே இது போன்ற அனர்த்தங்களுக்கு முகங் கொடுக்க வேண்டி வரலாம் என்றும் மக்கள் தமது கவலையைத் தெரிவித்தனர்.


கிராமத்தவர் வேண்டுகோள் 


மேற்படி   ஆபத்துக்களையும் குறைகளையும் நிவர்த்திக்கும்  பொருட்டு, அரசாங்கமும் இது குறித்த அதிகாரிகளும் கிராமங்களுக்குள் ஆழ் குழாய் கிணறுகளையோ அல்லது குழாய் நீர் வசதிகளையோ நிறுவி, நீர் பிரச்சினையைத் தீர்க்க வழி வகை  செய்யலாம் என்றார்கள்.


பெற்றோர் கவனத்திற்கு

 இது விடுமுறைக் காலம். பிள்ளைகள் குறிப்பாக- கிராமப்புற குழைந்தைகள் காடு-மேடு, வயல்-வரப்பு என்று ஓடி ஆடித் திரிவது ஒன்றும் புதுமை அல்ல. ஆனால், பெற்றோர்கள் சற்று அவதானம் மிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வீடுகளில் பழுதடைந்த நிலையில் காணப்படக் கூடிய 'ப்ளக்'குகள், 'ஸ்விட்சு'கள் பூரணமாக மூடப்படாத நிலையில் காணப்படும்  கொங்கிரீட் பிளேட்டுகள் சரிந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் என்று எல்லாப் பக்கத்திலும் மரணம் தன் வலையை விரித்து வைத்து இருக்கலாம். நாம் படு 'பிஸி'யாக இருந்த போதிலும் நமது குழந்தைகளை இத்தகைய அனர்த்தகளிலிருந்து காத்துக் கொள்ளவதற்கு நாம் இன்னும் அதி கூடிய அக்கறையும் அவதானமும் மிக்கவர்களாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

நன்றி நவமணி

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கலேவலை அசம்பாவிதம்.. (ஒரு முழுமையான பார்வை)  நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கலேவலை அசம்பாவிதம்..  (ஒரு முழுமையான பார்வை) Reviewed by Madawala News on October 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.