ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் செப்டெம்பரில் வர்த்தமானி வெளியீடு.


   ஜனாதிபதித்  தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்கு,
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக  தெரியவருகிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நாளில்  நடத்துவதற்கு,  தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



   ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையிலேயே,  வர்த்தமானி அறிவித்தலை ஆணைக் குழுத்தலைவர் வெளியிடுவார்.


   இதேவேளை,  பதவியிலிருக்கும் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் நான்கு வருடங்களை நிறைவு செய்ததன் பின்னர், மீண்டும் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிப்பாரானால், அவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவேண்டும்.


   ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிப்பதற்கும், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதியைத் தீர்மானிப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்படும். வேட்பாளர்கள் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐந்து வாரங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்படும்.


   தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கமைய ஐந்தாண்டுகளாகும். இதன் பிரகாரம், ஜனவரி 7 ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைகின்றது.

   பதவிக்காலம் பூர்த்தியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.


   ஜனாதிபதியின் பதவிக்காலம் தற்போது நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதால், அடுத்துவரும் 45 நாட்களுக்கிடையில் ஜனாதிபதி விரும்பினால், மக்கள் ஆணையைக் கோரித் தேர்தலுக்குச் செல்ல முடியும்.


   இல்லாவிடில், அவரது பதவிக்காலம் முழுமைப்படுத்தப்பட்டதாகக் கருதி, செப்டம்பர் மாதம் இறுதி வாரத்துக்குள் தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடத் தீர்மானித்திருப்பதாக, ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை ஆதாரமாகக்காட்டி நம்பகரமான ஆணைக்குழு வட்டாரம் தெரிவித்தது.

( ஐ. ஏ. காதிர் கான் )
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் செப்டெம்பரில் வர்த்தமானி வெளியீடு. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்  செப்டெம்பரில் வர்த்தமானி வெளியீடு. Reviewed by Madawala News on July 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.