முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்தியவர் பாக்கீர் மார்க்கார் : ரவூப் ஹக்கீம்


முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்தியவர் பாக்கீர் மார்க்கார்: நினைவுரையில் ரவூப் ஹக்கீம்



முன்னாள் சபாநாயகர், தேசமானிய மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மார்க்காரின் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை வானொலி செய்தி சேவைக்கு வழங்கிய உரை.

இலங்கை முஸ்லிம்களின் அரசியலை உரிய முறையில் நெறிப்படுத்தியவர்களின் வரிசையில் முன்னணியில் திகழும் ஆளுமைகளில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் தேசமானிய மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மார்க்கார் மறைந்து 21 ஆண்டுகள் நிறைவு பெறுவதையிட்டு அன்னாரை நன்றியெய்தலோடு நினைவுப்படுத்துகின்றோம்.

கடந்த வாரம் இலங்கை முஸ்லிம்களின் இன்னுமொரு ஆளுமைமிக்க ஒருவரான மர்ஹூம் சேர். ராஸீக் பரீத் பற்றி இவ்வாறான உரையை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆற்றியிருந்தேன்.

அவ்வாறே இந்த வரிசையில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள மற்றுமொரு ஆளுமையான முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எப்.அஷ்ரஃபின் 19ஆவது நினைவு தின நிகழ்வை எதிர்வரும் 16ஆம் திகதி நடத்தவிருக்கின்றோம்.

சமூகத்திற்கு உகந்த அரசியல் செல் நெறியை எமக்கு கற்றுத் தந்த இவ்வாறான முஸ்லிம் தலைவர்கள் மக்கள் மனங்களில் நீங்காது நிறைந்திருக்கின்றார்கள்.

இன்று நாம் நினைவுகூர்கின்ற மர்ஹூம் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் 1917 மே 12ஆம் திகதி பேருவளை மருதானை மண்ணில் ஹக்கீம் விழாவில் புகழ்பூத்த யூனானி மருத்துவ பரம்பரையில் ஹக்கீம் அலியார் முஹம்மத் மரிக்கார் மற்றும் ராயிழா உம்மா தம்பதிகளின் அருமை புதல்வராக அவதரித்தார்.

ஆரம்ப கல்வியை கொழும்பு புனித செபஸ்டியன் வித்தியாலயத்தில் கற்ற அவர் பின்னர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் மர்ஹூம் டி.பி. ஜாயா அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரது கண்காணிப்பில் மாணவராக பயின்ற காலம் மிகப் பெறுமதியான காலமாக கருதப்படுகின்றது.

மர்ஹூம் டி.பி. ஜாயா இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ள தேசிய வீரர்களில் ஒருவராக கணிக்கப்படுகின்ற அந்தஸ்த்தில் இருக்கின்ற அவர், மர்ஹூம் பாக்கீர் மார்க்கார் அவர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராகவும் இருந்தார் என்ற உண்மை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

ஏனென்றால் 1947ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தலில் மர்ஹூம் டி.பி. ஜாயாவை கொழும்பு மத்திய தொகுதியில் வெற்றிபெறச் செய்கின்ற பணியில் பாக்கீர் மார்க்கார் முன்னணியில் நின்று பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. அதன்மூலம்தான் அவர் தனக்கான அரசியல் அனுபவத்தை முதலில் பெற்றுக்கொண்டார் என்று வரலாறு சொல்கின்றது. 

அவர்கள் தமது சொந்த அரசியலில் கால் பதிக்கின்ற விவகாரம் அவர், பேருவளை நகரசபை உறுப்பினராக 1950 ஆம் ஆண்டு போட்டியின்றி தெரிவாகிய முதலாவது வருடத்திலேயே பேருவளை நகர சபையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டமையானது அன்றைய மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை மிகத் தெளிவாக அடையாளம் காட்டப்படுகின்ற நிகழ்வாகும். 

1960ஆம் ஆண்டு வரை உள்ளூராட்சி மட்டத்தில் தனது பங்களிப்புச் செய்த அவர், பேருவளை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்துக்கு முதலாவதாக தெரிவானார். பேருவளை தொகுதியை குறித்து பேசுகின்றபோது அவருடைய சொந்த பிறந்த மண்ணாக கணிக்கப்படும் இந்தத் தொகுதியை இரட்டை அங்கத்துவ தொகுதியாக பிரகடனப்படுத்துகின்ற முயற்சியிற்கு முன்னர், அதாவது 1950களின் பிற்பகுதியில் நியமிக்கப்பட்டிருந்த தல்கொடப்பிட்டிய எல்லை நிர்ணய குழுவிற்கு முன்னாலே பலர் சகிதம் அகில இலங்கை முஸ்லிம் லீக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நீண்ட நேரம் வாதாடி முஸ்லிம்களுக்கான இரட்டை அங்கத்துவ தொகுதியொன்றை பேருவளை பிரதேசத்தில் அமைத்தாக வேண்டும் என்ற முயற்சியில் அரும் பங்காற்றிய ஒருவராக அவர் அடையாளம் காணப்படுகின்றார்.

