இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின் “ஈதுழ் அழ்ஹா” பெருநாள் வாழ்த்துக்கள்.


-- அமைச்சர் ரவூப் ஹக்கீம் ---
இலங்கை முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து
கொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில், எத்தகைய சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்நோக்குகின்ற திராணியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்க வேண்டுமென இந்த “ஈதுழ்;அழ்ஹா” பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சோதனைகளையும், வேதனைகளையும் சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இறைதூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் தியாகத்துடன் சகிப்புதன்மையின் சிறப்பையும் அதிகம் வலியுறுத்துகின்றது.


இலங்கையை பொறுத்தவரை இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. ஆட்சிகள் மாறினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான செயல்பாடுகள்; தொடர்ந்தும் நீடிப்பது துக்ககரமானதாகும். இத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சியில் உரிய பங்களிப்பை செய்கின்ற அதே வேளையில், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஒத்துழைத்து வருகின்றனர்.


உலகில் பொதுவாக இஸ்லாத்தின் எழுச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள வெறுப்பும் அச்ச உணர்வும் அதிகரித்துள்ளதால் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முறியடித்து அல்லாஹ்வின் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலைபெற இந்த நன்னாளில் பிரார்த்திப்போமாக.
ஈத் முபாரக்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!
இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை..!

தியாகத் திருநாளின் படிப்பினைகளில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இலக்குகள் வெற்றிகொள்ளப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.



புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



“இறைதூதர் இப்றாஹிம் நபியின் தியாகத்தை, இறைவன் முழுச் சமூகத்திற்கும் மார்க்கமாக்கியுள்ளதாக இஸ்லாம் போதிக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு தமது அருமை மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இறைதூதர் இப்றாஹிம் நபியின் துணிச்சல் மிக்க செயல்களில், எமக்குப் பல படிப்பினைகள் உள்ளன.



சத்தியத்துக்கு எதிரான சக்திகளுக்கு அடிபணியாத இலட்சியத்தையே அவரின் துணிச்சல்கள் காட்டுகின்றன. தீங்குகளை எதிர்த்துப் பணியாற்றி, வெற்றி கண்ட இறைதூதர், இறுதியில் சத்தியத்தை நிலைக்கச் செய்தார். இதேபோன்றுதான், இன்று முஸ்லிம்களும் ஒரு சத்திய இலட்சியத்தைச் சாதிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.



சாத்வீகச் சமூகத்தவரான முஸ்லிம்களை, பயங்கரவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகள் தோற்க்கடிக்கப்பட வேண்டும். இதில் எமக்கு இரண்டு மனநிலைகள் கிடையாது. சகோதரத்துவத்தைப் போதிக்கும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற எங்களையே, இந்த இனவாத சக்திகள் பயங்கரவாதிகள் என்கின்றன. அன்பு, கருணை, மனிதாபிமானத்துக்கு கட்டுண்ட முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.



ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இதை நிரூபித்து வருகின்றனர். எனவே, அரசியலுக்காக எம்மை நோக்கி நீட்டப்படும் கை விலங்குகளை நாம் தகர்த்தெறிய வேண்டும். இதற்காக எந்தத் தியாகங்களைச் செய்யவும் நாம் தயார்.



கொரோனாவின் கொடூரத்தால் எமது வணக்க வழிபாடுகளும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நாம் வாழ நேரிட்டுள்ளது. இதனால் புனித ஹஜ்ஜூக் கடமைக்குச் செல்லவும் இயலாது போயுள்ளது. ஏற்கனவே, இதற்காக எண்ணம் வைத்தோர், இந்தப் புனிதப் பயணத்துக்காகத் தயார்படுத்தி வைத்த பணத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தொழில் இழந்து,  வருமானம் முடங்கிய நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்போருக்கு வழங்குவதும் பெரும் பாக்கியமாகவே கருதப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் எண்ணங்களை அறிந்தவனாக உள்ளான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனித குலத்தவர் மனங்களில் தியாக உணர்வு  தளிர் விடட்டும்…!
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம் அதாஉல்லா..

