அபே திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கு காத்தான்குடியிலிருந்து கண்டனங்கள்


-எம்.எஸ்.எம்.நூர்தீன் -
கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறுதினத்தன்று இடம் பெற்ற தற்கொலைக்குண்டுத்
தாக்குதல்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான அப்பாண்டங்களை சுமத்தி பிரச்சாரம் செய்து வருவதுடன் முஸ்லிம்களை ஒரு இழிவு நிலைக்கு கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் தொடர்;ந்து இடம் பெற்றுவருகின்றன.

முஸ்லிம்களின் பொருளாதாரம் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் என்பவற்றை நசுக்குகின்ற அழிக்கின்ற நடவடிக்கைளும் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக காத்தான்குடி மக்கள் மீது தொடர்ச்சியான பல்வேறுபட்ட அபாண்டங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேதான் கடந்த 4ம் திகதி கொழும்பு நுகேகொட பகுதியில் இடம் பெற்ற பொதுக் கூட்டமொன்றில் காத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக பேராசிரியர் மெதக்கொட அபே திஸ்ஸ தேரர் கூறியிருப்பதானது முஸ்லிம் மக்களையும் குறிப்பாக காத்தான்குடி மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் காத்தான்குடி நகரமும் ஒன்றாகும் காத்தான்குடி என்பது அரேபிய தேசத்திலுள்ள ஒரு நகர மல்ல. இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் ஒரு நகரமாகும்.

கடந்த 30 வருட கால யுத்தத்தின் போதும் யுத்தத்தை அனுபவித்த ஒரு நகரமாக காத்தான்குடி உள்ளது.

எப்போதுமே இந்த நாட்டு அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருந்து வரும் காத்தான்குடி ஷரீஆ சட்டத்தின் கீழ் இருபது பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக என பேராசிரியர் தெக்கொட அபே திஸ்ஸ தேரர் கூறியுள்ள கருத்து காத்தான்குடி முஸ்லிம்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான கண்டனங்களும் காத்தான்குடியிலுள்ள பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்பட்டுள்ளதுடன் இந்தக் கருத்தை தெரிவித்துள்ள பேராசிரியர் அபே திஸ்ஸ தேரருக்கு எதிராக காத்தான்குடியிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கடந்த 06.07.2019 சனிக்கிழமை மாலை காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அபாண்டமான பொய்யான கருத்தை வெளியிட்டுள்ள பேராசிரியர் தெக்கொட அபே திஸ்ஸ தேரரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற கூட்டமொன்றில் பேராசிரியர் மெதங்கொட அபே திஸ்ஸ தேரர் காத்தான்குடியில் இருபது பேருக்கு ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் மெதக்கொட அபே திஸ்ஸ தேரர் காத்தான்குடி மீது ஒரு அபாண்டமான பொய்யை தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம்.

அவரின் கருத்துக்கு எதிராக சட்ட நடடிவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 30 வருடகால யுத்தத்துக்கு முன்னரோ அல்லது யுத்தம் நிறைவடைந்தற்கு பின்னரோ, தேரர் கூறிய எந்தவொரு விடயமும் இடம் பெறவில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.

தேரர் குறிப்பிட்டிருப்பது போல வட்டி, விபச்சாரம் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட அல்லது மார்;க்க விரோதமாக செயற்பட்ட எவருக்குமே காத்தான்குடியில் மரண தண்டனை வழங்கப்பட வில்லை. இராணுவத்துக்கு காத்தான்குடி முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்ற காரணத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் காத்தான்குடி முஸ்லிம்களை கடத்திக் கொலை செய்ததுடன் பள்ளிவாயலிலும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை படுகொலை செய்தார்கள்.

இலங்கையில் எவ்வாறு ஏனைய மதங்களுக்கு ஒவ்வொரு மத சட்டம் இருக்கின்றதோ அதே போன்றுதான் முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய மார்க்க ரீதியாக சரீஆ சட்டம் இருக்கின்றது.

இலங்கையின் அரசியல் யாப்புக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மாற்றமாக ஒரு காலத்திலும் ஒரு போதும் காத்தான்குடி முஸ்லிம்களோ அல்லது இலங்கையிலுள்ள முஸ்லிம்களோ செயற்பட்ட வரலாறே கிடையாது என்பதையும் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம்.

பேராசிரியர் வெதங்கொட அபே திஸ்ஸ தேரர் கூறிய கருத்து தொடர்பில் நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம்.

காத்தான்குடியிலும் மட்டக்களப்பிலும் பொலிஸ் நிலையங்கள் இருக்கின்றன. பாதுகாப்புத்துறையினர் இருக்கின்றார்கள் காத்தான்குடியிலும் கடந்த 30 வருடங்களாக பொலிஸ் நிலையம் இருக்கின்றது.

தேரர் கூறியது போன்ற எந்த பதிவுகளுமில்லை. அப்படி தேரரிடத்தில் ஆதாரமிருந்தால் அதை நிரூபிக்குமாறு அவருக்கு சவால் விடுகின்றோம் என் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார் கடந்த ஏப்ரல் 21க்கு பின்னர் முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான அப்பாண்டங்களும் சுமத்தி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களை ஒரு இழிவு நிலைக்கு கொண்டு வர எடுக்கும் முயற்சிகள் தொடர்;ந்து இடம் பெற்றுவருகின்றன.

