முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்காமலேயே காலாவதியாகப் போகும் பதவிக்காலம்;




'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என்று ஒரு திரைப்பாடலுக்காக கண்ணதாசன் அர்த்தமுள்ள வரிகளை எழுதினார்.

இந்த நாடும் முஸ்லிம் சமூகமும் எத்தனையோ அரசியல்வாதிகளை கண்டிருக்கின்றது. இப்போது இருப்பவர்களை விட பன்மடங்கு பலம்வாய்ந்த அரசியல் தலைவர்கள், ஜாம்பவான்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களுள் எத்தனை பேர் மக்களின் மனங்களில் நிற்கின்றனர். மக்கள் நலனுக்காக, சமூகத்தின் தன்மானத்திற்காக சேவையாற்றிய ஒருசிலரை தவிர வேறு பலரின் பெயர்கள் கூட ஞாபகத்தில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அந்தவகையில், முஸ்லிம் சமூகத்தின் காவலர்கள் போலவும் மேய்ப்பர்கள் போலவும் சிலபோதுகளில் மீட்பர்கள் போலவும் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் எத்தனைபேர் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பதற்கான நகர்வுகளை மேற்கொள்கின்றனர் என்பதை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியிருக்கின்றது.

ஆக்கிரமிப்புக்குள்ளாகும் காஷ்மீர், பலஸ்தீன் போன்ற பகுதிகளில் கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்று போராடும் முஸ்லிம் சிறுவர்களுக்கு இருக்கின்ற தைரியம் கூட இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்கின்ற கவலை ஏற்பட்டு கனகாலமாயிற்று.

இனிப்பு மிட்டாய்களுக்கு ஆசைப்பட்டு தனது கோவணத்தை பறிகொடுக்கின்ற ஒரு அப்பாவிச் சிறுவனைப் போல, பதவிகளின் ருசிக்கு பகரமாக சுயத்தை விட்டுக் கொடுக்கின்ற ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை முஸ்லிம்கள் ஆகியிருக்கின்றார்கள் என்பதுதான் இந்த நூற்றாண்டின் பெருங்கவலை.

அரசாங்கத்தின் தோல்வி
பெரும் எதிர்பார்ப்புக்களோடு நிறுவப்பட்ட இந்த ஆட்சியும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகப் போகின்றது. ஆனால் ஆட்சியாளர்களைப் போலவே முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்குக் கிடைத்த பதவிகளை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை வென்றெடுத்து, பிரச்சினைகளைத் தீர்த்து அபூர்வமான சாதனை எதனையும் நிகழ்த்தவில்லை.

இந்த இலட்சணத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் மீண்டும் தமது அமைச்சு, பிரதியமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். 'நாங்கள் சொல்வதைக் கேட்கின்றார்கள் இல்லை, எதனையும் செய்ய முடியாத பதவியில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கின்றது, இந்த அரசாங்கமும் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றது' என்று கூறிக்கொண்டிருந்தவர்கள், அந்தக் காரணத்திற்காகவே அப்பதவிகளை இராஜினமாச் செய்தவர்கள், இப்போது மீண்டும் பதவிக் கதிரைகளில் அமர்ந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் ஆட்சியில் அமர்த்த மூல காரணமாக செயற்பட்ட முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பாரிய எதிர்பார்ப்பு இருந்தது. தங்களுக்கு இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று தமிழர்கள் கனவு கண்டதை விடவும், முஸ்லிம்கள் இந்த நாட்டில் இனவாதம் ஒழிக்கப்பட்டு தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இவ்வரசாங்கம் தீர்வுகாணும் என்ற அதீத நம்பிக்கையை கொண்டிருந்தனர். ஆனால் இந்த நம்பிக்கை மிகத் தெளிவாக வீண்போயுள்ளது (அதற்காக மஹிந்த வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கும் இல்லை).

அரசாங்கம் ஆட்சிக்காலத்தின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த ஆட்சியை கொண்டு வருவதற்கு முன்னின்ற அல்லது அவ்வாறு பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு கடந்து போன நான்கரை வருடங்களில் ஆட்சியாளர்கள் எதைச் செய்திருக்கின்றனர் என்று திரும்பிப் பார்த்தால் எல்லாம் வெறுமையாகவே தெரிகின்றது.

முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அபிலாஷைகளை நிறைவேற்றப்படவில்லை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, ஆகக் குறைந்தபட்சம் இனவாதம் கூட கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக, புதுப்புது இனவாத பிசாசுகளே களமிறக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் இன, மத தனித்துவங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. சஹ்ரான் குழுவினரின் முட்டாள்தனமான பயங்கரவாத நடவடிக்கை, நமது பெருந்தேசியத்தின் இயலாமைக்கு நியாயங்களாக முன்வைக்கப்படுவதையும் இன்று காண முடிகின்றது.

பெரும் கைசேதம்
அதுபோலவே முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் பதவிக்காலமும் காலாவதியாகப் போகின்றது. முன்னைய பல ஆட்சிக் காலங்களைப் போலவே இன்னுமொரு 5 வருட ஆட்சியதிகாரத்தின் மூலமும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்து வைக்காமல் அவர்களது காலம் முடிவுக்கு வரவுள்ளதைப் போல கைசேதம் வேறேதும் உண்டோ!?
பிரதேச சபை தொடக்கம் நாடாளுமன்றம் வரையான அனைத்து மக்கள் பிரதிநிதித்துவங்களும் மக்கள் சேவையை அடிப்படை நோக்காகக் கொண்டது. முஸ்லிம்களின் அரசியல், சமூக, இன மத பிரச்சினைகளை கூடுமானவரை தீர்த்து வைப்பதன் மூலம் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பதற்காக இறைவனால் அருளப்பட்ட ஒரு வாய்ப்பே இவ்வாறான பதவிகள் என்பதை அவர்களுக்கும் நினைவுபடுத்த வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

ஆனால், இன்று எந்த முஸ்லிம் அரசியல்வாதி மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பதற்கான சேவைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற கேள்விக்கு கொஞ்சம் தேடிப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. தனித்துவ அடையாள அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளும் சரி, பெரும்பான்மைக் கட்சிகளில் அரசியல் செய்வோரும் சரி கிட்டத்தட்ட ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கு முட்டுக் கொடுக்கும் வேலை என்று அதனைச் சுருக்கமாகச் சொல்லலாம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டு இந்தப் பிரச்சினைகளை எல்லாம் மஹிந்த குடும்ப ஆட்சி கண்டுகொள்ளவில்லை என்று மேடையில் பகிரங்கமாக கூறியவர்கள், எமக்கு வாக்களித்தால் நாம் சாதித்துக் காட்டுவோம் என்று மக்கள் மன்றத்தில் சபதம் எடுத்தவர்கள், தேசியப் பட்டியல் எம்.பி.க்காகவும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் ஆலாய்ப் பறந்தவர்கள் எல்லோரும்.... இந்த 5 வருடங்களில் இந்த சமூகத்தின் எந்த உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள்? எந்த அபிலாஷையை நிறைவேற்றிய திருப்தியில் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றார்கள்? என்று கேட்க விரும்புகின்றோம்.

இலங்கை முஸ்லிம்களின் பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை, மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினைகள் இழுபறியாகவே உள்ளதுடன் ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை, அக்கரைப்பற்று நுரைச்சோலை கிராமத்தில் சவூதி அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான 500 வீட்டுத் திட்டத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நாதியில்லை.

மாயக்கல்லி மலை போல சிலைகளால், தொல்பொருட்கள் என்ற தோரணையால் முஸ்லிம் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு இன்னும் தீர்வில்லை. அதுமட்டுமன்றி, பள்ளிவாசல்கள், புனித குர்ஆன் உள்ளடங்கலாக முஸ்லிம்களின் இன மத அடையாளங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதை தவிர்க்க இயலாத அரசாங்கத்தில்தான் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனையோ 'இல்லைகள்'
ஒருவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம்களின் என்னென்ன விடயங்களை அதில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஒரு தூரநோக்கு முஸ்லிம் தலைவர்களிடம் இல்லை. கடல்வற்றி கருவாடு தின்னும் கதையாகவேனும், எப்போதாவது தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களுக்கான உப தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்ற எந்த வரைவும் எந்தவொரு முஸ்லிம் தலைமையிடமும் இருப்பதாக தெரியவில்லை.