இறுதியில் அவருடைய முயற்சியின் பயனாக உருவாகிய பேருவளை இரட்டை அங்கத்துவ தொகுதிக்கு அவரே அந்த தொகுதியின் முதலாவது உறுப்பினராகவும் அந்தத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் தெரிவாகுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றார்.

தல்கொடப்பிட்டிய ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமளிக்கும்போது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான முயற்சியில் தனி அங்கத்துவ தொகுதியினூடாக மாத்திரம் அதை அடையவது சாத்தியமாகாது. போதியளவு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அவர்களுடைய தேசிய விகிதாசாரத்திற்கேற்ப அடைவதற்கான ஒரு முக்கியமான வழி ஆங்காங்ககே முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் இரட்டை அல்லது பல அங்கத்துவ தொகுதிகளை அமைப்பதன் மூலம் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதை நன்கு உணர்ந்திருந்த மர்ஹூம் பாக்கீர் மார்க்கார், தல்கொடப்பிட்டிய ஆணைக்குழுவுக்கு முன்னால் இவ்விடயம் தொடர்பில் சமர்பித்த வாதங்கள் மூலமாக இந்த சமூகம் அடைந்த நன்மைகளை இன்று மிகவும் நன்றியோடு நினைவுபடுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது

குறிப்பாக அவருடைய இன்னுமொரு வாதமாக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு முன்னால் சென்றிருந்தபோது அவதானித்த விடயம்தான் முழு நாட்டையும் ஒரு தொகுதியாக கருதியாவது சரியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்ற பெரும்பான்மை இனங்களுக்கு ஒரு பிரத்தியகமான ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்ற வாதத்தை முதலிலே முன்னிறுத்தி வாதாடிய ஒருவராக மர்ஹூம் பாக்கீர் மார்க்கார் நினைவுப்படுத்தப்படுபவராக இருக்கின்றார். இதையும் இங்கு பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

அதேபோல பேருவளை தொகுதி என்பது இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்ற ஒரு விடயமாகும். அந்த பிரதேசத்தில் இருக்கின்ற தர்காக்கள் மற்றும் இலங்கை இருக்கின்ற மிக பழைமைவாய்ந்த பள்ளிவாசலான அப்ராஹ் பள்ளிவாசல் ஆரம்பகாலத்தில் அரபு வணிகர்கள் வந்து இலங்கையில் தரையிறங்கிய இடமாகவும் பேருவளை பிரதேசம் கருதப்படுகின்றது.

மேலும் அங்கிருக்கின்ற பெரிய ஆன்மீக நிறுவனத்தை இன்று முஸ்லிம்கள் அனைவருக்கும் ஆன்மீக லெளகீக கல்வியை இரண்டறக் கலந்து கற்பிக்கப்படுகின்ற கலாபீடமாக மாறியிருக்கின்ற முஸ்லிம்களின் அறிவின் கலங்கரை தீபமாக அழைக்கப்படுகின்ற ஜாமிஹா நளீமிய்யா இந்த பிரதேசத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேருவளை பிரதேசமானது மாணிக்க வியாபாரிகளையும் செல்வந்தர்களையும் உள்ளடக்கிய பிரதேசமாக கணிக்கப்பட்ட போதிலும் கூட, அந்த பிரதேசத்தில் அரசியல் என்ற விடயம் பேசப்படும்போது மர்ஹூம் பாக்கீர் மார்க்கார் என்ற நாமம் புறத்தொடுக்கப்பட முடியாதளவுக்கு பாரிய தடையத்தை விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை நாங்கள் எல்லோரும் உள்ளம் கொள்கின்றோம். அவருடைய வாரிசாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்ற அரசியலிலிருந்து 1989ஆம் ஆண்டு விலகிய பிற்பாடு அதே பிரதேசத்தில் புதிய விகிதாசார முறையில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் அவரது புதல்வர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் அரசாங்கங்களில் பதவி வகித்தார் என்பதும் நாங்கள் அறிந்ததே.

