வெறுமனே ஒரு வேட்பாளரை நியமிப்பதால் மட்டும் எல்லாம் சரி என்று சொல்ல முடியாது.



வெறுமனே ஒரு வேட்பாளரை நியமிப்பதால் மட்டும் எல்லாம் சரி

 என்று சொல்ல முடியாது. பரந்துபட்ட கூட்டணியின் ஆத ரவு இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்' என்று பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொது ஜன பெரமுன (மொட்டு கட்சி) ஆகியவற்றின் பலம் மற்றும் பலவீனம் தொடர்பாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எமக்குப் பேட்டியளித்தார்.


கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவதை அதிக அளவிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் எவரும் நிறைவேற்ற வேண்டிய சில முன்நிபந்தனைகள் உள்ளன. இதில் முதலாவதும் முக்கியமானதும் பரந்துபட்ட ஜனநாயகக் கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என்பதாகும். ஜனாதிபதித் தேர்தலின் ஒருபுறத்தில் ராஜபக்ஷ குடும்பம் உள்ளது. அவர்களது குடும்ப ஆதிக்கம் இப்போதும் தொடர்கிறது. இந்த நாடு முழுவதும் தங்களது சொந்தம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலர் அமெரிக்க குடிகள். ஆனால் இலங்கையில் தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை பற்றி அவர்கள் பேசுகின்றனர். அவர்களை தோற்கடிக்க வேண்டுமானால் அவர்களுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியமாகும்.


அவ்வாறு ஒன்றிணையும் பரந்துபட்ட கூட்டணியின் தலைமைத்துவம் தனியொருவரிடம் இருப்பதை விட ஒரு அமைப்பாக இருப்பதுதான் இப்போதைக்கு சிறந்ததாகப் படுகிறது. கடந்த ஆறு மாத காலத்தில் எமது செலவீனம் 2200 பில்லியன் ரூபாவாகும். அதேநேரம் எமது வருமானம் 900 பில்லியன் ரூபா மட்டுமே. கடந்த வருடம் மட்டும் எமது வருமானத்தை விட 108 சதவீதத்தை நாம் வாங்கிய கடனுக்கு வட்டியாக செலுத்த வேண்டியிருந்தது. இது தொடருவதை நாம் அனுமதிக்க முடியாது. ஒரு சில நாடுகளைப் போல நாமும் கடன் சுமையில் சிக்கியுள்ளோம். எனவே இந்த கடன் சிக்கலில் இருந்து மீளும் வழியை அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன் ஸ்தம்பித நிலையில் உள்ள பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் அவருக்கு உள்ள மற்றைய பொறுப்புகளாகும்.


அடுத்தது தேசிய பாதுகாப்பு விடயம். நாடு மிகவும் மோசமான பாதுகாப்பு சிக்கலில் உள்ளது என்று காட்டிக் கொள்ள ராஜபக்ஷ தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மை அதற்கு மாறாகவே உள்ளது. ராஜபக்ஷ தரப்பினர் உண்மை நிலையை மிகைப்படுத்துகின்றனர். சிக்கல் நிலையை உருவாக்கி விட்டு அவர்களே தீர்வையும் முன்வைப்பதுதான் அவர்கள் திட்டம். இந்த புதுவகை பயங்கரவாதத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


மூன்றாவது விடயம் இந்த நாட்டை உண்மையிலேயே யார் ஆட்சி செய்யப் போகின்றனர் என்பதாகும். இதுவரை நாட்டை ஆண்டவர்களில் சிலர் அரச சொத்தை கொள்ளையடித்தவர்கள். மற்றையோர் ஊழல்வாதிகளுக்கு உதவியவர்கள். மற்றும் சிலர் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தவர்கள்.


கேள்வி: கூட்டணியை அமைப்பதை விட வேட்பாளரை தெரிவு செய்வது முக்கியமில்லையா? எதிர்க் கட்சியினர் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து விட்டார்களே! ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தெரிவினை தாமதப்படுத்தினால் அது கட்சியைப் பாதிக்காதா?


