அம்பாறையில் பலரும் சதித் திட்டங்களைத் தீட்டி தனியாக போட்டியிட முன்வந்துள்ளனர்.. - Madawala News Number 1 Tamil website from Srilanka

அம்பாறையில் பலரும் சதித் திட்டங்களைத் தீட்டி தனியாக போட்டியிட முன்வந்துள்ளனர்..அம்பாறை மாவட்டத்தில் சிங்களப் பெரும்பான்மை பிரதேசங்களை
 விட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள இரண்டு எதிர் அணிகளையும் தோற்கடித்தாக வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஞாயிறன்று சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கட்சித் தலைவர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் மத்திய முகாமில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பாரிய பங்களிப்பை செய்த பிரதேசமாகும். குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை பலரும் சதித் திட்டங்களைத் தீட்டி தனியாக போட்டியிட முன்வந்துள்ள போதிலும், சிங்களப் பிரதேசங்களை விட முஸ்லிம் பிரதேசங்ளில் உள்ள இரண்டு எதிரணிகளையும் நாம் தோற்கடித்தாக வேண்டும்.

எங்களுக்கு எதிராக இங்கு களமிறங்கியுள்ள இருவரும் இந்த முஸ்லிம் காங்கிரஸினூடாக அரசியல் முகவரியை பெற்றவர்கள் தான்.

நாங்கள் எங்களது வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் ஆறு வேட்பாளர்களை களமிறங்கியிருப்பது பற்றி யாரும் சஞ்சலப்படத் தேவையில்லை. சிங்கள பெரும்பான்மை பிரதேசங்களில் வாக்குகள் சிதறுவதால் எங்களது வேட்பாளர்கள் நால்வர் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எமது வேட்பாளர்களில் எவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என தலைமைத்துவம் கூறமாட்டாது. நீங்கள் யார் யாரை மிகவும் தகுதியானவர்களாக காண்கின்றீர்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை அளியுங்கள். இந்த விடயத்தில் எந்த நபரும் வாக்காளர்களை வற்புறுத்த முடியாது.

தலையிருக்க வாலாட முடியாது. அவ்வாறே தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் ஆகவும் இடமளிக்க மாட்டோம். தலைமைத்துவக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றேயாகுவோம் என்ற அசையாத நம்பிக்கை இருக்க வேண்டும் என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றும் போது,

அம்பாறை மாவட்டத்தில் ஆளும் தரப்பின் இனவாதமும், கருணாவின் இனவாதமும், ஞானசாரவின் இனவாதமும் தலைவிரித்தாடுகின்றன.
கருணாவின் இனவாதக் கோரமுகம் அம்பாறையில் தலைகாட்டியுள்ளது. இது கல்முனைக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் மிகவும் ஆபத்தானது. தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு அவர் முயற்சித்து வருகின்றார்.

பெரும்பான்மை இனவாதிகளும், கருணா போன்ற இனவாதிகளும், முஸ்லிம்களின் முதுகெலும்பான முஸ்லிம் காங்கிரஸை உடைத்து எறிவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், முன்னாள் பிரதியமைச்சர் பைசல் காஸிம், அப்துல் வாசித் ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
அம்பாறையில் பலரும் சதித் திட்டங்களைத் தீட்டி தனியாக போட்டியிட முன்வந்துள்ளனர்.. அம்பாறையில் பலரும் சதித் திட்டங்களைத் தீட்டி தனியாக போட்டியிட முன்வந்துள்ளனர்..  Reviewed by Madawala News on August 02, 2020 Rating: 5