இனவாதத்தை கட்டுப்படுத்தவோ, முன்னர் வாக்குறுதியளித்தது போல பிடித்து நாய்க்கூட்டில் போடவோ முடியவில்லை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, திகண, அம்பாறை, அளுத்கம மற்றும் குருணாகல் கலவரங்களால் உயிர், உடமைகளை இழந்த முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு எனும் ஆறுதல் கூட முழுமையாக கொடுக்கப்படவில்லை. ஆனால், வாய்ச்சவாடலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.
மிக முக்கியமாக, கிழக்கில் கருமலையூற்று தொடங்கி வட்டமடு தொட்டு பொத்துவில் வரையும், வடக்கின் பல பகுதிகளிலும் இருக்கின்ற முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவே இல்லை. வனவளம், தொல்பொருள் வலயம், பாதுகாக்கப்பட்ட வனம் என்ற பெயரிலும் பாதுகாப்பு முகாம்களுக்காகவும் உரித்து மறுக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை.

தமிழ் தேசிய அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், சில ஏக்கர் காணிகளுக்காகவே குரல்கொடுத்து, எந்த அமைச்சுப் பதவியும் இல்லாமல் அதில் மெல்ல மெல்ல வெற்றியும் கண்டு வருகின்ற ஒரு சூழலில், அமைச்சர்கள், பிரதிமைச்சர்களை உள்ளடக்கிய 20 முஸ்லிம் எம்.பிக்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் ஐம்பது ஏக்கர் காணியைக் கூட விடுவிக்க முடியவில்லை என்பதே நிதர்சனமாகும்.  

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் 40 சதவீதத்திற்கு குறையாமல் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 5 சதவீத நிலமே உரித்தாகவுள்ளது. மறுபுறத்தில் முஸ்லிம்ள் தமிழ்க் கிராமங்களை ஆக்கிரமித்ததாகவும் பொறுப்பற்ற கதைகள் உலாவருகின்றன. இந்நிலையில், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக, இன விகிதாசாரத்தைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுக்க எந்தக் கட்சித் தலைவராவது, எந்த தேசிய தலைவராவது. பிராந்தியத் தளபதியாவது தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரவதை காண முடியாதுள்ளது.

அவ்வாறே, தென்னிலங்கை முஸ்லிம்களின் எதிர்கால காணித் தேவைகள் குறித்தும் யாரும் அக்கறை காட்டியதாக நீங்கள் யாராவது கேள்விப்பட்டதுண்டா? யதார்த்தம் இப்படி இருக்கும்போதுதான், முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றிருக்கின்றனர் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட விரும்புகின்றேன்.

பதவியேற்பின் நியாயங்கள்
இரு மாதங்களுக்கு முன்னர், இனவாதம் உச்சஸ்தாயியில் நின்றாடிய போது, முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தமை இலங்கை அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது முஸ்லிம்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டியது. அது நடிப்போ, நாடகமோ என்னவாக இருந்தாலும்... அதில் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் அதிகமான சமூக உணர்வு இருந்ததை மக்கள் உணர்ந்தார்கள்.

இந்த தருணத்திலேயே கபீர் ஹாசிமும், ஹலீமும் அமைச்சுப் பொறுப்புக்களை மீள ஏற்றுக் கொண்டனர். இதில் ஒரு நியாயம் இருந்தது. அதாவது அவர்கள் அதிகமாக சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியடைபவர்கள். எனவே அமைச்சுப் பொறுப்பை இம்முறை எடுக்கவில்லை என்றால், அடுத்தமுறை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கூட வர முடியாமல் போகும் அபாயம் இருந்தது. எனவே அவர்கள் பதவியேற்றதை நியாயப்படுத்த முடியும்.

