ரிஷாத் தலைமறைவான நிலையில் வெள்ளவத்தையில் 2 வாகனங்கள் ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்டன : பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரிஷாத் தலைமறைவான நிலையில் வெள்ளவத்தையில் 2 வாகனங்கள் ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்டன : பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன


   
  (எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்து உரிய நீதிமன்றில் ஆஜர் செய்ய
  நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர்  தப்புள டி லிவேரா. பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய 6 சி.ஐ.டி. குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

எனினும் நேற்று மாலைவரை அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

 இதேவேளை, முன்னாள் அமைச்சரும் தற்போதைய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ள நிலையில்,  அவருக்கு தலைமறைவாகி இருக்க உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில், அவரது மெய்ப் பாதுகாவலராக செயற்பட்ட பொலிஸ் அதிகாரியை சிஐடியினர் கைது செய்துள்ளனர்.


                                                                  கைப்பற்றப்பட்ட வாகனம்
 சிஐடி பிரதானியின் கீழ் இந்த 6 சி.ஐ.டி. குழுக்களும் முன்னாள் அமைச்சர் ரிஷாத்தை தேடிவரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வெள்ளவத்தை பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் அதிகாரியைக் கைது செய்ததாக  பதில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

 முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய  நேற்று முன்தினம் வெள்ளவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த மெய்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


                                                                       கைப்பற்றப்பட்ட வாகனம்
‘பிரபு ஒருவரின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும் அவரும் பொலிஸ் அதிகாரியே.  சந்தேக நபராக தான் பாதுகாப்பு அளிக்கும் பிரபு பெயரிடப்பட்டு தேடப்படும் நிலையில், அவரைக் கைது செய்யும் பொறுப்பு பொலிஸ் உத்தியோகத்தர் என்ற ரீதியில்  மெய்பாதுகாவலருக்கும்  உள்ளது.

 அதனைச் செய்யத் தவறியதால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  கைது செய்யப்பட்டார்.’ என  ரிஷாத்தின் மெய்ப்பாதுகாவலரின் கைது தொடர்பில் பதில் பொலிஸ் பேச்சாளர்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  பொலிஸ் தலைமையகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில்  கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வெள்ளவத்தை பகுதியில் சி.ஐ.டி. அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையின்போது, ரிஷாத் பதியுதீன் பயன்படுத்தியதாக நம்பப்படும் இரு நவீன வாகனங்கள் மீட்கப்பட்டன.  ரேஞ் ரோவர் ரஜ்க ஜீப்  ஒன்றும் எக்ஸியோ ரக கார் ஒன்றுமே  மீட்கப்பட்டன. 

அந்த வாகனங்களிலிருந்து  இரு கைத்துப்பாக்கிகள், 2 மெகசின்கள் மர்றும் 48 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.  அது தொடர்பில் அவ்வாகனங்களின் சாரதிகளாக செயற்பட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த 56,45 வயதுடைய இருவரை சிஐடியினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆயுதங்கள் யாருக்கு சொந்தமானவை, எவ்வாறு அந்த வாகனங்களுக்குள் வந்தன உள்ளிட்ட முழுமையான விசாரணையை   சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர். ‘ என அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதனிடையே, நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12,000  இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில்  சட்ட மா அதிபரால் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்ட,  குறித்த திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோ ரஞ்சனை சிஐடி நேற்று கைது செய்துள்ளது. 

அரச பண மோசடி, பொதுச் சொத்து துஷ்பிரயோகம், ஜனாதிபதி தேர்தல் சட்டமீறல் குறித்தே அவரை நேற்றைய தினம் கிருலப்பனை பகுதியில் வைத்து சி.ஐ.டி.யின் சிறப்புக்குழு  கைது செய்ததாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் நேற்று மாலை, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

 இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர்   சம்சுதீன் மொஹம்மட்  யசீன் ஆகியோரை  கைது செய்வதற்கு சி.ஐ.டி.யினர் தேடி வருகின்றனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர்   சம்சுதீன் மொஹம்மட்  யசீன்  ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தர்வு பிறப்பித்துள்ளது. சி.ஐ.டி.யினர் நேற்று மாலை கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயிடம் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்தே, நீதிவான்  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ரிஷாத் தலைமறைவான நிலையில் வெள்ளவத்தையில் 2 வாகனங்கள் ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்டன : பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  ரிஷாத் தலைமறைவான நிலையில் வெள்ளவத்தையில் 2 வாகனங்கள் ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்டன :  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன Reviewed by Madawala News on October 15, 2020 Rating: 5