புலிகளிடம் கைப்பற்றிய பெருந்தொகையான தங்கத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர்..



கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் மற்றும் ஊழல்
மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாவும் எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகள் அனைத்தும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் தாம் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதாலேயே அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புடன் ராஜபக்‌ஷக்கள் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகைத் தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பதுக்கி வைத்தே தற்போது தேர்தல் பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக அமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், ஊழல் - மோசடிகள் குறித்து பேசியிருந்தோம். விசேடமாக நான் இந்த விடயங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.

எமது அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கின்ற போதும் இவை தொடர்பில் தொடர்ந்து பேசிவந்ததுடன், நடவடிக்கைகளையும் எடுக்க வலியுறுத்தினேன்.

ஆனால், விசாரணைகள் முழுமையாக நடைபெறவில்லை. ஊடகங்களைப் பயன்படுத்தியும் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை இறைத்தும் அவர்களது வழக்குகளை பதுக்கியதுடன் தாமதத்தையும் ஏற்படுத்தினர்.


நானும், அமைச்சர் சம்பிக்கவும் இணைந்து அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து விசாரணைகளை விரைவாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தினோம்.

லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட உட்பட பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதும் போத்தல ஜயந்த உட்பட பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையும் அனைவருக்கும் தெரியும்.

அவர்கள் காலத்தில் வெள்ளை வேன்களை செலுத்திய மற்றும் கடத்தப்பட்ட பலர் எம்முடன் தொடர்புகொண்டு நாட்டு மக்களுக்கு உண்மைகளை வெளியிட வேண்டுமென கூறினர்.

பலர் அச்சம் காரணமாக மறைந்து வாழ்கின்றனர்.

என்றாலும் இரண்டு பேர் தமது வெள்ளை வான் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அதனையே இன்று நாம் நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் கட்டாயம் அனைத்து விசாரணைகளும் ஆரம்பிக்கப்படும்.

தேர்தலுக்காக அவர்கள் பாரிய செலவை செய்கின்றனர். எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எவ்வாறு அப்படி செலவழிக்க முடியும்?

புலிகளிடமிருந்த பெருந்தொகை தங்கத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளனர். இலங்கையில் அவை வைக்கப்பட்டுள்ள சில இடங்கள் குறித்தும் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

புலிகளிடம் கைப்பற்றிய பெருந்தொகையான தங்கத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.. புலிகளிடம் கைப்பற்றிய பெருந்தொகையான தங்கத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.. Reviewed by Madawala News on November 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.