தொற்று நோய் அவசர நிலைகளின் பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்!


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
தற்பொழுது சீனாவில் வூஹான் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்த் தோற்று குறித்து உலக
ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன, சுமார் 140 கோடி சனத்தொகை கொண்டுள்ள சீனாவில் சுமார் 4500 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சுமார் 106 பேர் மரணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட வைரஸ் இயற்கையான நோய்த் தொற்றா அல்லது உயிரியல் ஆயுத விபத்தா என்ற சந்தேகங்கள் கூட ஊடகங்களில் வெளியிடப் படுகின்றன.

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் குழுவில் ஒரு பெண்மணிக்கு நோய்த் தொற்று இருந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து இங்கும் பதற்றமும் பரபரப்பும்  அதிகரித்து காணப்படுகிறது, அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


பொதுமக்களாகிய நாம் சகலரும் வைத்திய நிபுணத்துவ அறிவு படைத்தவர்களோ அல்லது பிந்திய வைத்திய சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்புக்கள் பற்றிய அறிவோ தெளிவோ உடையவர்கள் அல்ல என்பதனால் அது குறித்த நம்பகமான தகவல்களை அறிவுரைகளை உரிய தரப்புக்களிடம் இருந்து மாத்திரமே பெற்றுக் கொள்ள முனைதல் வேண்டும்!

“மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.” (ஸுரத்துன் நிஸா 04:83)

குறிப்பாக சமூக ஊடகங்கள் வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை எச்சரிக்கைகளை அறிவுரைகளை தரவுகளை தகவல்களை ஊர்ஜிதம் செய்யாமல் உள்வாங்குவதோ பகிர்ந்துகொள்வதோ தொற்று நோய்களை விடக் கொடிய மன நோய் என்பதனை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும்!

அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தியோக பூர்வமாக வழங்குகின்ற தகவல்களை அறிவுறுத்தல்களை தாமும் கடைப்பிடிப்பதோடு தமது குடுமபத்தினர் உறவினர் நண்பர்கள் அண்டை அயலவர்கள் தொடர்பில் இருப்பவர்கள் என சகலருக்கும் தெரிவித்துக் கொள்ளுதல் கட்டாயமாகும்!

எத்தகைய சந்தர்ப்பத்திலும் நிதானம் தவறாது அனாவசியமான பீதி கொள்ளாது உரிய தற்காப்பு யுக்திகளை மேற்கொள்வதோடு தூய்மையாக இருந்து கொள்வதோடு சொல்லப் படுகின்ற ஆரோக்கியம் சார்ந்த வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்!


தொற்றும் தொற்றா நோய்கள் என சுகாதாரத் துறையினரால் அறிமுகம் செய்யப்படும் நோய்கள் விபத்துக்கள் மரணங்கள் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே மனிதர்களை அடைகின்றன என்ற இறைநியதிகள் குறித்த  ஆழமான நம்பிக்கை உள்ளத்தில் இருக்க வேண்டும்.

அவ்வாறான சோதனைகள் மற்றும் தண்டனைகளில் இருந்து நாம் பாதுகாப்பு தேடும் சுன்னத்தான துஆக்களை பொருளுணர்ந்து ஓதிக் கொள்வதோடு நாமறிந்த மொழிகளில் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்!

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தாரில் ஒருவரைத் தமது வலக் கரத்தால் தடவிக் கொண்டே பின் வரும் பொருளில் துஆ ஓதிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வே! மக்களின் ரட்சகனே!! தீங்கை அகற்றி பூரண சுகத்தைத் தந்தருள். நீயே பூரண சுகத்தை அளிப்பவன். உனது பூரண சுகமின்றி வேறு பூரண சுகம் என்பதே யில்லை. எந்த நோயையும் விட்டு வைக்காது பரிபூரண சுகத்தைத் தந்தருள்வயாக! (ஆயிஷா (ரழி) புஹாரி,முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் எவருக்கேனும் வியாதி ஏற்பட்டு விட்டால், குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பி ரப்பில் Fபலக், குல் அவூது பி ரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவர்கள் மீது ஊதுவார்கள். (ஆயிஷா (ரழி) முஸ்லிம்)

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 6743

“நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் அவனது வல்லமை கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4082

(நபி(ஸல்) அவர்களின் மற்றுமொரு துஆ  “யா அல்லாஹ்! குஷ்ட நோய்கள், பைத்தியம் பெரும் வியாதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்”. அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : அபூதாவூத் , நஸயீ

 “நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!”

“(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்.”

“இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.”

(ஸுரத்துல் பகரா 02: 155,156,157)


அவை இயற்கையான காரணிகள் மூலமாகவோ அல்லது செயற்கையான மனித செயற்பாடுகளூடாகவோ (உதரணமாக உயிரியல் ஆயுதங்கள், சூழல் மாசுபடுத்தப் படல்) ஏற்பட்டாலும் அவை நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சோதனையாகவோ தண்டனையாகவோ ஏற்படலாம் என நாம் விசுவாசிக்கின்றோம், என்றாலும் அவை குறித்து தீர்ப்புக் கூறுகின்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உரிமையை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது!

தொற்று நோய் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுவிட்டால் அரசாங்க மற்றும் பாதுகாப்பு துறைசார் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடித்தல், கடமைகளுக்கு அழைக்கப்பட்டால் காட்டாயமாக விரைந்து செல்லுதல் வேண்டும்!

நோய் நொடிகள் இயற்கை அனர்த்தங்கள் இன மத மொழி வேறுபாடுகள் பார்த்து வருவதில்லை என்ற வகையில் தனியாகவும் கூட்டாகவும் நிவாரணப் பணிகளில் மனிதநேயப் பணிகளில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தொடர் சேவை குழுக்களுடன் நாம் இணைந்து செயற்படுவது கட்டாயமான கடமையாகும்!


சமூக நிறுவனங்கள், மஸ்ஜிதுகள், மிம்பர் மேடைகள், ஏனைய வணக்கஸ்தலங்கள் பாடசாலைகள் ஊடாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வேண்டப்படுகின்ற உதவி உபாகரங்களை மனித நேயப் பணிகளை ஒருங்கிணைத்து செயற்படுவதும் கட்டாயமாகும்! 

சிலரிடம் நிபுணத்துவங்கள் இருக்கும், சிலரிடம் களத்தில் இறங்கி பணியாற்றும் அனுபவங்கள் ஆற்றல்கள் இருக்கும், சிலரிடம் வசதி வாய்ப்புக்கள் இருக்கும், இன்னும் சிலரிடம் அதிகாரங்கள செல்வாக்குகள் இருக்கும், மற்றும் சிலரிடம் வேறு ஏதேனும் துறைசார் தொழில் தொழில் நுட்ப நிபுணத்துவங்கள் இருக்கும், இவ்வாறான வளங்களை ஒருங்கிணைத்து முகாமை செய்கின்ற பொழுது இடர் கட்டுப்பாட்டு, நிவாரண மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் வெற்றிகரமான அடைவுகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

எமது அணுகுமுறைகள் நடத்தைகள் ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மனிதாபிமான விழுமியங்கள உயர் குணாதிசயங்கள் என எல்லாவற்றிலும் இவ்வாறான நெருக்கடியான நிலைமைகளில் நாம் சோதிக்கப் படுகின்றோம் என்பதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும், ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் நிச்சயமாக விசாரிக்கப் படுவோம்!
தொற்று நோய் அவசர நிலைகளின் பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்! தொற்று நோய் அவசர நிலைகளின் பொழுது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்! Reviewed by Madawala News on January 29, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.