உரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

உரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.


முஸ்லிம்களுக்காக கட்சி உருவாக்கியுள்ளோம் எனக் கூறி, 
மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் சுக போகம் அனுபவித்தவர்கள் ஒற்றை வரி ஒப்பந்தம் கூட இல்லாமல் ஒரே பக்கமாக போய் நின்றதன் விளைவை இனிமேல் தான் அனுபவிப்போம். 


சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பான்மை கட்சிகளுடன் நம் பிரச்சினைகள் தொடர்பில் நாம் போடும் ஒப்பந்தங்களே நமக்குறிய ஓரளவு பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு ஆயுதமாக இருக்கும்.

முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் ஒப்பந்தமிட்டு ஆதரவு வழங்குங்கள். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்துங்கள், நம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக எழுத்தில் வாக்குறுதி பெற்று ஆதரவு வழங்குங்கள் என நாம் எத்தனை முறை கோரிய போதிலும் இந்த சமூகத்தின் தலைவர்கள் அதனை பொருட்படுத்தவும் இல்லை. சமூகத்தின் அங்கமாக இருக்கிற பொது மக்களில் பலருக்கு அதைப் பற்றிய கவலையிருக்கவும் இல்லை.

தம் அமைச்சுப் பதவிகளுக்காகவும், தமது சுகபோகங்களுக்காகவும் மாத்திரமே இந்த சமுதாயத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் சமூக தலைவர்கள் (?) ஒரே பக்கமாக இருந்ததின் தவறை இனிமேலாவது உணர வேண்டும் என்பது தான் அனைவரினதும் ஆசை.

ஆனால் இவர்களுக்குத் தான் சமூக அக்கறை என்ற நரம்பில் நோய் வந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டதே!

இப்போதே பேரம் பேச தயாராகியிருப்பார்கள்.
என்ன அமைச்சு? எத்தனை அமைச்சு? எத்தனை கெபினெட்? எத்தனை பிரதி அமைச்சு? எத்தனை ராஜாங்க அமைச்சு? இந்த பேரம் பேசும் படலம் இன்றே ஆரம்பித்து விடும். 

ஏனென்றால் சமூகத்திற்கான (?) அடுத்த பணியை செய்ய வேண்டுமே? அதற்கு அமைச்சுப் பதவிகள் வேண்டுமே?

ஒரே ஒரு பக்க ஒப்பந்தத்தை கூட இரு ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் செய்ய முடியாத கையாளாகாத தலைவர்களை கொண்ட ஒரு சமூகமாகவே இருந்து விட்டோம்.

ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் தரப்புக்கு ஆதரவு வழங்குங்கள் என்று நாம் கூறிய போதெல்லாம் நம்மை சேர்த்து வசை பாடிய சகோதரர்களே நாம் ஒப்பந்தம் போடுமாறு கூறியது ஏன் என்று இப்போதாவது புரிகிறதா?

ஒன்றும் தேவையில்லை. தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவியும், சுகபோகமும் தான் வேண்டும் என்று நினைத்து மக்களை ஏமாற்றித் திரியும் அரசியல் தலைவர்களை நம்பி ஒற்றை பக்கம் நின்ற சமூகம் தன் பிரச்சினைகள் தொடர்பில் இனி என்ன பேரம் பேசும்? யாரிடம் பேசும்? எந்தத் தலைவர் பேசுவார்?

மார்க்கம் பேசுவோர் அரசியல் வழிகாட்டல் வழங்குவதை விட்டும் பின் நின்று, இருக்கும் அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடித்து, சமூக பிரச்சினைகளை பற்றிய எவ்வித கவலையும் அற்று, எந்தப் பிரச்சினை வந்தாலும் ஹக்கீமோ, ரிஷாதோ பார்த்துக் கொள்வார்கள் என்று ஓடியதின் விளைவு இனி இந்த சமூகத்திற்கு புரியும். 

எது எப்படியோ? இறைவன் நாட்டமே அனைத்தும்.

அவன் விரும்பியோருக்கு ஆட்சியை வழங்குவான்.

அவன் விரும்பியோரை வீழ்ச்சியடையச் செய்வான்.
என்பது இஸ்லாத்தின் தெளிவான அடிப்படைக் கொள்கையாகும். 

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு எதிர்காலத்தை சந்திப்போம். 

இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலம் புத்தியற்ற, சமூக அக்கறையற்ற, சுயநல தலைமைகளை நம்பி நடுத்தெருவில் நிற்க்காமல் இஸ்லாத்தை சரியாக புரிந்து, நீதியான நேர்மையான, சமூக அக்கறை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபடுவோமாக!

"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்' 

அல்குர்ஆன் : 07:128

ரஸ்மின் MISc

உரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். உரிமையை விட உணர்வுக்கு மதிப்பளித்ததின் விளைவை இனியாவது இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5