குறிப்பாக காத்தான்குடி மக்கள் மீது தொடர்ச்சியான பல்வேறுபட்ட அபாண்டங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களின் பொருளாதாரம் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் என்பவற்றை நசுக்குகின்ற அழிக்கின்ற நடவடிக்கைளும் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இவைகளை உண்மைப்படுத்த முடியாமல் தோல்வி கண்ட இனவாதிகள் மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் பேராசிரியர் மெத்தக்கொட அப்பே திஸ்ஸ தேரர் ஒரு பிராண்டமான கூட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்பாகவும் குறிப்பாக காத்தான்குடி தொடர்பாகவும் கூறிய கருத்தானது சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.

அவரின் கூற்றுக்கு எதிராக நாம் வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்

இந்த நாட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டின் சட்டத்தை மதித்து வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகம் இந்த நாட்டுக்கு விசுவாசமாக கட்டுப்பட்டு வாழுகின்ற ஒரு சமூகம் என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்

பேராசிரியர் மெதக்கொட அபே திஸ்ஸ தேரரிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதற்கான ஆதராங்களை அவர் பகிரப்படுத்த வேண்டும் என நாங்கள் அவரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் சட்ட திட்டங்களை மதித்து வாழ்ந்து வரும் ஒரு சமூகம். இந்த நாட்டுக்கு உதவியாக இருந்த சமூகம்

நாங்கள் விரும்பாத ஒரு சம்பவம் நடந்து விட்டதற்காக முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியான அபாண்டங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் சொல்வது அதிலும் இப்படியான மத குருக்கள் செய்வதென்பது கவலையாக இருக்கின்றது.

மதங்களிடையே இன நல்லிணக்கத்தை சௌஜன்யத்தை ஏற்படுத்த வேண்;டிய மத குருக்கள் இவ்வாறு ஒரு இனத்தின் மீது அபாண்டங்களை சொல்லவது மிகவும் வேதனையளிக்கின்றது.

ஆகவே இந்த தேரர் கூறியுள்ள ஷரீஆ சட்டத்தின் படி மரண தண்டனை காத்தான்குடியில் வழங்கப்பட்டது என்ற கருத்து ஒரு மிகவும் கவலையான விடயமாக உள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு அமைதியாகவும் சுதந்திரமாகவும் இந்த நாட்டுக்கு ஒத்துழைப்பாகவும் இருந்தார்களோ அதே தன்மையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் குறிப்பாக காத்தான்குடி மக்கள் இருக்கவே விரும்புகின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்தை வேறுபடுத்தி சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் தன்மைகளை இவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொய்யான பிரச்சாரங்களை செய்து இனங்களுக்;கிடையில் இன முறுகளை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் அபகீர்த்தியான தன்மைகளை ஏற்படுத்துகின்ற விசமப்பிரச்சாரங்களை செய்கின்றவர்களுக்கு எதிராக அரசாங்கமும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் அவசர காலச்சட்டம் இருக்கின்றது. நான்கு பேருக்கு மேல் ஒன்று கூட முடியாது என்று அவசரகாலச்சட்டம் இருக்கின்ற நிலைமையிலே இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களை கூட்டி முஸ்லிம்கள் மீது அப கீர்த்தியை ஏற்படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாதொன்றாகும்.

எனவே அரசாங்கமும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் டி.எம்.அன்சார் நழீமி இந்த உடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்  இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எவ்வாறு தேச வழமைச்சட்டம் இருக்கின்றதோ கண்டிய மக்களுக்கு எவ்வாறு கண்டிய சட்டம் வழங்கப்பட்டிருந்ததோ, அதே போன்றுதான்  முஸ்லிம் சமூகத்தினருக்கு தனியார் சட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தினால் மாத்திரம் தான் முஸ்லிம்கள் ஆளப்பட்டு வருகின்றோம்.

ஏனைய அனைத்து விடயங்களிலும் பொதுச் சட்டத்தில் தான் இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் ஆளப்பட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் இந்த முஸ்லிம் சமூகம் இத்தகைய ஒரு மரண தண்டனையை வழங்கக் கூடிய அளவுக்கு பார தூரமாக செயற்படுகின்றது. தனியாக அது பிரிந்து செயற்படுகின்றது. என்பன போன்ற விசமமான பொய்யான கருத்தினை இந்த தேரர் தெரிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு இன்று பாரிய கவலையைக் கொடுத்திருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இவ்வாறு பிரச்சாரங்கள் நிறுத்தப்படல் வேண்டும்.

இனங்கள் ஐக்கியத்தோடும் ஒற்றுமையோடும் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்க வேண்டும்.

இந்த நாட்டின் அபிவிருத்தியை முன் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்.

இனங்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்படுமாக இருந்தால் இந்த நாட்டை இன்னும் படுபாதாளத்தில் தான் கொண்டு செல்லும்.

இனங்களுக்கிடையிலான மோதல்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை யார் பேசினாலும் எந்த இனத்தைச் சார்ந்தவர் பேசினாலும் அதற்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரவேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தை விணயமாக வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

இவ்வாறு காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை என்பன தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

ஷரிஆ சட்டத்தின் கீழ் காத்தான்குடியில் 20 பேரை கொலை செய்ததாக தேரர் ஜூலை 4ஆம் திகதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மதங்களிடையே இன நல்லிணக்கத்தையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்த வேண்;டிய மத குருக்கள் இவ்வாறு ஒரு இனத்தின் மீது அபாண்டங்களை சொல்வது மிகவும் வேதனையான விடயமாகும்.

இது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
அபே திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கு காத்தான்குடியிலிருந்து கண்டனங்கள் அபே திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கு காத்தான்குடியிலிருந்து கண்டனங்கள் Reviewed by Madawala News on July 14, 2019 Rating: 5