மகத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை,
நம் நாட்டு உடன்பிறப்புகளும், உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம் உம்மத்துக்களும், விஷேடமாக அசாதாரன சூழ்நிலை காரணமாக நாட்டுக்கு வந்து தத்தமது குடும்பங்களுடன்  கொண்டாட  முடியாமல் வெளிநாடுகளில் சிக்குன்டு  தியாக உணர்வுகளோடு  இன்று பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அவர்கள்  எல்லோருக்குமாக எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் துணிச்சல்மிக்க தியாகம்தான் சத்தியத்தை இவ்வுலகில் நிலைக்க வைத்துள்ளது. அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமைகளில் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் எவ்விடயமானாலும் இலட்சியத்துடன்தான் இயங்க வேண்டும்.


இந்த படிப்பினைகள் இலட்சியத் தூதர் இப்றாஹீம் நபியின் வாழ்க்கையோடு ஒட்டியிருந்தன. அவரது தியாகம் உலகுள்ளவரை நினைவு கூறப்படுவதும் இதற்காகத்தான்.

படிப்பினைகளுக்காக மட்டும் இப்றாஹீம் நபியின் வாழ்க்கையைக் கொள்ளாது, நம் வாழ்வியல் நடைமுறைகளிலும் முஸ்லிம்கள் இதைக் கடைப்பிடிப்பது அவசியமாகின்றது.  ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் சகலரது நேரிய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற நான் பிராத்திக்கிறேன்.
இறைத்தூதர் இப்றாஹீம் நபியின் தியாகங்களால் கட்டிக் காக்கப்பட்ட இஸ்லாம் சகலருக்கும் எடுத்துக்காட்டான வாழ்க்கை வழி முறையாகவே உள்ளது. இந்த வழி முறைகளில் சமூக ஐக்கியம், சகோதரத்துவம், மற்றும் புரிந்துணர்வுகளே முன்னிலை வகிக்கின்றன.


இவ்வாறான சிந்தனைகளைத்தான், தேசிய காங்கிரஸ் கொள்கையாகக் கொண்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் சிந்தனைகள்தான் எமது சமூகத்தைப் பாதுகாக்கும். விஷேடமாக எமது இளம் சமூதாயத்தினர் தூர நோக்கோடு உணர்ச்சியூட்டப்படாமல் வழிகாட்டப்படல் காலத்தின் தேவையாகவும் உள்ளது.

இதற்காக கொள்கை, கோட்பாடுகள் தவிர்த்து மார்க்க அறிஞர்கள், புத்தி ஜீவிகள் பாடுபட வேண்டும் .

 காதர் மஸ்தான். 
****************************************
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை உலகெங்கும் கொண்டாடும்    அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில்  புளகாங்கிதம் கொள்கிறேன்.
இந்தத் தியாகத் திருநாளில் எம்மனைவர் மீதும் இறையருள் பொழியட்டுமாக.
இவ்வாறு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கெளரவ  காதர் மஸ்தான் அவர்கள்  விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது...

எம்மை கடந்து சென்ற புனித ரமழான் பெருநாள் கொண்டாட்டங்களை போல் இந்த ஹஜ் பெருநாளையும் அமைதியான முறையில் ஆரவாரமின்றி அமைதியாக அனுஷ்டிக்கும் படி உங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு இறைத் தூதரின் வாழ்வில் நடந்த தியாகத்தினை, வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இந்த ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.

இறை நம்பிக்கை
அன்பு,இரக்கம்,சமத்துவம் ஆகிய உயர்குணங்களை புனித ஹஜ் பெருநாள்  ஒவ்வொரு வருடமும் எமக்கும், உலகிற்கும் போதித்துச் செல்கிறது.
இன்றைய காலகட்டத்தில் கொரோணா தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது.

