ஹக்கீம் பிழை என்பதனால் வேட்பாளர் பொருத்தமற்றவரா?சட்ட முதுமாணி வை. எல்.எஸ்.ஹமீட் கேள்வி

(எஸ்.அஷ்ரப்கான்
ஹக்கீம் பிழை என்பதனால் வேட்பாளர் பொருத்தமற்றவராக இருப்பார்
 என்று மக்கள் தீர்மானித்து விடக் கூடாது என்று சட்டமு துமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கள நிலவரம் தொடர்பாக இன்று (10) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்தேகமில்லாமல் விமர்சிக்கப்படவேண்டியவரே! இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அவர் முஸ்லிம்களுக்காக எவ்வளவோ சாதித்திருக்கலாம். ஆனால் சாதித்தவை, தீர்வுகண்ட பிரச்சினைகள் பூச்சியம். 

ஆகக்குறைந்தது இந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கமுன் சில நிபந்தனைகளை வைத்து ஒரு ஒப்பந்தமாவது செய்திருக்கலாம். அதைக்கூட செய்யவில்லை. நிபந்தனை எதனையும் முன்வைக்காது ஆதரவு வழங்குவதன்மூலம் அவர் உருவாக்கியிருக்கின்ற நல்லுறவு, நன்நம்பிக்கை எவ்வளவு தூரம் முஸ்லிம்களுக்கு பயன்படப்போகின்றது? எவ்வளவு தூரம் அவர் பயன்படுத்துவார்? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரணிலுக்கும் அவருக்கும் இடையில் இருந்த புரிந்துணர்வு, நன்நம்பிக்கையை விடவா? ஆனாலும் அவரது 19 வருட தலைமைத்துவத்தில் அவர் சாதித்ததென்ன? தீர்வுகண்ட பிரச்சினைகள் எவை? இதுவரை காலமும் மறைந்த தலைவரின் சாதனைகளைத்தான் பேசிப்பேசி வாக்குப் பெறுகிறார்கள்.

எனவே, அவர் விமர்சிக்கப்பட வேண்டியவரே! மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்றைய ஜனாதிபதித் தேர்தல் மேடைகளை சிலர் அவரை விமர்சிக்கின்ற மேடைகளாகவே பாவிக்கின்றனர். தேர்தல் கேட்பது ஹக்கீமா? அல்லது சஜித், கோட்டாவா? என்பது புரியவில்லை.

ஹக்கீம் பிழை என்பதனால் வேட்பாளர் பொருத்தமற்றவாரா?
—————————————————-
இத்தேர்தலில் நாம் தீர்மானிக்க வேண்டியது இரு பிரதான வேட்பாளர்களில் ஒப்பீட்டளவில் யார் பாதிப்புக் குறைந்தவர்? என்பதாகும்.

இன்று நமது முன்னுரிமை (priorities) எவை? என்ற கேள்வியை எழுப்பினால் இவ்விரு ஆட்சியிலும் நமது கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் நமது பாதுகாப்பிற்கு குறைந்த பாதகம் யாருடைய ஆட்சியில் சாத்தியமாகலாம்? என்பதுதான் விடையாகும்.

எனவே, மேடைகளில் பேசுவோர் கடந்த ஆட்சி இவ்வாறு இருந்தது? இந்த ஆட்சி இவ்வாறு இருந்தது?

சமகாலத்தில் கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள், பேசுகிறார்கள், அவர்களது கொள்கைகள் இவ்வாறு இருக்கின்றன. மறுபக்கம் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள், பேசுகிறார்கள், கொள்கைகள் இவ்வாறு இருக்கின்றன.

இவை இரண்டையும் ஒப்பிடும்போது இந்த வேட்பாளர் குறைந்த பாதிப்பானவராக எங்களுக்குத் தெரிகின்றார். அதற்கான காரணம் இவை. எனவே, இவருக்கு வாக்களியுங்கள்; என்று பேசுங்கள்.

