நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம்
நேர்காணல்:- ராம்

நாம் கூட்டணியாகவும், தனித்துவமாகவும் தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றோம். சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் எம்முடைய கூட்டணியிலேயே உள்ளன. அந்த அடிப்படையில் நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம். அது புது யுகமாற்றத்திற்கான அங்கீகாரமாகும்  என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.


அந்தச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,


கேள்வி:- பலம்மிக்க தேசிய கட்சிகளுடன் கூட்டணியமைப்பதை வழமையாகக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவிலிருந்து பிளவுபட்டிருக்கும் சஜித் தரப்புடன் இணைந்து கொண்டது ஏன்?


பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தினுடைய பலவீனம் தொடர்ச்சியாக உணரப்பட்டு வருவதன் காரணமாக உள்ளக மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற பாரிய அழுத்தம் உருவானது. ஐ.தே.க. தலைமையின் கீழ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்ற கையறுநிலையை பங்காளிக் கட்சிகளும் உணர்ந்தன. அதுமட்டுமன்றி ஐ.தே.கவினுள் காணப்பட்ட முரண்பாடுகள், கேள்விக்குறியான உட்கட்சி ஜனநாயகம் என்பனவற்றின் பக்கவிளைவுகளையும் நாம் அனுபவிக்க நேர்ந்தது. ஐ.தே.கவில் மாற்றுத்தலைமையொன்று உருவாகாதவிடத்து தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே நீடிக்கும் பேராபத்தும் உணரப்பட்டது.


இவற்றுக்கெல்லாம் அப்பால் ஐ.தே.கவின் ஆதரவுத்தளத்தில் பெரும்பான்மையானவர்கள் சஜித்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், சுயலாப அரசுக்காக செயற்படும் ஒரு கும்பலின் கைதியாக ஐ.தே.கவின் தலைமைத்துவம் இருந்து வந்தது.


அதுமட்டுமன்றி சிங்கள பெரும்பான்மையிடத்தில் ஐ.தே.கவுக்கு இருந்த ஆதரவுத்தளத்தை வீழ்ச்சியடையாது பாதுகாக்க வேண்டியது முக்கியமானது என்பதை பிரயோக அரசியலின் யதார்த்தத்தைப் புரிந்தவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அந்தவகையிலேயே ஏற்படப்போகும் யுகமாற்றத்தில் இணைந்து கொண்டோம்.


கேள்வி:- இளந்தலைமையினரிடம் தலைமைத்துவத்தைக் கையளிக்கும் விடயத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள்?


பதில்:- நாம் பங்கேற்றுள்ள கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அடுத்த தலைலைமுறைக்கான தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார். இந்த நிலைமையானது எமது கூட்டணிக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கு விதிவிலக்கல்ல.


கேள்வி:- புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட, நல்லாட்சியை இலக்காகக் கொண்ட கூட்டரசின் செயற்றிறன் வீச்சு தனிக்கட்சி ஆட்சியை விடவும் குறைவாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?


பதில்:- இத்தகைய விமர்சனங்கள் யதார்த்தத்தை உள்வாங்கியதாக இல்லை. எதிரிகளின் விமர்சனம் எவ்வாறாக இருந்தாலும் கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின்போதும் எதிர்பாராத சவால்களின்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றது. முஸ்லிம் மக்களுக்கான அனைத்துப் பாராளுன்ற உறுப்பினர்களையும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைத்துச் செயற்பட்டிருக்கின்றது. கணிசமான அபிவிருத்திகளையும் மேற்கொண்டிருக்கின்றது. அதற்கு பெரிய பட்டியலொன்றையே இடமுடியும்.


மு.கா. அரசுடன் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, முஸ்லிம் மக்களின் ஆளும் கட்சி என்ற வகிபாகத்தை முழுமையாக ஏற்றுச் செயற்பட்டுள்ளது. தற்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.


கேள்வி:- கடந்த ஏழு மாதங்களாக எதிர்க்கட்சி வகிபாகத்தைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றது?


பதில்:- பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் இருந்தபோதும் அரசியல் நாகரிகத்தின்பால் ஜனாதிபதித்  தேர்தல் பின்னடைவுகளால் ஆட்சி அதிகாரத்தை நாம் எதிர்த்தரப்பாக எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர்களிடத்தில் வழங்கினோம். ஏற்கனவே பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் தற்போதைய ஆட்சியாளர்களே ஜனநாயகத்துக்கு முரணாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார்கள்.


ஆகவே, அவ்விதமான பிற்போக்குத்தனமான, அடாவடித்தனமான சூழல் மீண்டும் உருவாகக் கூடாது என்ற தூரநோக்கின் காரணமாகவே நாம் ஆட்சி அதிகாரங்களைக் கையளித்தோம். அத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டுதான் பாராளுமன்றத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமும் எமக்குக் கிடையாது.


மேலும் இந்த ஏழு மாத காலத்தில் நாம் பாராளுமன்ற அதிகாரங்களைக் கைப்பற்றவல்ல பலமான அணியை உருவாக்கி இருக்கின்றோம்.

நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம் நாம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்துக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வோம் Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5