அந்த அபாயம்  எம்மை விட்டு முழுவதுமாக நீங்க பிரார்த்திப்பதுடன்  சுகாதாரப்பிரிவினரின் ஆலோசனைகளை இயன்றளவு பின்பற்றுமாறும் கூடியளவு சமூக இடைவெளிகளை பேணி நடப்பதுடன் இயன்றளவு வீடுகளில் தங்கியிருந்து அமல்களில் ஈடுபடுமாறும் உங்களை வினயமாக கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் எதிர்வரும் தேர்தல் தினத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பில் அனைவரும் கலந்து கொள்ளும்படியும் நீதி நேர்மையான ஆட்சி நாட்டில் மலர பிரார்த்திக்குமாறும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
கெளரவ அல்ஹாஜ் காதர் மஸ்தான்.

--------------------
 - அல்ஹாஜ் - ஹாஷிம் உமர் 
இறைவனுக்காக தியாகம் செய்து
நற்கூலியை பெற்றுக்கொள்வோம்

இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுகூரும்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை இன்று கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகையடைகிறேன் எனத் தெரிவித்துள்ள   டவர் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர்  ஹாஷிம் உமர்,இன்றைய தினம் வீண் களியாட்டங்களை தவிர்த்து நல் அமல்களில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  அவர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தியாகத்தின் உச்ச நிலையை முழு  உலகுக்கும் உணர்த்துவதே  குர்பானின் நோக்கமாகும். இக்குர்பானை நாம் நிறைவேற்றுகின்ற போது மிகவும் கவனமாக அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும்.

ஹஜ் பெருநாளின் தார்ப்பரியம் தியாகத்திலேயே தங்கியுள்ளது.  எனவே நாங்கள் எமது வாழ்க்கையிலும் தியாகங்கள் பலவற்றை செய்ய வேண்டியுள்ளது.எமது தியாகங்கள் இறைவனுக்காக செய்யப்படுபவையாக இருக்கும்போதுதான் நாம் இறைவனின் நற்கூலியை பெறமுடியும். ஆகவே, வசதிபடைத்தவர்கள் இவ்விடயத்தை கருத்திற்கொண்டு தமது  பணத்தை, செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு, வாரி வழங்க வேண்டும். அவர்களின் துயர் நீக்க முடியுமானால் அந்த மகிழ்ச்சி எமது பெருநாள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

-------------------

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை இப்ராஹிம் நபியின் தியாகங்களில் உணர முடியும்...!

ஹஜ்ஜின் தியாகங்கள், சமூகப் பொறுப்புக்களுக்கான கடமைகளை உணர்த்துவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.


புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகப் பயங்கரமான சூழலில் வாழ்ந்த நாம், இன்று ஓரளவு அச்சம் நீங்கிய சூழலில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். இதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் வாழ்க்கை, தியாகம், அவரது துணிச்சல்கள் அனைத்தும், சமூக வாழ்வின் இலட்சியங்களுக்கு எடுத்துக்காட்டு.


அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து, தமது மகனையே பலியிடத் துணிந்தமை, இறைவனின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான மிகப் பெரிய துணிச்சலையே உணர்த்துகிறது. தமக்கென்று வருகின்றபோது, பின்னர் அது சமூகமாக மாறிவிடும். இதனையே இறைதூதர் இப்றாஹிம் எடுத்துக்காட்டியிருந்தார்.

தமது மகனையே பலியிடத் துணிந்த வரலாற்றில், எமக்கான படிப்பினைகள் பல உள்ளன. சமூகத்துக்கான பணிகளை நிறைவேற்றுவதற்கு எந்தப் பெறுமதிகளும் தடையாகக் கூடாது. எந்தக் கடமைகள், வேலைகளானாலும் இலட்சியங்கள் முக்கியமானவை. எனவேதான், இன்று பல தடைகளை எதிர்கொண்டுள்ள முஸ்லிம்களும் தியாகங்களுக்குத் தயாராக நேரிட்டுள்ளன.

சமூகத்துக்கென்று வருகின்றபோது, தியாக சிந்தனையில் நாம் ஒன்றுபட வேண்டும். ஆட்சி, அதிகாரங்களில் ஒட்டிக்கொண்டுதான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. தேவை ஏற்பட்டால் பட்டம், பதவிகளைத் தியாகம் செய்தேனும், சமூக இலட்சியத்தை வெல்ல வைக்க வேண்டும். இதைத்தான் ஹஜ்ஜூடைய வணக்கம் எமக்கு உணர்த்துகிறது.

