ஊமைக்கு வாய்ப்பூட்டு ! - Madawala News Number 1 Tamil website from Srilanka

ஊமைக்கு வாய்ப்பூட்டு !


சுட்டித்தனமான அல்லது ஏதாவது ஒன்றைக் கேட்டு அழுதுகொண்டே இருக்கும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்
திருமண வீட்டிற்கோ அல்லது குடும்பத்தில் இடம்பெறும் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றுக்கோ அழைத்துச் சென்றால், நீ வாயைத் திறக்க வேண்டாம், ஏதாவது பேசி வீண் கரச்சல் கொடுத்தால் இங்கு உள்ளவர்கள் நம்மைக் கேலி செய்வார்கள். நான் போகும்போது செல்லத்துக்கு சொக்லேட் வாங்கித் தருகின்றேன் என்று வாயில் ஆட்காட்டி விரலை வைத்து பெற்றோர் அதட்டி வைப்பார்கள்.இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் கிட்டத்தட்ட அப்படியான ஒரு நிலையிலேயே இருத்தப்பட்டுள்ளது. யார் என்ன சொன்னாலும், இம்முறை தேர்தல் பந்தயமானது முற்றுமுழுதாக முஸ்லிம்களையும் இனவாதத்தையும் துருப்புச் சீட்டாகக் கொண்டே நடைபெறப் போகின்றது. எல்லா வேட்பாளர்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு தேவை ஆனால் முஸ்லிம்களுடன் பகிரங்கமாக உடன்படிக்கை செய்ய மாட்டார்கள்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவதாக அவர்கள் பொதுவெளியில் உறுதியளிக்கவும் இல்லை. குறைந்தபட்சம், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை, நீண்டகால எதிர்பார்ப்புக்களை அரசியல்வாதிகள் பேசுவதற்கும் வரையறைகளும் தணிக்கையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தேர்தல் பொதுவாக சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை வைத்துத்தான் விளையாடப்படப் போகின்றது.


இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது, நக்குண்டு நாவிழந்து முஸ்லிம் அரசியல், இனவாதத்தில் ஊறித் திளைத்த பெருந்தேசிய மனப்பாங்கு, ஆறாம் அறிவைப் பயன்படுத்தாமல் தொடர்ந்தும் பிழையான தலைமைத்துவங்களையும் பிரதிநிதித்துவங்களையும் தெரிவு செய்யும் முஸ்லிம் மக்களின் கண்மூடித்தனம் மற்றும் மடையர் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் தாக்குதல்கள் போன்றவை இவற்றுக்கு முதன்மைக் காரணங்கள் எனலாம்.


ஒரு காலத்தில் பெருந்தேசிய ஆட்சியாளர்களிடம் பேரம் பேசும் அரசியலாக இருந்த முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அடையாள அரசியல், பின்னர் உருக்குலைந்து சிங்கள ஆட்சியாளர்களிடம் பிச்சை கேட்கும் அரசியலாக மாறிப் போனதற்கும் மேற்குறிப்பிட்டவற்றில் முதல் 3 விடயங்களே காரணிகளாக இருந்து வருகின்றன. இதனை மாற்றுவதென்றால், பணத்திற்கும் பதவிக்கும் பின்னால் போகின்ற அரசியல்வாதிகளை மாற்றுவதுடன், அதிகாரமும் வசதியும் உள்ள அரசியல்வாதிதான் வல்லவர் என்றெண்ணும் முஸ்லிம் மக்களின் மனோநிலையும் மாற்றப்பட வேண்டும்.

சிறுபான்மை அவசியம்

இந்தத் தேர்தலில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாத பட்சத்தில் அடுத்த சுற்றில் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இது உண்மையிலேயே சிறுபான்மைச் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும்.; இந்த யாப்பை வரைவதில் மூளையாக இருந்து செயற்பட்ட (சிறுபான்மையினத்தவர்) ஒருவர் ஜே.ஆருக்கு நிறைவேற்றதிகாரத்தை வழங்கிவிட்டு, 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆணை வேண்டும் என்ற உப பிரிவை மிக நுட்பமாக சேர்த்துள்ளாராம். அவ்வாறில்லாமல்,  45சதவீதமான அல்லது அதிக வாக்குகளை எடுத்த வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்று அரசியலமைப்பில் எழுதியிருந்தால், மிக இலகுவாக தனிச் சிங்கள வாக்குகளாலேயே ஜனாதியாகி இருப்பார். துமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு சல்லிக்காசுக்கும் பெறுமதியற்றவர்களாக ஆகியிருப்பர்.


