நான் UNPயை திருமணம் முடிக்கவில்லை - சிறிகொத்தவில் குடும்பம் நடத்தவும் இல்லை! - Madawala News Number 1 Tamil website from Srilanka

நான் UNPயை திருமணம் முடிக்கவில்லை - சிறிகொத்தவில் குடும்பம் நடத்தவும் இல்லை!நான் ஐக்கிய தேசியக் கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தவில் வாழவும் இல்லை. எனவே, என்னை அக்கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் துளியளவும் கவலை இல்லை. ஏனெனில் மலையக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 


பதுளை, லுணுகலை ஹொப்டன் பகுதியில் இன்று (01) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பதுளையில் மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கு பல சூழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வாக்குகளை சிதறடிப்பதற்காகவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. 


எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்து என்னையும், அண்ணன் அரவிந்தகுமாரையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். 6 ஆம் திகதியாகும் போது பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பது தெரியவரும். 


எங்களுக்கு எல்லா பக்கங்களிலும் சவால்கள் உள்ளன. நானும், அரவிந்தகுமாருமே இலக்கு வைக்கப்பட்டுள்ளோம். ஆனாலும் மக்கள் எமது பக்கம் இருப்பதால் சவால்களை தாண்டி சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 


கடந்த ஆட்சியின் போது பதுளை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால் கோடிக் கணக்கான நிதி திறைசேரிக்கு திரும்பி சென்றது. வருகின்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, புதிய ஆட்சி அமைத்த பின்னர் கைவிடப்பட்ட திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம். 


ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, நெருக்கடிகள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றி பெற்றிருப்பார். ஆனால், ரணிலும் மத்தியவங்கி கொள்ளையர்களும் ராஜபக்ஷக்களுக்கு வக்காளத்து வாங்கியதால் சஜித்துக்கு தோல்வியடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்மை கட்சியைவிட்டு நீக்கினாலும் பரவாயில்லை, மக்கள் எம்முடன் இருக்கும்வரை எவ்வித கவலையும் இல்லை எனவும் அவர தெரிவிக்கப்பட்டுள்ளது. 


-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

நான் UNPயை திருமணம் முடிக்கவில்லை - சிறிகொத்தவில் குடும்பம் நடத்தவும் இல்லை! நான் UNPயை திருமணம் முடிக்கவில்லை - சிறிகொத்தவில் குடும்பம் நடத்தவும் இல்லை! Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5