சமூகக் கடமையைக் கொண்டாடும் நாம், இன்று எமது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள தீங்குகளைத் துடைத்தெறிய, இலட்சிய யாத்திரைக்குத் தயாராகும் நிலைமை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு -

தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி விடுக்கும் வாழ்த்துச் செய்தி

கொவிட் 19 வைரஸ் பரவல் முழு உலகையும் ஒரு வகை பீதிக்குள் ஆழ்த்தி மனித சமூகத்தை சோதனைக்குட்படுத்தியிருக்கும் நிலையில் இம்முறை தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாளை சந்திக்கின்றோம்.

"அச்சமற்ற நாடு; முன்மாதிரிமிக்க முஸ்லிம் சமூகம்” எனும் இலட்சியத்தை தன் தோளில் சுமந்து தனது குடும்பத்தினரையும் அந்த இலட்சியத்துக்காக வாழப் பயிற்றுவித்த இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் நேரிய வாழ்வு, அயராத உழைப்பு, அர்ப்பணங்கள் என்பவற்றை நினைவுகூர்ந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் தினமே ஹஜ்ஜுப் பெருநாள் தினமாகும்.

ஒரு நாடு அச்சமும் பஞ்சமும் அற்ற சுபிட்சமான நாடாக மிளிர்கின்றபோதுதான் அங்கு வாழும் சமூகங்களின் ஆன்மிக செயற்பாடுகள் மேம்பாடடையும்; பண்பாடுகள் எழுச்சியுறும் என்ற நியதியைப் புரிந்து கொண்டு முஸ்லிம்கள் தமது நம்பிக்கைக் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் பற்றி கரிசனை செலுத்துவதைப் போன்றே தாம் வாழும் நாட்டின் அமைதி பற்றியும் சாந்தி, சமாதானம், அதன் பாதுகாப்பு, சுபிட்சம் குறித்தும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
"இறைவா (எனது) இந்த நாட்டை அமைதிமிக்க நாடாக ஆக்கி நாட்டு மக்களுக்கு உணவளிப்பாயாக!” என்ற இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பிரார்த்தனை இதனையே பறைசாற்றுகின்றது.
அறிவியல் வீழ்ச்சி, ஒழுக்க வீழ்ச்சி, சுகாதாரக் குறைபாடு, உடல்- உள நோய்கள், அரசியல் ஒழுங்கீனங்கள், இலஞ்சம், ஊழல் முதலானவற்றுக்கு இறைவனிடம் பதில் கூற வேண்டும் எனும் அச்சமின்மை மூலகாரணமாக இருப்பது போல 
அச்சமும் வறுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே அச்சமற்ற, பாதுகாப்பான, பொருளாதார வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு பங்களிப்பதும் அவற்றுக்கு முன்னுரிமை வழங்குவதும் முஸ்லிம்களாகிய எமது தலையாய பொறுப்பாகும் என்பதை உணர்ந்து செயற்பட இச்சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூணுவோம்.
இந்நன்னாளில் உலகளாவிய ரீதியில், குறிப்பாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளும்  சோதனைகளும் நீங்கி எல்லா இன மக்களும் ஆரோக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழவும் வருங்காலம் இருள் நீங்கி ஒளிமயமாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன். இதயத்தின் ஆழத்திலிருந்து இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

*அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி*
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநர்
ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ் பல படிப்பினைகளைக் கொண்ட ஒரு வணக்கமாகும். வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித ஹஜ்ஜை நிறைவேற்றியிருத்தல் அவசியம். இறை தூதர் இப்றாஹீம் நபியின் அளப்பரிய தியாகங்களை நினைவு கூர்வதற்காகக் கடமையாக்கப்பட்ட ஹஜ்ஜின் வணக்க வழிபாடுகளில், அர்த்தம் நிறைந்த பல வாழ்வியல் படிப்பினைகளும் உள்ளன.

