முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சேவை செய்வதற்குரிய அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை: அதனாலே அங்கிருந்து வெளியேறினேன் - Madawala News Number 1 Tamil website from Srilanka

முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சேவை செய்வதற்குரிய அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை: அதனாலே அங்கிருந்து வெளியேறினேன்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது எந்தவொரு நிலையிலும் மக்களுக்கு சேவையாற்றுவதற்குரிய அரசியல் அங்கீகாரத்தை தனக்கு வழங்கவில்லை எனவும்,  அதன் காரணமாகவே அக்கட்சியினை விட்டு வெளியேறியதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதனையடுத்து  நேற்று (12) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் மேற்கன்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கடந்த அரசாங்கத்தில் உச்ச அதிகாரங்களை கொண்டிருந்த போதும் முஸ்லிம் சமூகத்தினுடைய எந்தவொரு பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை. குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்களின் பேராதரவினைப் பெற்ற அந்தக்கட்சி அம்மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு முனையவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாத அந்தக்கட்சியில் பயணித்து பதவிகளை மாத்திரம் அலங்கரிப்பதனை விட சமூகத்தின் நன்மை கருதி அக்கட்சியிலிருந்து வெளியேறுவது சிறந்தது என நினைக்கின்றேன். அதனால், தான் வகித்த சகல பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு அக்கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளேன்.

நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சமூக சேவையில் ஈடுபட்டு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அரசியலுக்குள் வந்ததும் அவற்றைத் தொடர்வதற்கே விரும்பினேன். இரண்டு வருடம் மாகாண சபை அதிகாரம் கிடைத்த போது என்னை நாடி வந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளேன். எனது சேவையில் ஒருபோதும் இனவாதம், பிரதேசவாதம் இருந்ததில்லை. கொந்தராத்தினை இலக்காகக் கொண்டு நான் அரசியலுக்கு வரவுமில்லை.

எனது அரசியல் மற்றும் சமூக சேவை செயற்பாடுகள் சம்மாந்துறை தொகுதியிலே அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சிக்குள் இருந்துகொண்டே எனக்கெதிராக செயற்படுகின்றனர். எனது சமூக சேவை பணிக்கு தடையாக இருக்கின்ற அந்தக்கட்சியில் பயணிப்பதனை விட, அங்கிருந்து ஒதுங்கி மக்களுக்கு பணி செய்வதற்கு என்னியுள்ளேன்.

குறிப்பாக, சம்மாந்துறை தொகுதியானது நீண்டகாலமாக அரசியல் அதிகாரமின்றி இருந்தமையினால், அத்தொகுதி அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்பட்டது. இதன்காரணமாக, கட்சித் தலைமையினால் 2012ஆம் ஆண்டு சம்மாந்துறை தொகுதிக்கு மாகாண அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வந்த போது அத்தேர்தலில் மாகாண அமைச்சு பதவியை வகித்தவருக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனால் மாகாண அமைச்சை இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டது.

மாகாண அமைச்சு மற்றும் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இருந்தும் சிலரது சுயநல சிந்தனையால் பலம்பொருந்திய மாகாண அமைச்சை இழக்க வேண்டியேற்பட்டது. குறித்த அமைச்சின் ஊடாக எமது சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் இருந்தும் அவற்றை இழந்தமை வரலாற்றுத் தவறாகும்.

தனிநபரொருவரின் சுயநலப் போக்கினால் சம்மாந்துறை தொகுதியில் பெரும் பலத்துடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக புதிதாக கட்சியில் இணைந்துகொள்ளும் அரசியல் பிரமுகர்களை அங்கிகரிக்கின்ற நிலைமைகள் கூட அங்கு இல்லை குறித்த விடயம் தொடர்பில் கட்சி தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனுமில்லை என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சேவை செய்வதற்குரிய அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை: அதனாலே அங்கிருந்து வெளியேறினேன் முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்குச் சேவை செய்வதற்குரிய அரசியல் அங்கிகாரத்தை வழங்கவில்லை: அதனாலே அங்கிருந்து வெளியேறினேன் Reviewed by Madawala News on February 15, 2020 Rating: 5