மறைந்த பாக்கீர் மாக்காரின் அரசியல் பயணத்தை பார்க்கும்போது ஒரு நாட்டின் முக்கிய பதவிகளான ஜனாதிபதி மற்றும் பிரதரம் பதவிகளுக்கு சிறுபான்மையினர் தெரிவு செய்யப்படுவது அபூர்வமான விடயமாக உள்ளபோதிலும், இந்த இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மூன்று முஸ்லிம் தலைமைகள் சபாநாயகர் அந்தஸ்த்தில் இருந்தார்கள் என்பது முழு முஸ்லிம் சமூகமும் பெருமைப்படுகின்ற விடயமாகவுள்ளது. முதலாவதாக இஸ்மாயீல், 1978ஆம் ஆண்டளவில் பாக்கீர் மார்க்காரும் அதற்கு பிற்பாடு எம்.எச். முஹம்மத் அவர்களும் அந்த பதவியில் அமர்த்தப்பட்டமை மிக முக்கியமான விடயங்களாகும்.

மர்ஹூம் பாக்கீர் மார்க்கார், எம்.எச். முஹம்மத் போன்றோர் அகில இலங்கை முஸ்லிம் லீக் என்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இணை அமைப்பின் மூலம் மிகப்பெரிய சமூக சேவையை மாத்தரமல்ல, முஸ்லிம்களை அரசியல் மையப்படுத்துகின்ற பணியிலும் மிகத் தீவிரமாக பங்காற்றியுள்ளார்கள் என்பது மிக முக்கியமாக உள்ளங்கொள்ள வேண்டிய விடயமாகும்.

குறிப்பாக 1960 மார்ச் தேர்தலில் தெரிவுற்ற அவர், அதன பின்னர் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அதாவது நான்கைந்து மாதத்துக்குள் நிறைவுபெற்ற பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மீளவும் ஜூலையில் நடைபெற்ற தேர்தலின்போது தமக்கான ஆசனத்தை மீட்டிக்கொள்ள முடியாமல் போனாலும், 1965ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் மூலம் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்.

ஐந்து வருட காலம் அமைந்த ஒரு தேசிய அரசாங்கத்தில் மிக முக்கியமான பாராளுமன்ற உரைகளை ஆற்றியது மாத்திரமல்ல, தன்னுடைய கட்சியையும், கட்சிக்குள் இருந்த உள்முரண்பாடுகளையும் தீர்க்கின்ற விடயத்திலும் கூட, அவருடைய தீவிரமான பங்களிப்பு முக்கியமாக நினைவு கூறப்பட வேண்டிய விடயமாகும்.

1970ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை தழுவினாலும், 1977ஆம் ஆண்டு பெரு வெற்றியடைந்த பின்னணியில் ஏறத்தாழ ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஜே.ஆர் .ஜயவர்தன தலைமையில் அமையப்பெற்ற நிலையில் முதலில் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அவர் ஒரு வருட காலத்திற்குள்ளேயே சபாநாயகர் பதவிக்கு அமர்த்தப்படும் வாய்ப்பை பெறுகின்றார்.

அதிலும் விசேடமான அம்சம் என்னவென்றால், காலி முகத்திடலில் அமைந்துள்ள இன்றை ஜனாதிபதி அலுவலகமுமான அன்றைய பாராளுமன்றத்தில் இறுதி சபாநாயகராகவும், இன்று ஸ்ரீ ஜயவர்தன புறக்கோட்டேயில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தில் முதலாவது சபாநாகராகவும் இருந்த பெருமையை மர்ஹூம் பாக்கீர் மார்க்கார் பெற்றமை அவர் அபூர்வமாக பெற்ற மகிமையாக கருதப்படுகின்றது.

இந்த அடிப்படையில் அவரின் பணிகள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் தொடர்ந்து 16 ஆண்டுகள் தனது வாழ்க்கையினை இலங்கை அரசியலோடு செலவிட்டுள்ளார். அவரது பாராளுமன்ற விவாதங்களை அடிப்டையாகக் கொண்டு நோக்குகையில், இன்றும்கூட அவரின் விவாதங்களில் கையாண்ட மிகத் திறமையான வாக்கு வன்மையை மெச்சக்கூடிய வகையில் அவரது பாராளுமன்ற உரைகள் இருந்துள்ளன.