பதில்: இல்லை. இங்கு இரு விடயங்கள் சமாந்தரமாக இடம்பெற வேண்டும். வெறுமனே ஒரு வேட்பாளரை நியமிப்பதால் மட்டும் எல்லாம் சரி என்று சொல்ல முடியாது. பரந்துபட்ட கூட்டணியின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். வெற்றியை எப்படி பெறுவது என்பதை அந்த பரந்துபட்ட கூட்டணியின் ஆதரவுடன் வகுத்துக் கொண்டால் வேட்பாளர் யாராக இருந்தாலும் பிரச்சினை இல்லை. இதுவே சரியான அணுகுமுறை. 2015 இல் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக முன்வைக்கப்பட்டார். பல்வேறு தரப்பினர் அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். ஆனால் இம்முறை தனி ஒருவரை நியமித்து அவர் எம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வார் என்று கூறுவது சரியானதல்ல. நாம் அனைவரும் கூட்டு முயற்சியின் மூலமே வெற்றியைப் பெற முடியும். ராஜபக்ஷ தரப்பு இந்த விடயத்தை வேறு விதமாக கையாண்டது. காலை நேர உணவு மேசையில் வைத்தே அவர்கள் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்தனர். அவர்களது குடும்பம்தான் அவர்களது அணி. மற்றையோர் அவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.


கேள்வி: பிரபுத்துவ குடும்ப அரசியல் மற்றும் இராணுவ பின்னணியுடன் கூடிய அரசியல் தலைவர்களை நீங்கள் விரும்பவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை குறிப்பிடவில்லையா?


பதில்: ராஜபக்ஷ தரப்பினரின் அரசியல் குடும்ப ஆதிக்கத்தை மையப்படுத்தியதாகும். அனைத்து முக்கிய அமைச்சுப் பதவிகளும் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இராணுவ தரப்பினருக்குமே வழங்கப்படும். யுத்த வெற்றியாளர்களுக்கும் இராணுவ குழுவினருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்துக்கு யுத்த வெற்றியாளர்கள் கடற்படையினரின் வேலையை தனியாருக்கு கொடுக்க மாட்டார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்டதுதான் அவன் கார்ட் விவகாரம். இதன் மூலம் அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய 11 பில்லியன் ரூபா நிதி தனியார் கைகளுக்குச் சென்றது. யுத்த வெற்றியாளர்கள் இராணுவ தலைமையகத்தை தனியார் தரப்புக்கு விற்று விட்டு அந்தப் பணத்தில் தங்காலையில் ஹோட்டல் வாங்க மாட்டார்கள். யுத்த வெற்றியாளர்கள் மிக் விமானங்களை வாங்கி கிடைத்த கமிஷன் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைக்க மாட்டார்கள்.


யுத்த வெற்றியாளர்கள் இராணுவ புலனாய்வாளர்களை அடிமட்ட அரசியல் வேலைகளுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். தௌஹீத் ஜமா அத் இயக்கத்துக்கு 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நிதி வழங்கியது யார் என்பதை நாம் விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமன்றி புலிகள் இயக்கத்துக்கும் சில தீவிரவாத பௌத்த அமைப்புகளுக்கும் நிதி உதவி வழங்கியவர்களைப் பற்றி ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரிக்க வேண்டும்.தௌஹீத் ஜமா அத் அமைப்பை மறைத்து வைத்தது ராஜபக்ஷ தரப்பினர்தான். அதனால்தான் நாம் பாதிக்கப்பட்டோம். இப்போது அவர்கள் தேசிய பாதுகாப்பு பற்றிப் பேசுகின்றனர்.


கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரால் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்று சிலர் கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?


பதில்: 2015 ஜனாதிபதித் தேர்தலில் இலகுவாக வெற்றி பெற்று விடலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ நினைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் நடந்தது என்ன? அதேபோன்று முறையான கூட்டணியை அமைத்து போட்டியிட்டால் இந்த முறையும் எமக்கு வெற்றி கிடைக்கும்.


கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவையா?


பதில்: சிங்கள மக்களின் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக் கூடிய சாத்தியம் இருக்கிறது.16 மில்லியன் வாக்காளர்களில் 75 சதவீதம் சிங்களவர்கள் எனினும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண்பது அவசியம். அவர்களுக்கு பொய் வாக்குறுதி வழங்கி வீண் நம்பிக்கைகளை ஏற்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாக அவர்களுக்கு என்ன தர முடியுமோ அதைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஏமாற்றியவர்களாகி விடுவோம். எனவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்தால் ஒருமைப்பாட்டுடன் கூடிய சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம்.


உதித்த குமாரசிங்க

வெறுமனே ஒரு வேட்பாளரை நியமிப்பதால் மட்டும் எல்லாம் சரி என்று சொல்ல முடியாது. வெறுமனே ஒரு வேட்பாளரை நியமிப்பதால் மட்டும் எல்லாம் சரி என்று சொல்ல முடியாது. Reviewed by Madawala News on September 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.