இஸ்லாமியப் போதனைகளும் வழிகாட்டல்களும் குழந்தைகளின் உள்ளங்களில் முறையாக இடம்பெற வேண்டும் ; பைசர் முஸ்தபா - Madawala News Number 1 Tamil website from Srilanka

இஸ்லாமியப் போதனைகளும் வழிகாட்டல்களும் குழந்தைகளின் உள்ளங்களில் முறையாக இடம்பெற வேண்டும் ; பைசர் முஸ்தபா


   குழந்தைகளின் வாழ்வில் அறிவு, ஆன்மீகம், ஒழுக்கம்,  பண்பாடு மற்றும் தலைமைத்துவப் பண்புகள்
பிரதிபலிக்க வேண்டுமாக இருந்தால், பெற்றோர்கள் அக்குழந்தைகளை சிறுவயது முதல் பொறுப்புடனும்  கண்காணிப்புடனும் வளர்க்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.


   கொழும்பு 12, பீர்சாஹிபு வீதியிலுள்ள நியாஸ் மெளலவி பவுண்டேஷன் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

   கொழும்பு மாநகர சபை உறுப்பினர் (ஸ்ரீல.சு.க.) தீபா எதிரிசிங்கவின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பைஸர் முஸ்தபா (பா.உ.) மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,


   பெற்றோர்கள் தமது குழந்தைகளின் செயற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான், அக்குழந்தைகள்  சமூகத்தில் ஆளுமை மிக்க, நற்பிரஜையுள்ள குழந்தைகளாக எதிர்காலத்தில் மாறும். குழந்தைகளின் செயற்பாடுகளில் நற்பண்புகள், ஒழுக்க விழுமியங்கள் என்றும் எப்பொழுதும் பிரதிபலிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமியப் போதனைகளும் வழிகாட்டல்களும்  குழந்தைகளின் உள்ளங்களில் முறையாக  இடம்பெற வேண்டும்.


   அத்துடன், இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றாற்போல், பெற்றோர்கள் தமது குழந்தைகளை எதிர்காலத்தில் நவீன தொழில் நுட்பக் கல்வியின் மூலம் சிறந்தவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்க வேண்டும்.
   குழந்தைச் செல்வங்கள் ஓர் அமானிதச் சொத்து. அந்த அமானிதச் சொத்தை, ஆளுமை மிக்க பிரஜைகளாக, ஒழுக்க சீலர்களாக பெற்றோர்கள் உருவாக்க வழி வகுக்க வேண்டும் என்றார். முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மபாஸ் மொஹிதீன், உலமாக்கள் உள்ளிட்ட நலன் விரும்பிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
இஸ்லாமியப் போதனைகளும் வழிகாட்டல்களும் குழந்தைகளின் உள்ளங்களில் முறையாக இடம்பெற வேண்டும் ; பைசர் முஸ்தபா இஸ்லாமியப் போதனைகளும் வழிகாட்டல்களும்  குழந்தைகளின் உள்ளங்களில் முறையாக  இடம்பெற வேண்டும் ; பைசர் முஸ்தபா Reviewed by Madawala News on January 16, 2020 Rating: 5