அரசியல் பலம் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தான் இருக்கின்றது



முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் என்பது வெறுமனே வடகிழக்கிற்குள் மாத்திரம்
மட்டுப்படுத்தப்பட வேண்டும்; அதற்கு வெளியே வந்துவிடக் கூடாது என்று சிலர் கூறிவருகின்றனர். அது தவறான எடுகோள். அரசியல் பலம் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தான் இருக்கின்றது. அந்த எண்ணிக்கையை அதிகரித்துகொள்வதற்காக சில வியூகங்களை நாம் வகுக்கின்றோம். அவற்றில் ஒன்றாகத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை மூன்று சின்னங்களில் போட்டியிடுகின்றது. தொலைபேசி சின்னத்திலும், தராசு சின்னத்தில் புத்தளத்திலும், மரச்சின்னத்தில் மட்டக்களப்பிலும் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.  கள நிலவரங்களின் யதார்த்தத்திற்கேற்ப இந்த முடிவை நாம் எட்டியிருக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கம்பளை நகரில் ஞாயிற்றுக்கிழமை (12); நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்தார். 

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய அரசியலில் சங்கமிப்பதே இந்நாட்டில் இருக்கின்ற சகல விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான நிவாரணமாக அமையும் என்பது வழமையாகப் பேசப்படுகின்ற விஷயமாகும். நான் இளவயதில் கோர யுத்தம் நடந்த காலப்பகுதியில், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தில் இணைந்துகொண்ட போது பல எதிர்ப்புக்களுக்கு நாம் முகங்கொடுத்தோம். குறிப்பாக, வடகிழக்கிற்கு வெளியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பற்றி பேசுவது என்பது மிகவும் சங்கடமான விஷயமாக அன்று இருந்தது.

ஆனாலும், துணிவோடு நாங்கள் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தோம். ஏனென்றால், தேசிய அரசியல் கட்சிகளும் இனவாத கட்சிகள் தான். அங்கு கட்சியிலுள்ள பெரும்பான்மையினத்தவரின் நோக்கங்களை தான் தேசிய அரசியலாகக் கொண்டு ஈற்றில் அவற்றை நிறைவேற்றும் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவாகத்தான் எமது பிரசாரத்தை முன்னெடுத்தோம். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால கட்டத்தில் நிறைய விமர்சனங்களை சந்தித்தாலும், காலப்போக்கில் இந்த இயக்கத்தோடு முஸ்லிம் சமூகம் ஒருவிதமாக இசைவாக்கமடைந்தது. முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியொன்றின் அவசியம் அக்கால கட்டத்தில் உணரப்பட்டமையினால் மக்கள் எமது இயக்கத்தை ஆதரிக்க முன்வந்தனர்.  

எமது சமூகம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் பாரிய நெருக்கடிகளை எதிர்காலத்தில் சந்திக்கவுள்ளது. விகிதாசார தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் பாதுகாப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் சில இடங்களில் புதிய திருத்தங்களை ஏற்படுத்தியதனால் பலவித குளறுபடிகளும் எழுந்துள்ளன. 

இந்நிலையில் தான் அடுத்த பாராளுமன்றம் மேலும் சிக்கல்களையும், நெருக்கடிகளையும் கொண்ட தளமாக அமையப் போகின்றது. ஏனெனில் தமக்கேற்றவாறு சட்டத்தையே மாற்றியமைப்பதற்கான எத்தனமொன்று எட்டப்படுகின்றது. தீர்க்கதரிசனத்தோடும், சமயோசித புத்திகூர்மையுடனும் செயற்படாது போனால் எல்லோரது கண்களிலும் மண்ணைவாரித் தூவி விட்டு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைமை என்பது மிகவும் ஆபத்தான கட்டமொன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் எல்லா விதமான விடயங்களிலும் மூக்கு நுளைக்கும் விதத்தில் முன்னர் ஒருபோதும் இவ்வாறில்லாத வகையில் செயற்பட்டார்கள். ஊடகங்களினூடாக முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்திரித்தார்கள்.

இப்போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கும் முஸ்லிம்கள் தான் காரணம் என்றவாறு குறிப்பாக, தொலைகாட்சி செய்திகளை திரிபுபடுத்தி ஒருவித மாயையை மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்கின்ற அவலத்தையும் அரங்கேற்றுகிறார்கள். இத்தகைய நிலையில் எமது செயற்பாடுகளை மிக அவதானமாகவே முன்னெடுக்க நேர்ந்துள்ளது.

அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் சாட்சிகளை மீண்டும் இப்போது கொட்டை எழுத்துக்களில் ஊடகங்களில் காட்டி ஏற்கனவே மேற்கொண்ட விசாரணைகளைப் புறந்தள்ளிவிட்டு, முஸ்லிம் சமூகத்திற்குள் ஒழுங்கான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற பாங்கில் தேர்தலின் அழுத்தம் கருதி பொது மக்களுக்கு மூளைச் சலவை செய்ய முற்படுகின்றார்கள்.  

அத்தோடு குறித்ததொரு பிரகடனம் தொடர்பிலும் அடிக்கடி ஊடகங்களில் இப்போது பேசுகின்றார்கள். இவற்றையெல்லாம் கட்டம் கட்டமாக வேண்டுமென்று அவிழ்த்துவிடுகின்றார்கள். இதற்கு காரணம் எமது சமூகம் அரசியல் ரீதியாக மேற்கொண்ட விடயங்களை கூட ஊதிப் பெருப்பித்து வித்தியாசமான கோணங்களில் சந்தைப்படுத்துகின்ற விஷமத்தனமான பிரசாரத்தை இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் என்ற போர்வையில் முன்னெடுத்தார்கள். முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க முற்படுகின்றார்கள். 

இந்த நாட்டில் புகழ் பூத்த இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. பேருவளையில் பிரசித்தி பெற்ற ஆன்மீக, லௌகீக கல்விகளை ஒருசேர இணைத்துப் போதிக்கக்கூடிய கலாபீடத்தை தவறான பார்வையில் நோக்கும் விதத்தில் பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். 
ஏனெனில், இந்த கலாபீடத்திலிருந்து உருவாகின்ற புத்திஜீவிகள், பட்டதாரிகள் கல்வி துறை, நிர்வாகத் சேவை, வெளிநாட்டு இராஜதந்திரசேவை போன்ற அனைத்திலும் உள்வாங்கப்படுபவர்களாக இருக்கின்றனர். நான் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது  பேருவளையில் அமைந்துள்ள அக்கலாபீடத்தை பல்கலைக்கழக பட்டம் வழங்கும் நிறுவனமாக்கி அதன் அந்தஸ்த்தை மேலும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தேன். அதற்கான பலவித படிமுறைகள் நிறைவுற்று இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் அவ்வாறானவற்றை தடுப்பதற்கு வேண்டுமென்றே இவர்கள் இவ்வாறான பாய்ச்சல்களை ஒவ்வோர் இடங்களிலும் வேண்டுமென்றே முன்;னெடுக்கின்றனர்.

இவற்றையெல்லாம் பேசக்கூடிய பாராளுமன்றம் இப்போது மூடப்பட்டுள்ளது. இந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றமானது களைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறில்லையாயின், இருந்த பழைய பாராளுமன்றத்தையாவது மீண்டும் கூட்டவேண்டும் என்றிருக்கையில், இன்றை பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் களைக்கப்பட்ட நிலையில் இருந்து, உயர்நீதிமன்றம் வரை சென்று பின்னர் இப்போது தேர்தலுக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு சமாந்தரமாக இருக்க வேண்டிய பாராளுமன்ற சட்டவாக்க சபையை அமுல்படுத்தும் வகையில் மும்மொழியப்பட்ட 19ஆவது திருத்த சட்டம் முன்னேற்றமான பல விடயங்களை செய்தது. அவற்றை இல்லாதொழிக்கவே இவ்வாறு இவர்கள் செயற்படுகின்றார்கள். 

ஆனால், இந்நிலைமை நீடிக்காது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்ற விடயம் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதி முறைமையோடு சிக்கல்களை ஏற்படுத்தும். அதனுடைய விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி திடீரென பிரதமரின் பதவியைப் பறித்து 52 நாட்கள் நாட்டையே நகைப்புக்கிடமானதாக ஆக்கிவிட்டார். 

இதுபோல் இந்த தேர்தலின் பின்னர் வரக் கூடிய பாராளுமன்றத்திலும் ஜனாதிபதி முறைமை சம்பந்தமான விடயங்களிலிலும் விசித்திரமான நிகழ்வுகள் நடக்கலாம். 

அத்தகைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் என்பது மிகத் திடமானதாக இருந்தாக வேண்டும். ஆனால், அவர்கள் நினைப்பதை சாதித்துக்கொள்தற்காக அவர்களை கேள்விக்குட்படுத்தகூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை ஒதுக்கிவிடுவதற்கு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 

முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் என்பது வெறுமனே வடகிழக்கிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்; அதற்கு வெளியே வந்துவிடக் கூடாது என்று சிலர் கூறிவருகிறார்கள். அது தவறானது. அரசியல் பலம் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தான் இருக்கின்றது. அந்த எண்ணிக்கையை அதிகரித்துகொள்வதற்காக சில வியூகங்களை நாம் வகுக்கின்றோம். 