பிள்ளை வளர்ப்பு, தந்தை மற்றும் தனயன் உறவுகளிலுள்ள மரியாதை உணர்வுகள், அல்லாஹ்வுக்காக எதையுமே செய்யத் துணியும் தியாகங்களைத்தான் ஹஜ் வணக்கம் எமக்குப் போதிக்கிறது. உலகியல் ஆதாயங்களுக்காக எவற்றையெல்லாம் செய்யத் துணியும் இன்றைய காலங்களில், அல்லாஹ்வுக்காக மட்டும், அவனுடைய திருப்திக்காக மட்டும் தனது வாழ்நாளையும் அர்ப்பணித்து, மகனையும் அறுத்துப் பலியிடத் துணிந்த இறைதூதர் இப்றாஹீம் நபியின் சிந்தனைகள் என்றும் நினைவூட்டப்படும்.

அமைதியிழந்து தவிக்கும் இன்றைய உலகம் சமாதானக் காற்றைச் சுவாசிக்க, இறைதூதர் இப்றாஹீம் நபியின் பொறுமை, நிதானம், தியாகங்களைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அரசியலுக்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் அற்பத்தனமான அரசியல் கலாசாரத்தை ஒழிப்பதில்தான், சமூகங்களிடையே நிதானத்தை ஏற்படுத்த முடியும். பொறுமையிழந்து எடுக்கப்படும் எந்த முடிவுகளாலும் நிதானமான சமூகத்தை உருவாக்க முடியாது. எமது நாட்டின் கடந்தகால வரலாறுகள், இவற்றையே இன்று உணர்த்தி நிற்கின்றன.

உலகையே சுருட்டிப் பெட்டிப்பாம்பாக முடக்கி வைத்துள்ள கொரோனா வைரஸின் கொடிய தாக்கத்தால், ஹஜ் கடமைக்காகச் செல்ல முடியாத சூழலில் நாம் வாழ்கிறோம். எனினும், ஹஜ்ஜின் தாற்பரியங்களை உணர்ந்து நாம் செயற்படுவது சிறந்தது.

ஹஜ் பெருநாளைக் கொண்டாடும்  இலங்கை வாழ்  அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு ஏனைய சகோதர மக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழுமாறும் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுகின்றேன்...
---------------------

எனதன்பின் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்
இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் -இம்ரான் மகரூப்

“புனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் என் அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்”என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை வேட்பாளருமான இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெளிநாடுகளிலும் தாய்நாட்டிலும் ஈதுல் அழ்ஹா ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் என் அன்பின் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் மழை பொழிய வேண்டும், அவர்களது வாழ்க்கை வளம்பெற வேண்டும், இறை கருணையில் அவர்கள் நிழல்பெற வேண்டும் என்று ஏக இறையோன் அருளாளனை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.
கொவிட் 19 எனும் கொடிய தொற்றின் தாக்குதலால் உலகளவில் நிலைகுலைந்து போயுள்ள மானிட சமூகம் விரைவில் அதனை வென்று வழமையான வாழ்வு நிலைக்கு திரும்பும் திருப்ப நாளாக இந்த தியாகத்திருநாள் அமைய அல்லாஹ் அருள் புரிவானாக.

மத்திய கிழக்கில் முதல் நாளும் தாய்த்திருநாட்டில் மறுநாளும் இந்த ஈகைப்பெருநாளை கொண்டாடும் நாம், இந்த இரு நாட்களிலும் பெருநாள் பற்றிய எண்ணமின்றி, நாடுதிரும்பவும் முடியாமல் , தொழிலையும் இழந்து துயரோடு அநாதரவாக இருக்கும் வெளிநாட்டுப்பணியாளர்களான எம் சகோதரர்களின் துயர் குறித்தும் கரிசனை கொள்ள வேண்டும். அவர்கள் நலமாக, விரைவாக நாடுதிரும்ப எம்மால் செய்யக்கூடிய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இப்புனித நாளில் அவர்கள் விடயத்தில் அசமந்தமாக இருக்கும் அரச தரப்புக்கு அழுத்தம் கொடுக்க நாம் தயாராக வேண்டும்.