இம்முறை கடுமையான போட்டி நிலவுவதால் சிறுபான்மையினரி;ன் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் மூன்று பிரதான வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம்களை நோக்கி நேசக்கரம் நீட்டப்படுகின்றது. இரு மாதங்களுக்கு முன்பு வரை உச்சாணிக் கொம்பில் நின்று ஆடிய இனவாதம் இப்போது அடக்கி வாசிக்கின்றது. சில கடும்போக்காளர்களின் வாய் 'ஒஃப்' செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இனவாதத்திற்குப் பின்னால் இருந்து பெருந்தேசியக் கட்சிகள்தான் ஆட்டுவித்துள்ளன என்பதை இதன்மூலம் நன்றாக உய்த்தறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.ஆயினும், சஜித் பிரேமதாசவும் சரி, கோத்தாபய ராஜபக்சவும் சரி 15 இலட்சம் வாக்குகளைக் கொண்ட இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை வேண்டி நிற்கின்ற போதும், சிங்கள மக்கள் முன்னிலையில், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இனவாத நெருக்குவாரங்கள், கலவரங்கள், மத ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசுவதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. அது தொடர்பில் வாக்குறுதிகளை வழங்குவதற்கு கடுமையாக யோசிக்கின்றனர்.
நாம் முஸ்லிம் சார்பு வேட்பாளராக கருதப்பட்டு விடுவோமோ, அதனூடாக இதோ முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் தொடர்புள்ள வேட்பாளர் இவர்தான் என்று எதிர்தரப்பு பிரசாரம் செய்யத் தொடங்கி விடுமோ என்று அஞ்சுகின்றார்கள். ஐந்து இலட்சம் முஸ்லிம்களின் வாக்குகளை எடுக்கப்போய், அதனால் 10 இலட்சம் சிங்கள வாக்குகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகக் குறியாக இருக்கின்றனர். இதுதான் யதார்த்தமும் கூட.

ஒப்பந்தம் இல்லை

இந்த தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் எந்த வேட்பாளருக்கேனும் ஆதரவளிக்க வேண்டுமென்றால் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கக் கூடாது என்று நாம் கடந்த கட்டுரைகளில் வலியுறுத்தி இருந்தோம்;. முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு எழுத்துமூலம் உடன்படும் வேட்பாளருக்கே முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.


இருப்பினும், நடைமுறைச் சூழலில் மேற்குறிப்பிட்ட நிலைமைகளால் எழுத்துமூல உடன்படிக்கை என்பது கனவாகிப் போய்விட்டது, இந்த விடயத்தில் இம்முறையும் முஸ்லிம்கள் செல்லாக்காசாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒப்பந்தம் செய்வதே காத்திரமானது என்றாலும், சிறுபான்மையினரின் நிபந்தனைகளை கடும்போக்காளர்கள் மட்டுமன்றி பௌத்த உயர்பீடங்களும் வேறு கோணத்திலேயே பார்க்கின்றன என்பதை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனை குறித்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கூறியுள்ள கருத்து ஒரு பதச் சோறாக அமைந்துள்ளது.


இந்தப் பின்னணியில்தான் வழக்கம் போல நல்லெண்ண, நம்பிக்கை அடிப்படையில், நிபந்தனையற்ற விதத்தில் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 'சும்மா' ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ளன. அரசியலைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற  நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவளித்த தேசிய காங்கிரஸ் கட்சி கூட அந்த உடன்பாட்டை எழுத்தில் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை.
முஸ்லிம்களின் சில பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் அதனடிப்படையில் ஆதரவளிப்பதாகவும் றவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்தாலும் சஜித் அதற்கு உடன்பட்டதாக அறிவிக்கவும் இல்லை. உடன்படிக்கை செய்து கொள்ளவும் இல்லை.
இதேவேளை, சற்று காலமெடுத்துச் சிந்தித்து, ஆராய்ந்து கடைசியில் எதிர்பார்க்கப்பட்டபடி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கின்ற றிசாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சி, சஜித்திடம் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளதாக அறிய முடிகின்ற போதும், ஒப்பந்தம் ஒன்றை செய்யவில்லை. இனிமேல் முஸ்லிம் கட்சிகள் விரும்பினாலும், சஜித்தோ கோட்டாவோ முஸ்லிம் தரப்புடன் ஒப்பந்தம் செய்யவே மாட்டார்கள் என்பதே நிதர்சனமாகும்.


