கிழக்கிலே முஸ்லிம்கள் தமிழ்த் தரப்பினரால் அடக்கியொடுக்கப் படுகின்றனரா?


(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கூற்றுக்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பல
செய்திகளைச் சொல்கின்றது என்று சட்டமுதுமாணி வை. எல்.எஸ் ஹமீட் தெரிவித்துள்ளார்.

(12/08/19 திங்கள்) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர் திரு - சுமந்திரன் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக கருத்து வெளியிட்டுள்ள சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் குறிப்பிடும்போது,

பாராளுமன்ற உறுப்பினர் திரு - சுமந்திரன் கூறிய சில முக்கிய விடயங்கள்:

முதல் கூற்று: கல்முனையில் தமிழர்கள் உரிமை கோருகின்ற 29 கிராமசேவகர் பிரிவுகளில் எட்டு அல்லது ஒன்பது பிரிவுகளில் கணிசமான அளவு முஸ்லிம்கள் குடியமர்ந்துள்ளார்கள்.

“இப்பிரிவுகளை முஸ்லிம் தரப்பினர் எல்லை நிர்ணயம் செய்யக் கேட்டார்கள். ஆனால் நாம் மறுத்துவிட்டோம். அதன்பின் ஒவ்வொன்றாக குறைத்து இறுதியாக ஒரு குறிச்சிக்கு மட்டும் எல்லை நிர்ணயம் செய்யக் கேட்டார்கள், அவ்வாறாயின் ஏனைய குறிச்சிகளை அவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்போகின்றார்களா? அவர்களது நிலத்தொடர்பைப் பேணுவதற்காக. இப்பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும்; என்பதற்காக அதற்கு நாம் இணங்கியிருக்கின்றோம்.

அவரது இக்கூற்று உண்மையா? அவ்வாறு நடந்ததா? இல்லையெனில் முஸ்லிம் தரப்பு மறுத்து அறிக்கைவிட வேண்டும். உண்மையெனில் அதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும். அவ்வாறாயின் கல்முனையைக் கூறுபோட நீங்கள் இணங்கினீர்கள்; என்றல்லவா, பொருள் கொள்ளவேண்டும்.

அடுத்த கூற்று: இப்பொழுது முஸ்லிம் தலைவர்கள் பின்னடிக்கிறார்கள். அரசாங்கம் எங்களுக்கு வாக்குறுதி தந்தது; அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும். முஸ்லிம் தலைவர்கள் நியாயமில்லாமல் எதிர்த்தால் முதலில் செயலகத்தைத் தரமுயர்த்துங்கள். பின்னர் எல்லை தொடர்பாக பேசுவோம்; எனக் கூறியிருக்கின்றோம். என்பதாகும்.

இங்கு திரு சுமந்திரன் அவர்களிடம் கேட்கவிரும்புவது, எல்லையை அடையாளம் காணாமல் எவ்வாறு முழுமையான பிரதேச செயலகம் வழங்கமுடியும்? அதனை எவ்வாறெனக் கூறுவாரா?  தெரியாமல் பேசுகிறாரா? அல்லது தெரிந்துகொண்டு முஸ்லிம்களின் காதில் பூ வைக்க முற்படுகிறாரா?

அவர் மேலும் இரு விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அது அவர்களின் மனோநிலையையும் நியாயமற்ற இனவாத நிலைப்பாட்டையும் தெளிவாக காட்டுகின்றது.

ஒன்று:  வவுனியா மாவட்ட ஓமந்தை செயலகப்பிரிவு பெரிதாக இருப்பதால் அதனை இரண்டாகப் பிரிக்க தாமே அரசைக் கோரியதாகவும் ஆனால் அரசு அதை இரண்டாகப் பிரிக்க எல்லைவகுத்தபோது ஒரு சிங்களப் பெரும்பான்மை செயலகப்பிரிவை ஏற்படுத்தக்கூடியதாக அப்பிரிப்பு அமைந்ததனால் அதனைத் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, பிரிக்கவேண்டும். பிரித்தால் இரண்டிலும் தமிழர்களே பெரும்பான்மையாக அமையவேண்டும். அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு செயலகப்பிரிவிலும் அவர்கள் சிறுபான்மையாகத்தான் இருக்கவேண்டும். இது அவர்களது நிலைப்பாடு.