எமது மார்க்கம் முழு மானிட சுபீட்ஷத்துக்குமானது, அனைவரதும் நல்வாழ்வுக்குமுரியது. இதை அறியாத இனவாத குறுகிய மனம் கொண்டோர் எம் மீது காழ்ப்புணர்வு கொண்டு எம் மார்க்கம், எம் கல்வி, எம் பண்பாடு, எமது நிலம், எமது வரலாறு, எமது பங்களிப்பு, எமது இருப்பு...என்று எல்லாவற்றையும் இலக்கு வைத்து அழிக்க அல்லது கொச்சைப்படுத்த முனைகின்றனர். எனவே எமது மார்க்கம் சமாதானத்துக்கானது என்ற தூதையும் நாங்கள் தேசத்தின் நல்லாட்சிக்கான பங்காளர்கள் என்ற செய்தியையும் சகோதர சமூகங்களுக்கு சிறப்பாக சொல்ல வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அதற்கு முன் நாமே இந்த பேருண்மையை புரிய வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.
இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்வியல் வரலாற்றின் உன்னத பாடத்தை புகட்டும் இப்புனித பெருநாளில், இந்தியா மற்றும் சீனாவில் இனவாதத்தையும் ஜனநாயக விரோதத்தையும் உரிமை மறுப்பையும் கொள்கையாக கொண்ட கட்சிகளை முன்னுதாரணமாக கொண்டு எம்மை ஆட்சி செய்ய துடிப்போருக்கு தக்க பாடத்தை புகட்ட நாம் அனைவரும் திட சங்கற்பம் கொள்ள வேண்டும்.

எனவே நாம் அனைவரும் எம் தாய்த்திருநாட்டை பீடித்துள்ள ஊழல், இனவாதம், வறுமை, போதைப்பரவல், அடக்குமுறை, அந்நிய ஆதிக்கம், வேலையின்மை போன்றவற்றுக்கு எதிராக பாடுபட இப்புனித நாளில் உறுதி கொள்வோம். முஸ்லிம்களது மட்டுமன்றி முழு நாட்டினரதும் உரிமைகள் பாதுகாக்கப் படவும் , ஜனநாயக விழும்பியங்கள் இராணுவ சர்வாதிகாரத்துக்குள் காவுகொள்ளப்படாதிருக்கவும் விழிப்போடு செயற்படுவோம். இப்புனித நன்னாளில் எம் நாடு வளமாகவும் அனைவருக்கும் சுபீட்ஷமான நல்வாழ்வு கிட்டவும் இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் இது போன்ற நன்னாளை நற்சுகத்தோடும் சுபீட்ஷத்தோடும் நல்லருளோடும் மீண்டும் மீண்டும் வந்தடையச் செய்வானாக.
எம்மையும் உங்களையும் அவன் பொருந்திக் கொள்வானாக.
ஈத் முபாரக் - இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

---------------------

ஹஜ்பெருநாள் தியாகத்தின் அடையாளம். அவ்வாறான தியாகங்கள் கடந்து எமது நாடு சுபீட்சம் பெற இந்நாளில் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மு கா பிரதித்தலைவர் ஹரீஸ்

(ஷய்பான் அப்துல்லாஹ்)
தியாகம், அர்ப்பணிப்பு நிறைந்த சமாதானம் மிக்க மார்க்கமான இஸ்லாத்தின் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்றாக இருந்துவரும் புனிதமிகு ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 
பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில்
தெரிவித்துள்ளர்.

"அனைவருக்கும் ஈத்துல் அல்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்". 

உலகை உலுக்கிப்போட்ட கோவிட் 19 காரணமாக எமது நாட்டில் வாழும் முஸ்லிங்களாகிய நாங்கள் இம்முறை புனித ஹஜ்ஜுப்பயணத்தை மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையை அடைந்தோம். அதனால் நாங்கள் அடைந்த வேதனை மிக அதிகமாக இருந்தது. 

இன்ஸா அல்லாஹ் அடுத்த வருடம் எங்களுடை நாட்டிலிருந்து யார் யாரெல்லாம் புனித ஹஜ்ஜுப்பயணத்தை மேற்கொள்ள நிய்யத்து வைத்துள்ளார்களோ அவர்கள் எல்லோருடைய நிய்யத்துக்களையும் வல்ல நாயகன் அல்லாஹ் கபூல் செய்ய இந்த நன்னாளில் இருக்கரமேந்தி பிரார்த்திக்கின்றேன். 

