நீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : விமர்சனம் செய்து என்னை ஓய்வாக்க முடியாது -எச்.எம்.எம். ஹரீஸ். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : விமர்சனம் செய்து என்னை ஓய்வாக்க முடியாது -எச்.எம்.எம். ஹரீஸ்.அபு ஹின்சா 
கடந்த 2004 ஆம் ஆண்டு எமது நாட்டை சுனாமி பேரலை 

உருக்குலைத்துவிட்டு சென்ற போது நோர்வேயின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சந்திரிக்கா அம்மையாரின் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. 


சுனாமி பேரலை உருக்குலைத்துவிட்டு சென்ற இடங்களில் வடக்கும் கிழக்கும் வெகுவாக பாதித்திருந்தது. 

இந்த பாதிப்பிலிருந்து நாட்டை மீள கட்டியமைக்க உலகின் அதிக நாடுகள் அதிலும் மேற்கத்தைய நாடுகள் கூடுதலான நிதிகளை வழங்கியிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தமிழீழ விடுதலை புலிகள் எண்ணினர். வட- கிழக்கு பிரதேச நிர்வாகத்தையும் சுனாமி மீள்கட்டமைப்பு நிதியையும் பெற்று  அதற்கான நிர்வாக தன்னாட்சி அதிகார சபையை பெறுவதற்கு புலிகள் தீர்மானித்தனர்.


 இதற்காக சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடாத்தி நோர்வே மற்றும் பல நாடுகளின் அழுத்தத்தினால் புலிகளுக்கு சந்திரிக்கா அம்மையாரின் அரசு சுனாமி தன்னாட்சி நிர்வாக சபை அமைத்து கொடுக்க தீர்மானித்து அதனை அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

இந்த சுனாமி தன்னாட்சி அதிகார சபையின் கீழ் வட கிழக்கு முஸ்லிம் பிரதேச நிர்வாகமும் மீள்கட்டமைப்பும் அந்த சுனாமி தன்னாட்சி நிர்வாக சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் முற்றுமுழுதாக முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணியில் இருந்தது. அப்போது அரசில் அங்கம் வகித்த முஸ்லிம் எம்.பிக்களும் மௌனமாக இருந்துவந்தனர். இவ்வாறு முஸ்லிம் சமூகம் கைவிடப்பட்ட சூழ்நிலையில் நான் நீதிமன்றத்தினுடாக நீதி கேட்க தயாரானேன். 

கல்முனை சாஹிபு வீதியில் வசித்து வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்முனை பிரதேச முக்கியஸ்தர் அல்ஹாஜ் எம்.எம். ஜௌபர் ஹாஜி அவர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். ஜெளபர் ஹாஜி அவர்கள் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வழக்கு தாக்கல் செய்ததை மறக்க முடியாது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குலாமினால் பல நாட்களாக தீர விசாரிக்கப்பட்டு சுனாமி தன்னாட்சி நிர்வாக சபை சட்டத்திற்க்கு முரணானது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குலாம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் அநீதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டது.


இந்த குறிப்பை இடுவதன் காரணம் முஸ்லீம்களுடைய ஜனாசா எரிக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன் இதனை சில அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இவர்கள் புரிய வேண்டும் என்னுடைய சமூக போராட்டம் இது போன்று பல வழிகளில் இருந்துள்ளது என்பதை கடந்த கால நினைவுகளை இப்போது மீட்டுப்பார்க்க காரணம் என்ன எனும் கேள்வி உங்கள் மத்தியில் எழுவது நியாயமானது.  நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உயர்நிதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருந்தேன். 


இதை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

 அவர்களுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் நான் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவன் என்பதை நினைவுபடுத்தவே இதனை இப்போது இங்கு எழுதியுள்ளேன். 2005 ஆம் ஆண்டே சமூகத்தின் தேவைக்காக நீதிமன்றம் செல்ல முடிந்த எனக்கு இது ஒன்றும் புதிய விடயமல்ல. 


உங்கள் கருத்துக்கள் கருத்துக்களாகவே இருக்க இந்த பயணம் இனியும் தொடரும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள விசேட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : விமர்சனம் செய்து என்னை ஓய்வாக்க முடியாது -எச்.எம்.எம். ஹரீஸ். நீதிமன்றம் செல்லும் விடயம் எனக்கொன்றும் புதிதல்ல : விமர்சனம் செய்து என்னை ஓய்வாக்க முடியாது -எச்.எம்.எம். ஹரீஸ். Reviewed by Madawala News on May 22, 2020 Rating: 5