சிங்களப் பெரும்பான்மை அரசுக்கே ஒரு சிங்களப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவை வடக்கில் உருவாக்கமுடியாமல் தடுக்குமளவு பலம் எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.

அடுத்ததாக, தோப்பூரில் முஸ்லிம் பெரும்பான்மை செயலகமொன்றை உருவாக்க தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தையும் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்; என்று கூறுகின்றார்.

திருகோணமலை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஒரேயொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன். ஆனாலும் ஒரு செயலகப்பிரிவை தமக்கு வாக்களிக்கும் மக்களுக்காக உருவாக்கக்கூட முடியாமல் தடுக்குமளவு பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.

அப்படியானால் முஸ்லிம் கட்சிகள் எதற்காக இருக்கின்றன? இவர்கள் பேசும் வீரமென்ன? இவர்களுக்காக புகழ் பாடுகின்றவர்கள் எதைவைத்துப் புகழ் பாடுகின்றார்கள்? எதற்காக இந்தக்கட்சிகள் அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்கள்? எதற்காக எதிர்காலத்தில் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்க;

சிங்களவர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களிலிருந்து பிரிந்து அவர்களைப் பெரும்பான்மையாக்கொண்ட ஒரு செயலகமோ அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் தமிழர்களிலிருந்து பிரிந்து அவர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு செயலகமோ உருவாக்க தமிழ்த்தரப்பினர் அனுமதிக்க மாட்டார்கள்; ஆனால் முஸ்லிம்களிலிருந்து பிரிந்து தமிழர் பெரும்பான்மை செயலகம் அவர்களுக்காக உருவாக்கப்பட வேண்டும்; இது அவர்களது நிலைப்பாடு,

இது வடிகட்டிய இனவாதமில்லையா? கிழக்கிலே முஸ்லிம்கள் தமிழ்த்த்ப்பினரால் அடக்கியொடுக்கப்படுகின்றனரா? என்ற கேள்வி இதிலிருந்து பிறக்கவில்லையா? இதற்கு மத்தியிலும் முஸ்லிம்கள், “ பரவாயில்லை; முஸ்லிம்களிலிருந்து பிரிந்து உங்கள் தமிழ்க்கிரமங்களை இணைத்து ஒரு செயலகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்; நாங்கள் உங்களைப்போல் ஆட்சேபிக்கவில்லை; என்று கூறுகின்றார்கள்.

இருந்தபோதும் அதுவும் அவர்களுக்குத் திருப்தியில்லை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட முஸ்லிம்களின் தலைநகரத்தைக் கூறுபோட்டு அதையும் அவர்களுக்கு கொடுக்கவேண்டும்? என்கின்றனர் தமிழ்த்தரப்பினர். இதற்குப்பதில் சொல்லமுடியாமல் திக்குமுக்காடுகின்றனர் நமது வீரவேங்கைகள்.

இவ்வரசாங்கத்தில் எதிர்கட்சியில் இருக்கும் தமிழ்  தேசிய கூட்டமைப்பின் பலத்தையும் ஆளும் கட்சியில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளின் பலயீனத்தையும் பார்த்தீர்களா?
கிழக்கிலே முஸ்லிம்கள் தமிழ்த் தரப்பினரால் அடக்கியொடுக்கப் படுகின்றனரா? கிழக்கிலே முஸ்லிம்கள் தமிழ்த் தரப்பினரால் அடக்கியொடுக்கப் படுகின்றனரா? Reviewed by Madawala News on August 13, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.