அது மாத்தரமல்ல, முஸ்லிம்களுக்கு உரித்தான மும்மொழித் திறமை என்ற விடயத்திலும் இயன்றவரை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் மிக ஆற்றலோடு பேசக்கூடிய ஒருவராக இருந்தபோதிலும், தமிழிழும் மிக திறமையாக பேசக்கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தார்.

1998 ஜனவரி 20ஆம் திகதி இலங்கை பாராளுமன்றம் மர்ஹூம் பார்க்கீர் மார்க்கார் மீது அனுதாப பிரேரணையொன்றை முன்வைத்தது. அந்த பிரேரணையின்போது எமது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் உரையாற்றுகின்றபோது, “தாம் சட்டக் கல்லூரியில் பிரவேசித்ததிலிருந்து அன்னாரை 25 ஆண்டுகளுக்கு அதிகமாக நன்கு அறிந்திருந்ததாகவும், அவரது மனிதாபிமான பண்புகளால் பெரிதும் கவரப்பட்டதாகவும், குறிப்பாக அவரது சன்மார்க்க பற்றை பற்றி மிக விரிவாக சிலாகித்துப் பேசினார். அத்தோடு ஒரு கண்ணியவான் அரசியல்வாதியாக அவர் திகழ்ந்துள்ளார். அமைதி, சமாதானம் பற்றி போதிக்கின்ற விடயத்திலும் இதனை போதிப்பவர்கள் உள்ளமளவில் அவர்களுடைய ஆளுமை இருந்தாக வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மர்ஹூம் பாக்கிர் மார்க்கார் திகழ்ந்துள்ளார்”என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் ஸ்தாபக உறுப்பினராக இருந்த அவர், அதன் அடிப்படையில் முஸ்லிம் லீக் இளைஞர்களுக்குரிய வழிகாட்டல்களை வழங்கி அவர்களை நெறிப்படுத்துவதற்காக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தை நிறுவி, அதன்மூலம் அவர் ஆற்றிய பணி மிகவும் சிறப்பாக மெச்சப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்றும் கூட, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம் என்பது அவரது புதல்வர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் நெறிப்படுத்தலில் மிக சிறப்பாக பணியை பல இடங்களிலும் செய்து வருகின்றது என்பதும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல பிரச்சினைகள் அனர்த்தங்களின் போது அவர்கள் காட்டுகின்ற அக்கறையும், அங்காங்கே சென்று சேகரிக்கின்ற தகவல்களும், உதவிக் கொடைகளும், தலையீடுகளும் எடுத்து நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மர்ஹூம் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்ற உரைகளை ஆற்றும் சந்தர்ப்பங்களில் உரையிலிருக்கும் சுவாரஸ்யம் கருதி கருத்தாளமிக்க அம்சங்கள் காரணமாக பாராளுமன்றத்தில் அன்று இருந்த மிகப் பெரிய ஆளுமைகளான அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், எஸ்.டி. பண்டாரநாயக்க, பீடகெனமென், என்.எம். பெரேரா, எஸ்.ஏ. விக்கிரமசிங்க, டி.பி. இலங்கேரத்ன போன்ற பலரும் அவர் பேசுகின்றபோது அடிக்கடி குறுக்கீடுகள் செய்வது வழக்கமாகும். அதற்கு பதிலளிக்கையில், ஆணித்தளமாகவும் சுடச்சுட, காரசாரமாகவும் கருத்துகளை முன்வைத்திருக்கின்றமை பாராளுமன்ற ஹன்சார்ட்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவரது பாராளுமன்ற உரைகளை தனிப் புத்தமாக வெளியீடுவதில் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் ஒரு காலகட்டத்தில் அவரது செயலாளராகவும் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் அந்தப் பணியை சிறப்பாக செய்தார்.

இவ்வாறு பலவிதமாக இந்த சமூகத்தின் ஈடேற்றத்திற்காக பங்காற்றிய மிகப்பெரிய ஒரு முஸ்லிம் ஆளுமையாக அடையாளப்படுத்தப்படுகின்ற அவர், 1997 செப்டெம்பர் 10ஆம் திகதி தன்னுடைய 80ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். எல்லாம் வல்ல இறைவன் அவரை பொருந்திக்கொள்ள வேண்டும். அதேநேரம் 2015ஆம் ஆண்டு ஜூலை அரசாங்கம் அவரது நினைவாக தபால் முத்திரையொன்றை அவர் கற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் வைத்து வெளியிட்டு கௌரவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்தியவர் பாக்கீர் மார்க்கார் : ரவூப் ஹக்கீம் முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்தியவர் பாக்கீர் மார்க்கார் : ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on September 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.