சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வழங்குகின்ற புள்ளடிகள், உங்கள் முதுகிலே நீங்கள் போடுகின்ற புள்ளடியாகவே அமையும்.



– றிசாத் ஏ காதர் –
முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பந்தங்கள் எதனையும் செய்வதற்கு மறுத்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்
சஜீத் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று, முஸ்லிம் கட்சிகளின் சில தலைவர்கள் கோருகின்றமையானது, முஸ்லிம் மக்களை கடலில் தள்ளிவிடுவதற்குச் சமனாகும் என்று, ஐக்கிய சமாதானகக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

ஜனாதிப வேட்பாளர் கோட்டடாபய ராஜபக்ஷவை ஆதரித்து ஐக்கிய சமாதான கூட்டமைப்பு நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை நிந்தவூர் அஷ்ரப் ஞாபாகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஹசன் அலி, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வழங்குகின்ற புள்ளடிகள், உங்கள் முதுகிலே நீங்கள் போடுகின்ற புள்ளடியாகவே அமையும்.

முஸ்லிம் சமூகம் சார்பில் சஜித் பிரேமதாஸவுன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை. முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் தனியாக வேறு உடன்படிக்கைகளை சஜித்துடன் செய்து கொண்டுள்ளனர். அந்த உடன்படிக்கைகள் அவர்களின் சொந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கானவை. அதற்கான புள்ளடிகளாகவே உங்கள் புள்ளடிகளைப் பாவிக்கப் போகின்றார்கள். எனவே மிகுந்த கவனத்துடன் இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.

நாம் இப்பெழுது எதிர்கொண்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இதுவரை நடந்த ஜனாதிபதித் தேர்தல்களை விடவும் முக்கியமானதாகவும். முஸ்லிம் மக்கள் அரசியல் ரீதியிலான திருப்புமுனையிலே நின்று கொண்டு, எந்தப் பக்கத்துக்கு செல்லவேண்டும் என்பதனை அறியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலே இந்த தேர்தல் வந்திருக்கின்றது.

அவ்வாறானதொரு தேர்தலிலே இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னணியிலே உள்ளவர். மற்றவர் பொதுஜன பெரமுனவின் பின்னணியிலே இருக்கின்றவர். இவர்கள் இருவரும் சிறுபான்மையினர் சம்பந்தமாக தேர்தல்கள் ஆரம்பித்தவுடனேயே சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகள் பற்றி என்னசொன்னார்கள் என்பதனை யோசிக்க வேண்டும்.

வேட்பாளராகவிருக்கின்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, சிறுபான்மைச் சமூகத்தினர் யாராகவிருந்தாலும் சரிதான், அவர்களுடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

தமிழ்த் தரப்பினர் அவர்களுடையசமூகப்பிரச்சினையினை முன்னிறுத்தி தம்முடன் பேசவருகின்ற வேட்பாளருக்கு மட்டும்தான் ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தனர். ஆனால், அவர்களுக்கும் அதே பதிலைத்தான் சஜீத் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவளிக்கின்ற முஸ்லிம் கட்சிகள்; நாங்கள் நிபந்தனையின்றி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து வாக்களிப்பதற்கு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுப்போம் என்றும், இந்த நாட்டிலே வாழுகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அது மிகவும் ஆபத்தானதாகும். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒரே தரப்பிடம் கூட்டிசென்று படுகுழியில் தள்ளுவதற்குச் சமனானதாகும். ஏனெனில் நமது உரிமையை மிதித்து, நம்மோடு பேச மறுக்கின்ற ஒரு வேட்பாளருக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சொல்லுவது நம்மை கடலில் தள்ளிவிடுவதற்குச் சமனானதாகும்.

அந்த நேரத்தில்தான், ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாங்கள், இந்த தேர்தலிலே எந்தவித பங்களிப்பும் செய்வதில்லை என்கிற தீர்மனத்துக்கு வரவிருந்த சந்தரப்பத்தில், இந்த முஸ்லிம் தலைவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு பக்கம் இழுத்துச் செல்லுகிற கேவலமான, கேடுகெட்ட விசயம் வெளிப்பட்டதற்கு பின்புதான், இந்த தேர்தலில் முஸ்லிம்களை வழிநடத்த வேண்டிய ஒரு தேவையும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது என்று நாங்கள் தீர்மானித்தோம்.

உடனே கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி, இந்த விசயத்தை ஆராய்ந்த பொழுது, முஸ்லிம் சமூகத்துக்கு மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தலைவர் அஷ்ரபுடைய காலத்திலேயே பட்டியலிடப்பட்ட விடயங்களுக்கும் புத்துயிர்கொடுத்தோம். அதனை பத்திரிகைகளிலே அறிக்கையிட்டோம்.

