இந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித் - Madawala News Number 1 Tamil website from Srilanka

இந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித்


இந்த நூற்றாண்டின் சிறந்த பூமியை உருவாக்குவதற்கு அனைவரும் 
ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிப்போம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டுமக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.

'என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி' என்று குறிப்பிட்டு சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 20 வருடகால எனது அரசியல் பயணத்தில் நான் கூறியவற்றையும், செயற்படுத்தியவற்றையும் பற்றிக் கேட்டுப்பாருங்கள்.

 நாம் உலகிற்கு மிகவும் முன்மாதிரியான வீடமைப்புத்திட்டத்தை செயற்படுத்தினோம். அதன்மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஒதுங்க நிழல் கிடைத்தது.

'சசுனட்ட அருண' வேலைத்திட்டத்தின் கீழ் பௌத்தசாசனத்திற்கு புது அர்த்தம் வழங்கியிருக்கிறோம். மனிதகுலத்தின் இளைய தலைமுறையான குழந்தைகளின் நலன்கருதி அறநெறிப் பாடசாலைகளைக் கட்டியெழுப்பினோம். கலைஞர்களுக்கு குறுகிய காலத்தில் பெருமளவில் சேவையாற்றியிருக்கிறோம்.

இடைவிடாது கடந்த 20 ஆண்டு காலமாக நான் சேவையாற்றியதை எவராலும் கணக்கிட முடியாது. 

நான் ஓயாமல் உழைப்பது தொடர்பில் சில விமர்சகர்கள் கேலி, கிண்டல் செய்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அத்தகைய கேலிப்பேச்சுக்களை விடவும் மக்களின் துயர் துடைப்பது எனக்கு மிகவும் பெறுமதி மிக்கதாகும். எதிராளியின் கேலி, கிண்டல்களைப் புறக்கணித்து அவர்களுக்குப் பதில் அளிப்பதற்கு ஒன்றிணைவோம். இந்த அழகிய தீவை மேலும் அற்புதமாய் கட்டியெழுப்புவோம்.

 ஒரு நிலையான பொருளாதாரத்தையும், நாகரிகம் மிக்க பூமியையும் உருவாக்குவோம். வரலாற்றில் மிக அருமையான தருணங்களைக் கொண்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். ஒரே பிரார்த்தனையுடன் நிலையான வளர்ச்சியின் மூலம் உறுதியான நாட்டை உருவாக்குவோம் என அவர் தெரிவித்தார்.
இந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித் இந்த நூற்றாண்டின் அற்புதமான பூமியை உருவாக்குவேன் : சஜித்  Reviewed by Madawala News on October 16, 2019 Rating: 5