இந்த அடிப்படையில் நோக்கினால், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போகின்றனர். இன்னும் ஒரு பிரிவினர் கோத்தாவை ஆதரிக்கவுள்ளனர். மாற்றுத் தெரிவை தேடுவோர் அனுரகுமாரவுக்கு வாக்களிப்பார்கள். சிங்கள வேட்பாளர்களில் நம்பிக்கையற்ற மற்றும் முஸ்லிம் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எண்ணும் முஸ்லிம்களின் ஒருசிலர், சுயேட்சை வேட்பாளர் ஹிஸ்புல்லாவுக்கு வாக்களிக்கலாம். ஆனால் அவர் வேறு யாருக்காவது வாக்களிக்கச் சொன்னால் அவரது பேச்சைக் கேட்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும்.

உரையாற்றத் தடை


தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், ஒரு விடயத்தை நன்கு கவனிக்க வேண்டும்.  அதாவது, வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் செறிவாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரமே முஸ்லிம் அரசியல்வாதிகளால் பரிந்து பேசப்படும் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும் என்பதையும், மலையகத்திலும் தென்னிலங்கையிலும் சிங்கள மக்களுக்கு மத்தியில் சிறுதொகையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அவ்வாறு செயற்பட முடியாது. அதன்படி அப்பகுதி சிங்கள மக்களின் நிலைப்பாடுகளையே முஸ்லிம்களும் எடுக்க நேரிடும் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் எல்லா வேட்பாளர்களுக்கும் இன்றியமையாததாக தேவைப்படுகின்ற போதும், முஸ்லிம் கட்சிகளுடனோ அரசியல் அணிகளுடனோ உடன்படிக்கை ஒன்றை எழுத்து வடிவில் செய்து கொள்ள அந்த வேட்பாளர்கள் தயாரில்லை. முஸ்லிம்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கூறி, 'நான் ஜனாதிபதியானால் இந்த இந்த விடயங்களுக்கு தீர்வு தருவேன்' என்று கூறுவதற்கும் சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் அவர்களை தடுக்கின்றது,


இதுகூட பரவாயில்லை. இதற்கு ஒரு படி மேலே சென்று முஸ்லிம் தலைவர்களை சஜித் பிரேமதாச கலந்து கொள்ளும் கூட்டங்களில் பெரிதாக உரையாற்ற வேண்டாம் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது, இது உண்மையென்றால், அது மிகவும் மோசமான ஒரு அரசியல் சூழல் என்றே கூற வேண்டும்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டத்தில் முஸ்லிம் கட்சித் தலைவர்களும், ஓரிரு தமிழ் அரசியல்வாதிகளும் உரையாற்றியதைக் காணக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்துப் பார்;த்த போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் உரையாற்றினால் சிங்கள கடும்போக்காளர்களால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தினால் றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் போன்ற முஸ்லிம் தலைவர்கள் உரையாற்றவில்லை என்றும், இவர்கள் உரையாற்றாமையால் தமிழ் அரசியல்வாதிகள் ஓரிருவரும் உரையாற்றாமல் தவிர்ந்து கொண்டதாக தெரியவருகின்றது.


முஸ்லிம்கள் பற்றிய பார்வை கடந்த ஏப்ரலுக்குப் பிறகு விகாரமானதாக மாறியிருக்கின்றது. தமிழ் கட்சிகள் வேட்பாளர்களுடன் உடன்படிக்கை செய்தால் எவ்வாறு இதோ தனிநாடு கொடுக்கப் போகின்றார்கள் என்று கடும்போக்காளர்கள் கூக்குரலிடுவார்களோ அதுபோலவே, முஸ்லிம் தரப்பு ஒப்பந்தம் செய்தாலும் பயங்கரவாதிகளுடன் உடன்பாடு என்று கதைகட்டி விடுவார்கள். இது அந்த வேட்பாளருக்கே பாதகமாகலாம் என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.


ஆனால், தேர்தலை முன்னிட்டு தனியே சென்று பிரசாரம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சிங்களப் பிரதேசங்களில் சஜித் கலந்து கொள்ளும் மேடையில் பேசுவதற்கு கூட தடை போடப்படுமானால் அது பாரதூரமான விடயமாகும். கோத்தபாய ராஜபக்சவின் மேடையில் கூட முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக உரையாற்றுவதற்கு 'கட்டுப்பாடுகள்' இருப்பது போலவே தோன்றுகின்றது.