அவற்றில் ஒன்றாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை மூன்று சின்னங்களில் போட்டியிடுகின்றது. தொலைபேசி சின்னத்திலும், தராசு சின்னத்தில் புத்தளத்திலும், மரச்சின்னத்தில் மட்டக்களப்பிலும் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.  கள நிலவரங்களின் யதாரத்திற்கேற்ப இந்த முடிவை நாம் எட்டியிருக்கின்றோம். இதன் முக்கிய நோக்கம் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பலப்படுத்துவதேயாகும்.  

இதனால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை பலப்படுத்துவது மட்டுமல்ல. சமூகத்தின் பேரம் பேசும் சக்தியும் இதில் தான் தங்கியிருக்கின்றது. அடுத்த பாராளுமன்றத்தில் வெறும் கண்டி மாவட்டத்தின் உறுப்பினராக மட்டும் போவதில் என்னுடைய பலம் தங்கியில்லை. மாறாக, என்னுடைய அணியில் மேலும் உறுப்பினர்கள் பலர் இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கை தான் எங்களுக்கு வலிமையை சேர்க்கும். 

நாட்டில் ஏற்படுகின்ற திடீர் பிரச்சினைகளின் போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக எவ்வாறெல்லாம் ஆட்களை பறிக்கலாமென்பதையே நோக்கமாக கொண்டு அழுத்தங்களை பிரயோகிப்பார்கள். கட்சியை பாதுகாக்கின்ற அதேவேளையில் முழு சமூகத்திற்கும் பாதகமான, குந்தகமான விடயங்கள் நடைபெற்றால் அந்த பலியை நாங்கள் தான் சுமக்க நேரிடுகின்றது. இவற்றை தவிர்த்துக்கொள்ள நிறையவே போராட வேண்டியுள்ளது. 

ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியுமா என்ற நம்பிக்கை இன்றைய ஆட்சியாளர்களுக்கு 2018ஒக்டேபர் மாதம் 26 ஆம் திகதி இருக்கவில்லை. இருந்திருந்தால் இவர்கள் இவ்வாறு ஆட்களை காவுகொள்ளும் நடவடிக்கைக்கு சென்றிருக்கமாட்டார்கள். இப்போதைய பிரதமர் அன்று பின்கதவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் கதைக்கும் போது “இது உங்களது தகுதிக்கு பொருந்தாத விஷயம். சிறந்த அரசியல் ஆளுமையான உங்களது செல்வாக்கில் இது பாதிப்பை ஏற்படுத்துமே” என்றேன்.

அன்றிலிருந்தே மைத்திரபால சிறிசேனவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிலவிய கருத்து ஒவ்வாமை காரணமாக பாராளுமன்றத்தில் ஒருவித கசப்புணர்வுடனேயே காலத்தை கடத்திவந்தோம்.  மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதில் விருப்பம் இருக்கவில்லை. அழுத்தங்களை பிரயோகித்து “வியத்மக” ,“எலிய” போன்ற அமைப்புக்களை முன்னிறுத்தி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடத்தியே அதனை பறித்துக்கொண்டார். அதுபோல் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அறவே விருப்பம் இருக்கவில்லை. 

அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மையான ஆசனங்கள் இருந்தாக வேண்டும். வாக்கு கணிப்பு விடயங்களில் மக்கள் மத்தியில் வேண்டுமென்று தவறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்கள்;. இதற்காக நான் 2000ஆம் ஆண்டு கண்டியில் போட்டியிட்டதை கூட தவறான முன்னுதாரணமாக கூறித்திரிகின்றனர். அதற்கு நான் உரிய விளக்கத்தை அளிக்கின்றேன்.

2000ஆம் ஆண்டு எமது ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்த போது தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் மரச்சின்னத்தில் தான் கண்டி மாவட்டத்தில் நான் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டேன். அவ்வாறு சின்னத்தை மாற்றி; தேர்தல் சட்டத்தின் பிரகாரம் போட்டியிடலாம். இதனை ரணில் விக்கிரமசிங்க இன்று செய்ய விரும்பாமையினாலேயே இத்தனை பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன. கடைசி வரையில் அவர் யானை சின்னத்தை ஐக்கிய மக்கள் சக்திக்கு சின்னமாக தர மறுத்தமையினால் தான் மக்கள் மத்தியில் ஒருவித குழப்ப நிலை உருவாகியது. 

வாக்காளர்களின் பேராதரவினால் அந்த வருடம் கண்டியில் நான் வென்றெடுத்த பாராளுமன்ற ஆசனத்தை பெரும் சாதனையாகவே நினைக்கின்றேன். அன்று நடந்தது என்னவென்று பார்த்தால் கண்டி மாவட்டத்திலிருந்த சிறந்த ஆளுமையான ஏ.சி.எஸ்.ஹமீத்; 1999ஆம் ஆண்டு எங்களை விட்டு மறைந்துபோனார். அன்று மக்கள் மத்தியில் என்னை பற்றிய அறிமுகம் ஓரளவிற்கு இருந்தது. 

