யாரும் கேட்கமாட்டார்களா?




வை எல் எஸ் ஹமீட்
த தே கூ சஜித்துடன் மங்களவின் இல்லத்தில் பேச்சு!
த தே கூ கோட்டாவுடன் சந்திப்பு!!
த தே கூ அந்த வேட்பாளரைச் சந்திக்கப்போகிறது! இந்த வேட்பாளரை சந்திக்கப்போகிறது!!
யார் நமது அதிப்பட்டச கோரிக்கையை ஏற்பார்? என அவர்களும் பார்க்கிறார்கள்!

முஸ்லிம் தலைவர்கள் இதுவரை யாரைச் சந்தித்தார்கள்? சந்திக்கப் போகிறார்கள்? முஸ்லிம்கள் தொடர்பாக என்ன கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள்? 
அல்லது முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளே இல்லையா?

இதுவரை இந்த முஸ்லிம்கட்சிகள் இது விடயத்தில் சந்தித்து ஏதாவது கலந்துரையாடினார்களா?

ஏன்? இந்த விடயத்தில் ஒற்றுமைப்படமாட்டார்களா?

ஆளுக்கொரு வேட்பாளரை ஆதரிக்க முடிவுகளை எடுத்துவிட்டு மேடைபோடுவார்களா?
அவ்வாறாயின் இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அரசியல் வியாபாரம்தான் நடைபெறப்போகிறதா?

இவ்விடயங்களைப்பற்றிப் பேசுவதற்கு, சமூகத்தில் யாருமே இல்லையா?

ஜம்மிய்யதுல் உலமா? “என்ன செய்யப்போகிறீர்கள்?” எனக் கேட்காதா?

சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் வேடிக்கை பார்க்கப் போகின்றனரா?

கட்சிக்காகவும் தலைவர்களுக்காகவும் முகநூலில் போராடும் தொண்டர்களாவது கேட்கமாட்டார்களா?

சமூகமே! நீ இன்னுமொரு ஐந்து வருடங்களை இருண்ட யுகமாக கழிக்கப்போகிறாயா? 

மஹிந்தவானாலும், கோட்டாவானாலும் அல்லது அடுத்த தரப்பிலுள்ளவர்களானாலும், எல்லோரும் தமிழ்த்தரப்பினரைப்பற்றி, அவர்களது தீர்வுகளைப்பற்றித்தான் பேசுகிறார்கள். ஒவ்வொரு வேட்பாளர் அல்லது கட்சியினர் தமிழர்களின் ஆதரவை எவ்வாறு தன்பக்கம் கவருவது என்பதில் அதீத கவனம் செலுத்துகிறார்கள்.

பிரதமர்கூட இப்பொழுது அடிக்கடி தமிழ் பிரதேசங்களுக்கு விஜயம் செய்கிறார். திறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.

நமக்கு செய்யாத அபிவிருத்தியை திறந்துவைக்க முடியாது. அது வேறுவிடயம். ஆகக்குறைந்தது நம்மைப்பற்றிப் பேசுகிறார்களா? அண்மையில் எத்தனை தடவை வட மாகாணத்திற்கு பிரதமர் சென்று வந்தார். எந்த முஸ்லிம் பிரதேசத்திற்கு பிரதமர் வந்தார்?

இங்கு பிரதமர் “வருகை” என்கின்ற ஒரு நிகழ்வு முக்கியமல்ல. பிரதமர் வந்தாலும் பெரிதாக எதுவும் நடந்துவிடப்போவதுமில்லை. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது; ஆகக்குறைந்தது, தேர்தல் நேரத்தில் எல்லோரும் வாக்காளர் சமூகங்களைத் தேடுவது வழமை. அது இன்னுமொரு சமூகத்தைப் பொறுத்தவரை யதார்த்தமாகவும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மறுதலையாகவும் இருப்பதேன்? 

ஆட்காலத்தில்தான் கண்டுகொள்ளப்படாத சமூகம் நாம். தேர்தல் காலத்திலும் கண்டுகொள்ளப்படாத சமூகம் நாம் என்றால் இதற்குப்பின்னால் முஸ்லிம்கள் தொடர்பான தேசியக்கட்சிகளின் மனோநிலை வெளிப்படவில்லையா? இது நமது இருண்ட எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுகின்றதா? என்பதைப்பற்றி நாம் சிந்திக்கக்கூடாதா?

ஏன், முஸ்லிம் வாக்குகளை தரகர்கள் பெற்றுத்தருவார்கள்; என்ற நம்பிக்கையில் இத்தேசியக்கட்சிகள் இருக்கின்றனவா?

ஏற்கனவே, சில கட்சிகள் அல்லது சில தானைத் தளபதிகள் “ டீல்” எல்லாம் ( அதே அமைச்சு உட்பட) முடித்துவிட்டதாக கதை அடிபடுகிறது.

முஸ்லிம் சமூகமே! தயவுசெய்து கண்விழியுங்கள். ஏற்கனவே, இரண்டு ஆட்சியில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவிட்டோம்.

“ முஸ்லிம்களை அடுத்த ஆட்சியில் ஒரு கைபார்க்க வேண்டும்” என்று பலர் இன்று பகிரங்கமாக கறுவிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அன்று ரணிலின் ஆட்சியைப் பாதுகாக்க ஒற்றுமைப்பட்டு உம்றா சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?

முஸ்லிம்களை இனவாதிகள் கறுவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி அதனை எவ்வாறு தடுக்க முடியும்? அல்லது குறைக்க முடியும்? என்பதைக்கூட இவர்கள் சிந்திக்க மாட்டார்களா? அதற்காக ஒன்றுசேரமாட்டார்களா? இதை யாரும் என்னவென்று கேட்கமாட்டார்களா?
யாரும் கேட்கமாட்டார்களா? யாரும் கேட்கமாட்டார்களா? Reviewed by Madawala News on August 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.