மோசமான நிலை

முஸ்லிம்களின் நிலைமையைப் பாருங்கள்! முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும். உடன்பாடு செய்ய முடியாது. நிபந்தனையற்ற ஆதரவையும் முஸ்லிம் கட்சிகள் தர வேண்டும். ஆனால், குறைந்தபட்சம் முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதான வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் மேடைகளில் பேசுவதற்கு இடமளிக்கப்படாமை அல்லது அடக்கி வாசிக்க பணிக்கப்படுகின்றமை அறவே நியாயமற்றதாகும்.


முஸ்லிம் தலைவர்கள் கதைத்து ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை. அப்படி எத்தனையோ வாய்ப்புக்களை அவர்கள் தவறவிட்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்காக 'கடும்போக்காளர்கள் குழப்புவார்கள்' எனப் பயந்து முஸ்லிம் சமூகத்தை அவர்களது குரலை ஒழித்து வைத்து விட்டு, இரகசிய ஆதரவைக் கோருவது நல்லதல்ல. ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு முஸ்லிம்கள் செய்யும் பங்களிப்பு இதனால் வெளித் தெரியாமல் மறைக்கப்படலாம்.


கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு இந்த நிலைமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மைக் காரணம் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பதவி ஆசையும் பணமோகமும் ஆகும். இவை இரண்டும் சமூகத்தின் மீதான அக்கறையை இரண்டாம்பட்சமாக ஆக்கியுள்ளன. 'இவர்கள் என்ன செய்தாலும் நம்முடன் வருவார்கள்' என்று சஜித்தும், 'அவருக்கு நம்மை விட்டால் வேறு தெரிவில்லை' என்று கோத்தபாயவும் குறைத்து மதிப்பிடும் கையறு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தெளிவுபடுத்தல் அவசியம் 


இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள் மற்றும் மத ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசாமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளின் இழி செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், சிங்கள கடும்போக்கு சக்திகள் குழப்பும் என்ற அச்சத்தின் காரணமாக, முஸ்லிம்களின் பிரச்சினைகள், உரிமைகள் பற்றி பொதுவெளியில் பேசாமல் அடக்கி வாசிக்க வேண்டும் என்று யாராவது நினைப்பார்களாயின் அது ஒரு பிழையான முன்னுதாரணமாக அமையும்.
சமூகத்தைப் பற்றிப் பேசாமல் (நக்குண்டு) நாவிழந்து போயுள்ள முஸ்லிம் அரசியலுக்கும், கிட்டத்தட்ட ஊமையாகிப் போன முஸ்லிம் சமூகத்திற்கும் இடப்பட்டுள்ள வாய்ப்பூட்டாகவே இதை கருத வேண்டியுள்ளது. முஸ்லிம்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்குவதற்கும் இரகசிய 'டீல்'களை மேற்கொள்வதற்கும் காரணமாகலாம் என்பதை மறந்துவிடக் கூடாது.


றவூப் ஹக்கீமைப் பற்றிய பிரச்சினை அல்லது றிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தெளிவான அடிப்படையில், சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பொதுத் தளத்தில் முன்வைக்கப்பட வேண்டும். அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.


சிங்கள ஆட்சியாளர்களும் அதேபோன்று, சஜித், கோத்தா, அனுர போன்ற வேட்பாளர்களும் மிகவும் நூதனமான முறையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை சிங்கள மக்களுக்கு வியாக்கியானம் செய்ய வேண்டும். தேர்தல் காலம் என்பதால், இனவாதப் பேயை கீசாவில் அடைத்து வைக்க பெருந்தேசியத்தால், இந்தக் காரியத்தை செய்வது சீன வித்தை போல சிரமமான காரியமல்ல. 


முஸ்லிம்களின் பிரச்சினைகளை, அபிலாஷைகளை குறிப்பாக இனவாத நெருக்குவாரங்கள் பற்றிய உளக் கிடக்கையை சிங்கள சமூகத்தின் மத்தியில் பேசுவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதும், றிசாட் மற்றும் ஹக்கீம் போன்றோர் பேசுவதால் இன்னும் சர்ச்சைகள் ஏற்படலாம் என்பதென்னவோ நிதர்சனம்தான்.


அதற்காக, முஸ்லிம்கள் வாய்மூடி, மௌனமாக, பிரகடனப்படுத்தப்படாத ஒரு அடிமைச் சமூகம் போல இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.


- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 21.10.2019)
ஊமைக்கு வாய்ப்பூட்டு ! ஊமைக்கு வாய்ப்பூட்டு ! Reviewed by Madawala News on October 21, 2019 Rating: 5