சிங்கள மக்களின் பெருவாரியான வாக்குகளால் மொட்டு ஆட்சியமைக்கும் அதில் சிறுபான்மை மக்களும் பங்காளியாக மாற வேண்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

சிங்கள மக்களின் பெருவாரியான வாக்குகளால் மொட்டு ஆட்சியமைக்கும் அதில் சிறுபான்மை மக்களும் பங்காளியாக மாற வேண்டும்.


நூருள் ஹுதா உமர். 
ஆகஸ்ட் 06 ஆம் திகதி இறுதி தேர்தல் முடிவுகள் வரும் போது இந்த நாட்டில் நிலையான அரசாங்கம்
உறுதியாக அமையும். அந்த அரசை உருவாக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பு இருக்கும். உலகமே கொரோணாவில் திண்டாடியபோது நாட்டை சிறப்பாக முன்னெடுத்த ஜனாதிபதி கோத்தாபாயவின் கரத்தை பலப்படுத்த மீண்டும் பிரதமர் ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஸ அமர்வார். சிங்கள மக்கள் இதை சாத்தியப்படுத்துவார்கள் என தேசிய காங்கிரசின் இரண்டாம் இலக்க குதிரை சின்ன திகாமடுள்ள வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

 தேசிய காங்கிரஸ்  மருதமுனை பிரதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரித்த யாரும் முஸ்லிங்களின் விடயங்கள் தொடர்பில் சரியாக கரிசனை செலுத்த வில்லை. மாறாக இனவாத பேச்சுக்களையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் செய்து மக்களை சிக்கலில் தான் மாட்டி விட்டார்கள்.

சூடாக்கும் அரசியலை செய்த இவர்களில் பலர் சிங்கள மக்கள் மத்தியில் விரோதிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் வாய்திறந்தால் பெரும்பாண்மை இன மக்கள் ஆத்திரம் கொள்கிறார்கள். இப்படித்தான் இவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாட்டுகள் அமைந்திருந்தது.

இனிவரும் காலங்களில் இந்த சூடாக்கும் அரசியல் எமது நாட்டில் எடுபடாது. இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது மஹிந்த அரசை விமர்சிப்பதும் பின்னர் மஹிந்த அரசில் இணைந்து சலுகைகளும், அமைச்சுக்களும் பெறுவது வாடிக்கையாகி விட்டது.  இனி அந்த நாடகங்கள் ஆளும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எடுபடாது.

இவர்கள் இனி எதிர்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்டு கதிரையை சூடாக்க மட்டுமே முடியும். ஆளும் தரப்பிலிருந்தே எதையும் செய்ய முடியாத இவர்கள் எதிரணியில் இருந்து எதை சாதிக்க முடியும்? என்று கேட்க விரும்புகிறேன். மஹிந்த அரசுடன் மிக நெருக்கமான உறவை கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கடந்த 05 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாது போன இடைவெளி மிக பெரிதாக இருக்கிறது.

இவ்விடைவெளி மூலம் நாம் பல பிரச்சினைகளை சம காலத்தில் அனுபவித்து வருகிறோம். இவற்றிலிருந்து விடுதலை பெற நம்மை நாமே ஆளும் வகையில் நமது தலைவர் அதாஉல்லா அவர்கள் மீண்டும் அதிகாரத்தை அடைய வேண்டும்.

அதிக கல்விமான்களையும், சிறந்த நிர்வாகிகள், புத்திஜீவிகளை கொண்ட மருதமுனை மக்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நமது எதிர்காலம் சிறப்பாக அமையும்.- என்றார்

சிங்கள மக்களின் பெருவாரியான வாக்குகளால் மொட்டு ஆட்சியமைக்கும் அதில் சிறுபான்மை மக்களும் பங்காளியாக மாற வேண்டும். சிங்கள மக்களின் பெருவாரியான வாக்குகளால் மொட்டு ஆட்சியமைக்கும் அதில் சிறுபான்மை மக்களும் பங்காளியாக மாற வேண்டும். Reviewed by Madawala News on June 29, 2020 Rating: 5