எமது நாடு மிக முக்கிய கட்டத்தில் இன்றைய நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில தினங்களில் நாங்கள் வாக்களிக்க தயாராக உள்ளோம். எங்களின் வாக்குகள் மூலம் இந்த நாட்டில் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ சரியான எண்ணத்தின் பால் எமது புள்ளடியை இடுவோம்.

இன்றைய ஹஜ்பெருநாள் தியாகத்தின் அடையாளம். அவ்வாறான தியாகங்கள் கடந்து எமது நாடு சுபீட்சம் பெற எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம் எனவும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
----------------

அப்துல்லா மஃறூப்
முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன். என முன்னால் துறை முகங்கள் மறறும் கப்பற் துறை பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அச் செய்தியில் தெரிவிக்கப்படுவதாவது

பல்லின  சமூகங்கள் வாழும் இந்த  நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் ,ஒற்றுமையுடனும் அனைவரும்  இந்நாளில் வாழ வேண்டும் .நாட்டு சட்ட திட்டங்களை மதித்தும் சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் கொவிட் 19 எனும் வைரஸில் இருந்து எம்மை நாமே பாதுகாக்க ஒரு முய்மாதிரியான சமூக கட்டமைப்பை கொண்ட சமூகமாக நாம் இந்நாளில் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சகல சமூகங்களுக்குமிடையில் கசப்புணர்வற்ற நல்ல உணர்வோடும் புனித மக்காவில் ஹஜ்ஜாஜிகள் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.



நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளர்ப்பதற்கு வழிவகை செய்கிறது. 

ஹஜ் என்பது தியாகம் ,சகிப்புத்தன்மை விட்டுக் கொடுப்பு ,பொறுமை போன்றவற்றை எமக்கு கற்றுத் தந்திருக்கிறது இச் செய்தியை ஏனைய சமூகத்துக்கும் கொண்டு செல்வோம்.



இந்நாளில் உழ்கியா கடமையும் உள்ளது இதனை நமது வறுமைப்பட்ட சகோதரர்களுக்கு பகிர்ந்தளித்து அவர்களையும் சந்தோசப்படுத்துவோம். ஹஜ்ஜினுடைய கடமைகளில் ஒன்றான உழ்கியா என்ற கடமையை 11,12.13 பிறை நாட்களில் வைத்துக் கொள்வோம்.நமது நபி சொல்லாத 14 ஆவது நாளில் இக் கடமையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டாம் அது வெறும் சடங்காகவே அமையும் இதன் மூலம் அந் நாளை தவிர்ப்பதன் மூலம் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடைய அன்பைப் பெற்று இன ஐக்கியத்தை வழியுறுத்துவோம்.
அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் ..அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்...
------------------
அல்ஹாஜ் :  ஏ. எல். எம். பாரிஸ் 
ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து வாழ் இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் விடுத்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் உச்ச விளைவுகளை முழு மனித சமூகமும் எதிர்கொண்டுள்ள இன்றை சூழலில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் நாம் துல் ஹஜ் மாதத்தின் சிறப்பையும் அல்லாஹ்வின் வல்லமையையும்  தியாகத்தையும்  அது எமக்கு பயிற்றுவிக்கும் மானுட விழுமியங்களை நமது நடத்தை மாற்றங்களில் உயிர்ப்பித்து இம்மையிலும் மறுமையிலும் விமோசனம் பெற முயற்சிக்க வேண்டும்.


குறிப்பாக கொரோனா தொற்று மட்டுமல்ல பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுத்த நிலையில் எமது நாட்டு முஸ்லிம்கள் இன்று பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.