இச்சமயத்தில் தலைவர் அஷ்ரப் மற்றும் சந்திரிக்கா அம்மையாருக்கு நான் கண்டி மாவட்டத்தில் கதிரை சின்னத்தில் கேட்பதே விருப்பமாகவும் இருந்தது. ஆனால், அதற்கு நான் உடன்படவில்லை. வடகிழக்கிற்கு வெளியே கண்டியில் மாத்திரம் என்னை மரச்சின்னத்தில் கேட்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். அதற்காக கண்டியில் எவ்வாறு ஒரு ஆசனத்தை வென்று கொள்ளலாமென்ற எனது கணிப்பையும்; தலைவரிடம் எடுத்துரைத்தேன். 

பின்னர் தலைவரும் சந்திரிக்காவுடன் வாதிட்டு ஈற்றில் அனுமதி பெறப்பட்டது. தேர்தல் பிரசார காலத்திலேயே தலைவரும் எம்மைவிட்டு எதிர்பாராத விதமான மரணமடைந்தமையினால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக நான் பொறுப்பேற்றேன். இதுவும் எனது அன்றைய வெற்றிக்கு வழிவகுத்தது.

ஆனால், இன்று இதனை வைத்துக்கொண்டு சில கொந்தராத்துக்காரர்களை பாவித்து தவறான கோணங்களில் மக்களிடம் பொய்யான தகவல்களை கொண்டு சேர்க்கின்றார்கள். தேசிய ரீதியாக எதிரணிக்கு ஆசனங்கள் குறையும்போது தற்போதைய ஆளுங்கட்சிக்கு இன்னும் ஆசனங்களை அதிகரிக்கக்கூடும். இதனையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது. ஆழமாக சிந்தித்து புத்தளத்தின் தேவை கருதி அங்கு மாத்திரம் இதனை செயற்படுத்தியுள்ளோம். 

முற்றிலுமுமாக சமூக நலனுக்காகவே இம்முடிவுக்கு நாம் தள்ளப்பட்டோம். பலர் என்னிடம் வந்து இம்முறை கண்டியில் கேட்காமல் அம்பாறைக்கு வாருங்கள் என்றும் கூறினார்கள். அதனை நான் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால், கட்சியின் தலைமை எங்காவது போவதாக இருந்தால் அது கட்சியையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டும். இறுதிகட்டத்தில் ஏற்படக் கூடிய நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்காகவே அந்த யுக்தியை கையாளவேண்டும். 

2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது மடவளையில் 10 இளைஞர்களையும், தெல்தோட்டையில் ஒருவரையும், கம்பளையில் ஒருவரையும் பலிகொடுக்குமளவிற்கு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னணியில் பாராளுமன்றத்திற்குள் மிக வருத்தத்தோடு சென்றேன். 
திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளேன். இம்முறையும் அம்மாவட்டங்கள் என்னிடத்தில் முன்வைக்கப்பட்டன. அன்றிருந்த சவால்களை சந்திப்பதற்காகவே அங்கு தேர்தலில் களமிறங்கினேன். இந்த கட்டத்தில் அது பொருத்தமாக அமைந்திராது. அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்தமாக எமது எதிரணியின் பலத்தை இந்த மாவட்டத்தில் பலவீனப்படுத்துவதாக போய்விடும். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஒருபோதும் கோழை தனமான முடிவுகளை எடுக்காது. அணி பலயீனமாவதை தடுப்பபதற்காகத்தான் கண்டியில் இம்முறையும் போட்டியிடுகின்றேன். சமூகத்தின் அரசியல் பலம் ஒருபுறம், நாங்கள் சார்ந்திருக்கின்ற அணியின் பெருவாரியான ஆசனங்களைப் பெறுவது மறுபுறம்;. இந்த முடிவை வெற்றி பெற செய்யும் பணியில் உங்களது பங்களிப்பை நாடி இங்கு வந்துள்ளேன். 

இது ஓர் இயக்கத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, சமூகத்தின் அரசியல்ல சவாலுக்குக்குட்படுத்தப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதை தூக்கி நிறுத்துகின்ற முக்கியமானதொரு களப் பணியாகவும் அமைகின்றது. அதற்கான ஆதரவை அவசியம் எங்களுக்கு அளியுங்கள் என்றார். 
அரசியல் பலம் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தான் இருக்கின்றது அரசியல் பலம் என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தான் இருக்கின்றது Reviewed by Madawala News on July 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.