இருதரப்புக் கருத்துக்களையும் மக்கள் உள்வாங்கி அவர்கள் இந்த தரப்பு சொல்வதில்தான் நியாயமிருக்கிறது; அல்லது அடுத்த தரப்பு சொல்வதில்தான் நியாயமிருக்கிறது; என ஒரு முடிவுக்கு வருவார்கள்.

அதைவிடுத்து அந்தத் தரப்பு இந்த ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் பேசுவது; ஏதோ அந்த ஆட்சி முஸ்லிம்களின் நண்பனாக இருந்ததுபோல். 

இந்த தரப்பு அந்த ஆட்சியில் நடந்த கொடுமைகளை மட்டும் பேசுவது; இந்த ஆட்சியில் எல்லாம் நன்றாக நடந்ததுபோல்.

யாருக்காக இவ்வாறு பேசுகிறீர்கள்? உங்கள் மனச்சாட்சி எவ்வாறு இதற்கு இடம் தருகிறது? அவ்வாறாயின் நீங்கள் சமூகத்திற்காக பேசவில்லை. உங்களுக்காக பேசிக்கொண்டு சமூகத்திற்காக என்று நாடகமாடுகிறீர்கள்.

போதாக்குறைக்கு வேட்பாளர்களைப் பற்றிப்பேசுவதைவிட, ஹக்கீமைப் பற்றியே சில மேடைகளில் அதிகமாகப் பேசப்படுகிறது.

ஹக்கீம் சரியானவரா? பிழையானவரா? என்பது சஜித், கோட்டாவைவிட பாதிப்புக்கூடியவரா? குறைந்தவரா? என்பதைத் தீர்மானிக்குமா? அல்லது சஜித்தான் பாதிப்புக்குறைந்தவராக இருந்தால் ஹக்கீம் அவரை ஆதரிப்பதால் சஜித் பாதிப்பு கூடயவராகிவிடுவரா?

ஏன் மக்களைத் திசைதிருப்புகிறீர்கள்? இத்தேர்தலுக்குப்பின் பொதுத்தேர்தல் வர இருக்கிறது. இன்ஷாஅல்லாஹ், தாராளமாக ஹக்கீமை விமர்சியுங்கள். 

தற்போது ஏன் மக்களை திசைதிருப்புகிறீர்கள்?

எனவே, இரு பக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசி நீங்கள் ஆதரிக்கும் தரப்பு எந்தவகையில் பாதிப்புக்குறைந்தது? என்பதற்கான நியாயங்களை முன்வையுங்கள்.

அல்லது, எங்களது மேடை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபட்டதல்ல. இது ஹக்கீமை விமர்சிக்கும்மேடை எனப் பிரகடனப்படுத்திவிட்டு விமர்சியுங்கள்.

சஜித்தை ஆதரிப்பதற்கு ஹக்கீம் கூறுகின்ற காரணங்கள் ஏற்புடையதில்லை; எனில் அதற்குரிய நியாயங்களுடன் அவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்; பிரச்சினை இல்லை.

அதேபோன்று அவர்களும் நீங்கள் கூறும் காரணங்களை உரிய நியாயங்களுடன் மறுதலிக்கலாம்; பிரச்சினை இல்லை. 

தயவுசெய்து மக்களைத் திசைதிருப்பாதீர்கள். மிகவும் நிதானமாக முடிவெடுக்கவேண்டிய கட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். 

(எஸ்.அஷ்ரப்கான் )
ஹக்கீம் பிழை என்பதனால் வேட்பாளர் பொருத்தமற்றவரா?சட்ட முதுமாணி வை. எல்.எஸ்.ஹமீட் கேள்வி  ஹக்கீம் பிழை  என்பதனால் வேட்பாளர் பொருத்தமற்றவரா?சட்ட முதுமாணி வை. எல்.எஸ்.ஹமீட் கேள்வி Reviewed by Madawala News on November 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.