சமூகங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திலே நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம்.


2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நிறைவுற்றிருக்கின்றது. இலங்கை மக்கள் தங்களது ஜனநாயகக்
கடமையை அமைதியாக நிறைவேற்றியிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்திலே வடக்கு மாகாணத்திலே எங்களுடைய அழைப்பையேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்த அனைத்து வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேபோன்று கொவிட் 19 அசாதாரண சூழ்நிலைகளிலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து நாடளாவியரீதியில் வாக்களிப்பில் பங்கேற்ற அனைத்து மக்களுக்கும் நாம் நன்றிகூறக்கடமைப்பட்டிருக்கின்றோம்; தேர்தல் ஒழுங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்திய அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு,  அரசியல் கட்சிகள், தேர்தல் திணைக்களம்இ சுகாதார உத்தியோகத்தர்கள், தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள், பொலிஸார், பாதுகாப்புத்தரப்பினர், கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் நாம் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கின்றோம்.

வடக்குக் கிழக்கு உள்ளடங்கலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகள் சார்பிலே தமிழ்பேசும் மக்கள் சார்பிலே பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே திகழப்போகின்றது என்பது திண்ணம். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகவும்இ அவர்களுக்கான நீதிக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் குரல்கொடுக்கும் என்பது இங்கு எமக்கிருக்கும் ஒரே நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.

இருந்தபோதிலும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி தொடர்பிலே சகோதர சமூகமாக எமது ஒரு சில அவதானங்களை இங்கு பகிர்ந்துகொள்வது சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

1949 முதல் 1977 வரையான இலங்கையின் அரசியலில் குறிப்பாக வடக்குக் கிழக்கு மக்கள் மத அடையாளங்களின் அடிப்படைகளில் அல்லது சமூக அடையாளங்களின் அடிப்படைகளில் தம்மை முன்னிறுத்தவில்லை. மாறாக அவர்கள் தம்மை ஒரு பிராந்திய அல்லது தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்தோடே முன்னிறுத்தினார்கள். ஆனால் 1980களின் பின்னர் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக  தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டப்பாதையில் ஆயுதக்குழுக்களின் தோற்றம்; வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தின. இந்த நிலை 2001ம் ஆண்டுவரை நீடித்தது. 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் விடயத்தில் தாம் இதுவரை முன்னெடுத்த நிலைப்பாடுகள் தவறு என்று உணரத்தொடங்கியதோடு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அரவணைக்கும் போக்கினைக் கடைப்பிடித்தார்கள். இதன் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவமொன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் முஸ்லிம் சமூக நல்லிணக்கம் சார்ந்து தொடக்கப்பட்ட முயற்சிகளின் அடுத்த கட்டமாக 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலே முஸ்லிம் பிரதிநிதிகளும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டார்கள். 2013ம் ஆண்டு வடக்கு மாகாணசபையிலே ஒரு முஸ்லிம் நியமன உறுப்புரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறிப்பாக வடக்கு முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்த அரசியல் முன்னெடுப்புக்களின் ஆர்வம் செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலே வடக்கு முஸ்லிம் மக்கள் கணிசமான அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ரீதியான நிலைப்பாடுகளை ஆதரித்தார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலே நேரடியாகக் களமிறங்கினார்கள் வெற்றியீட்டினார்கள். அதன் தொடர்ச்சியாகவே 2020 பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கியதாக முஸ்லிம் மக்களின் ஆதரவும் நோக்கப்படுதல் வேண்டும்.

ஒரு அரசியல் அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் எதிர்பார்த்த 20 ஆசனங்கள் என்ற எண்ணிக்கையை அடையாவிட்டாலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் கணிசமான வெற்றியைத் தமதாக்கியிருக்கின்றமை வரவேற்கப்படவேண்டியதே. இருந்தபோதிலும் மேற்படி பின்னடைவிற்கான காரணிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழமான மீள்வாசிப்புக்களை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.  தமிழ்த் தேசியப் போராட்டத்தை அறவழியில் முன்னகர்த்துதல், பிரிபடாத ஒரு நாட்டுக்குள்ளேயே சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்தல், பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் மக்கள் நம்பிக்கையோடு அணிதிரளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலே பாராளுமன்றத்திற்குத் தேர்வாகியிருக்கின்ற அனைத்து புதிய உறுப்பினர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.

சமூகங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திலே நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டம்
வடக்கு மாகாணம் 
சமூகங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திலே நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம். சமூகங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திலே நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம். Reviewed by Madawala News on August 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.