ஆனால் தனித்துவ அடையாள (முஸ்லிம்) கட்சிகளின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அப்படியொரு நிலை இல்லை. ஒன்றுக்கும் உதவாத பதவியை எடுப்பதை விட, எம்.பி.யாக இருந்து அடுத்த தேர்தலை எதிர்கொள்வதே அரசாங்கத்திற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் என்பதுடன், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இந்த ராஜினாமாவை தேர்தல்காலத்தில் சந்தைப்படுத்தவும் முடியும். ஆனால், அதனையும் தாண்டி பதவியை மீளப் பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட மனக்கணக்கின் படியோ என்னவோ எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்கவில்லை. அதை பொறுப்பேற்கக் கூடாது என்று அவர் இழுத்துப் பிடித்துக் கொண்டே இருந்தார். அவர் 'ஹீரோவாகி விடுவாh'; என்பதற்காக மு.கா.வின் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை ஏற்காமல் தொடர்ந்தும் பதவியின்றி இருக்கச் செய்யப்பட்டனர். ஆனாலும் ஹரீஸின் நிலைப்பாடு மக்களின் பாராட்டைப் பெற்றுக் கொண்டது என்பதை மறைப்பதற்கில்லை.  

உண்மையில், அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதற்கு நியாயமான சில காரணங்களும் இருக்கத்தான் செயகின்றன என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் அமைச்சர்களை பதவியேற்குமாறு பௌத்த தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தம், முஸ்லிம்கள் யாரும் அமைச்சர்களாக இல்லாத காலத்தில் பல்வேறு மட்டங்களிலும் முஸ்லிம்களை புறந்தள்ளி மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், சில காரியங்களைச் செய்வதற்கும் அதிகாரம் அவசியமாக இருந்தமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அதேபோல், முஸ்லிம் சமூகம் பதவி, அதிகாரங்கள் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போவதற்கு விரும்புகின்ற போக்கானது 'தமக்கு பதவி இருந்தாலேயே அடுத்த தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற எண்ணத்தை நமது அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம். இதற்கு மேலதிகமாக, பதவியில் இருந்து பழகியவர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம், அமைச்சை மீளப் பொறுப்பேற்பதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்பதை தனியாக விபரிக்க வேண்டியதில்லை.

என்ன செய்வீர்?
இத்தனை காலமும் இந்த அமைச்சை வைத்துக் கொண்டிருந்து ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று தொடர்ச்சியாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிவந்தனர். குறைந்தபட்சம் இந்த சமூகத்தின் மீதான இனவாத ஒடுக்குமுறையை கட்டுப்படுத்தக் கூட இந்த அமைச்சுப் பதவி உதவவில்லை என்ற நிலையிலேயே பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். அரசாங்கத்திற்கு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்கள்.

அப்படியென்றால், இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம் என்ன செய்தமைக்காக அல்லது எந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றனர் என்ற கேள்வி எல்லா முஸ்லிம்களின் மனங்களிலும் இருக்கின்றது. இதற்கு யாரும் இன்னும் தெளிவாக பதிலளிக்கவில்லை.

சரி, மீண்டும் அமைச்சுப் பதவியேற்றதில் இருந்த சிறிய நியாயங்களை பெரிதாக மதித்து இந்த சமூகம் பொறுத்தருள்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். எமது அரசியல்வாதிகள் அமைச்சர்களாக இருந்து ஒன்றுமே செய்யவில்லை என்பதல்ல. மாறாக, முக்கியமான பிரச்சினைகளை சாதித்து, முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கவில்லை என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

அந்த வகையில் நோக்கினால், இன்னும் ஒரு சில மாதங்களில் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. எனவே, மீதமிருக்கின்ற காலங்களிலாவது மேலே பட்டியலிடப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளில் ஒன்று இரண்டையாவது நிவர்த்தி செய்வதற்கு தேசியத் தலைமைகளும், பிராந்தியத் தளபதிகளும் முன்னிற்க வேண்டும்.

அதைவிடுத்து, இந்தக் காலத்தையும் வீணே கழித்துவிட்டு, பிச்சைக்காரனின் புண்ணைப் போல அடுத்த தேர்தலிலும் இதே பிரச்சினைகளை பிரசாரம் செய்து கொண்டு வாக்குப் பிச்சை கேட்டு வருபர்களாக இருப்பது அழகல்ல. மக்கள் மனங்களில் நிற்காதவர்கள் தெருக்களில் நிற்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 11.08.2019)
முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்காமலேயே காலாவதியாகப் போகும் பதவிக்காலம்; முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்காமலேயே காலாவதியாகப் போகும் பதவிக்காலம்; Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.