நாங்கள் வேட்பாளர்களுடன் பேசுவதற்கு தயராகவிருக்கின்றோம் என்று சொன்னவுடன், பொதுஜன பெரமுன கட்சி மாத்திரமே எழுத்துமூலமாக எங்களுக்கு கடிதத்தினை அனுப்பி வாருங்கள் உங்களுடன் கதைப்போம் என்று அழைத்தார்கள்.

அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு அதற்காக நான் நன்றி தெரிவிக்கவேண்டும். முதன் முதலாக நடந்த இரண்டு மணிநேர சந்திப்பிலே, பல விடயங்களை அளவளாவியிருந்தோம். முஸ்லிம்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதனைப் பற்றி பேசினோம். அதன் பின்னர் உங்களுடைய பிரச்சினைகளை எழுத்து மூலமான ஆவணமாக தயாரித்து எங்களிடம் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடியிலே நடந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட 22 தீர்மானங்களுக்கு அமைய, அவற்றினை ஒன்றுசேர்த்து 13 அம்சங்களாக தயாரித்து ஆவணமாக ஒப்படைத்தோம்.

பின்னர் 2வது கூட்டத்திலே அந்த 13 விடயங்கள் பற்றிபேசினோம். கடந்த பத்து வருடங்களாக இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் அவருடன் பேசியிருக்கின்றேன். அந்த விடயங்கள் ஏற்கனவே அவரும் புரிந்து வைத்திருந்தவைதான். அந்த விடயங்களை நிறைவேற்றித் தருவதற்குச் சம்மதித்தார். அதற்குப் பிறகுதான் அந்தக் கட்சியுடன் கடந்த முதலாம் திகதி அந்த 13 அம்சங்கள் அடங்கிய ஆவணத்தை புரிந்துணர்வு ஒப்பந்தமாக கைசாத்திட்டோம்.

அதன் பிறகுதான் மக்கள் முன்னிலையில் நாங்கள் வந்து பொதுஜன பெரமுனவுக்கு வாக்கு சேகரிக்கின்றோம்.

இப்படி முக்கியமான பல விடயங்கள் எங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பொழுது, நிபந்தனை இல்லாமல் ஒரு தரப்பினர் ஆதரவு வழங்குவதற்கு முஸ்லிம் சமூகத்தை நிர்ப்பந்தித்துள்ளனர். மக்களை கொத்தடிமைகள் என்றும், அவர்கள் சொல்வதனை மட்டும் செய்பவர்களாகவும், ஒன்றும் புரியாத எருமைக்கூட்டம் என்றும் நினைத்தே, இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்கள்.

இந்த நாட்டிலே முக்கியமான தேர்தல்கள் வருகின்ற பொழுதுதான் எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயலவேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் முஸ்லிம்களை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, இந்த முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டும், தனியாக வளர்ந்துகொண்டு போவதனை முஸ்லிம் சமூகம் இனிமேலும் அனுமதிக்கக்கூடாது.

கிழக்கு மாகணத்தில் மாத்திரம் நமது முஸ்லிமக்ளுடைய 62ஆயிரம் ஏக்கர் காணிகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த காணி விடயங்களை அலசி ஆராய்வதற்கு தனியான ஆணைக்குழுவினை நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். நமது பிரச்சினைகளை நேரடியாக கேட்டு அதற்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு அந்த ஆணைக்குழுவை நியமிப்புச் செய்வதற்கு அவர்கள் சம்மதித்திருக்கின்றார்கள்.

அதுபோன்று பல முக்கியமான விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கின்றன. எனவே இந்த தேர்தலில் நீங்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குகின்ற அந்த புள்ளடி – உங்களின் எதிர்கால பிரச்சினைகளுக்கு தீர்வினைத் தருகின்ற புள்ளடியாக இருக்கப்போகின்றது. நீங்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குகின்ற புள்ளடி – உங்கள் முதுகிலே போடுகின்ற ஒரு புள்ளடியாகவே அமையும்.

நமது மண்ணிலே வாழவிருக்கின்ற பேரக் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என பலரும் நிம்மதியாக வழ வைப்பதற்கான புள்ளடியாக கோட்டாவுக்கான புள்ளடிகள் அமையும். அந்த 13 அம்சங்களுக்குள்ளும் அத்தனையையும் உள்ளடக்கியிருக்கிறோம்.

நிபந்தனை இல்லாது, யாரோ பொய் சொல்லதற்காக, அவர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக அவர்கள் உங்களை வற்புறுத்துகின்றார்கள். அதிலிருந்து வாக்காளர்களாகிய நீங்கள் விலகி, நாங்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

இந்தக் கூட்டத்தில், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் நஸார் ஹாஜி உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வழங்குகின்ற புள்ளடிகள், உங்கள் முதுகிலே நீங்கள் போடுகின்ற புள்ளடியாகவே அமையும். சஜித் பிரேமதாஸவுக்கு முஸ்லிம்கள் வழங்குகின்ற புள்ளடிகள், உங்கள் முதுகிலே நீங்கள் போடுகின்ற புள்ளடியாகவே அமையும். Reviewed by Madawala News on November 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.