இந்நாட்டில் முஸ்லிம்களின் கண்ணியம் பேணவும் மானிடப் பெறுமானங்களும் மனித மாண்புகளும் பாதுகாக்கப்படவும், எம்மிடையே காணப்படும் குரோதங்களும், வெறுப்புணர்வும் பிரதேசவாதங்களும் பகைமையுணர்வும் நீங்கி சகோதரத்துவமும் மனித நேயமும் மானுட உணர்வும் அன்பும் அரவணைப்பும் மனித பாசமும் மிகைக்கும் சூழ்நிலையொன்றுக்காக அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நாடி நிற்கும்  அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இம்மை மறுமையிலும் சிறக்க. வாழ்வில் வளம் செழிக்க இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்துத்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-------------

எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும் - 
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

(எம் .என்.எம்.அப்ராஸ்)

உலகளாவிய ரீதியில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்ததுக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.


இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம்நினைவுபடுத்தப்படுகிறது தியாகத்தின் வரலாறு எமக்கு நல்ல பாடத்தை புகட்டுவதாகவும்,
எல்லா இன மக்களுக்கு ஒற்றுமையுடன் வாழ இவ் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் அமையட்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் 
தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் குறிப்பிடுகையில்

நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து சுகாதர விழுமியங்களை பேணி ஹஜ்ஜுப் பெருநாளை நிறைவான பிரார்த்தனையுன் கொண்டாடுவோம்.மேலும் நாட்டின் நிலமை சீரடைந்து முற்றிலும் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்ப பிரார்த்திப்பதுடன்,
தியாகப் பெருநாள் தினத்தில் நாம் எல்லோரும் ஹஜ்ஜுக்கு உரித்தான புனிதத் தன்மையை உணர்ந்து எம்மிடையே காணப்படும் வேற்றுமையை களைந்து
அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக ஒற்றுமையுடன் சகிப்புத்தன்மையுடன் வாழ
வேண்டும் .உள்ளம் நிறைந்த இத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சமூக, பொருளாதார, கலாசார ரீதியில் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக் கொடுக்காதவாறு, தமது வாழ்வொழுங்கு முறைமையை சீர்படுத்தி, சகவாழ்வுக்கு முன்னுரிமையளிப்போம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"மனிதனைப் புனிதப்படுத்துகின்ற ஹஜ் எனும் தியாகம் நிறைந்த வணக்கம் எமக்கு நிறைய படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றது. முஸ்லிம்களிடையே காணப்பட வேண்டிய ஒற்றுமை, சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு அம்சம் ஹஜ்ஜை விட வேறெதுவும் இருக்க முடியாது. அவ்வாறே மனிதர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சகிப்புத்தன்மை, தியாகம் என்பவற்றையும் ஹஜ் எமக்கு கற்றுத்தருகின்றது. அதில் எமக்கு நிறையவே படிப்பினைகள் இருக்கின்றன.

தவிரவும் இறையச்சத்துடன் தீய நடத்தைகளைத் தவிர்த்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் மாறுவதற்கு ஹஜ் வழிகாட்டுகிறது.

அவ்வாறே எந்த இனமாயினும் மதமாயினும் 'மனிதம்' என்கிற பண்புடன் நடந்து கொள்வதற்கான வழிகாட்டியாக எமது புனித மார்க்கம் இஸ்லாமும் அதில் விசேடமாக ஹஜ் எனும் வணக்கமும் திகழ்கின்றன. பொதுவாக 'ஹஜ்' போதிக்கும் தத்துவங்களை ஒவ்வொருவரும் தமது வாழ்வில் கடைப்பிடிப்பாராயின் சமூகத்திலும் தனி நபர்களிடையேயும் ஒருபோதும் பிளவுகளோ பிணக்குகளோ ஏற்பட வாய்ப்பிருக்காது.

இன்றைய எமது நாட்டு அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்கள், மாற்று இனங்களை சேர்ந்த சகோதரர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வதன் மூலமே, அவர்கள் எம்மீது கொண்டிருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக வாய்ப்பேற்படும். அதற்காக இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம். அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.

இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின் “ஈதுழ் அழ்ஹா” பெருநாள் வாழ்த்துக்கள். இலங்கை முஸ்லிம் பிரமுகர்களின்  “ஈதுழ் அழ்ஹா” பெருநாள் வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on August 01, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.