"ஒரு சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளானவை நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக மாறியுள்ளன"


“  ஒரு சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளானவை நாட்டுக்கு பெரும்  சாபக்கேடாக மாறியுள்ளன.
எனவே, பௌத்த கோட்பாடுகளை அப்பட்டமாகமீறி - அடாவடியில் ஈடுபட்டுவரும் பிக்குகள் தொடர்பில் அரசாங்கமும் , மகாநாயக்க தேரர்களும்  விசேட கவனம் செலுத்தி, அவர்களை கட்டுப்படுத்தவேண்டும்.’’

-   இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பௌத்த பிக்குகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆகிய இடங்களுக்கு அமைச்சர் மனோ கணேசனுடன் இணைந்து, வேலுகுமார் எம்.பியும் களப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயம் குறித்தும் - ஆராயப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் கண்டி மாவட்டத்திலுள்ள தமது அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு வேலுகுமார் எம்.பி.  இன்று முற்பகல் (12) விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,

“  அன்பையும், அஹிம்சையையும், அறத்தையுமே பௌத்த தர்மம் போதித்துள்ளது. அத்துடன், பதவி, பட்டம், பணம் என எல்லாவற்றையும் துறந்துவிட்டு  எளிமையாக வாழ்ந்தவரே புத்தபெருமான். எனினும், இன்று புத்தரின் பெயரை அடகுவைத்து, காவியுடை அணிந்த ஒரு சிலர் காட்டுமிராண்டிகள்போல் செயற்படுகின்றனர். புத்தர் இருந்திருந்தால் நடப்பவற்றை பார்த்து, இரத்தக்கண்ணீரே வடித்திருப்பார்.

பௌத்த சாசனத்தை பாதுகாக்கின்றோம் என கொக்கரித்துக்கொண்டு மாற்று மதங்கள்மீது கைவைப்பதையே ஒரு சில பிக்குகள், கொள்ளையாகக்கொண்டு செயற்பட்டுவருகின்றனர்.   வடக்கிலும், கிழக்கிலும் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

திருகோணமலை மற்றும் முல்லைதீவு பகுதிகளுக்கு நாம் சென்றிருந்தோம்.  அங்கு திட்டமிட்ட அடிப்படையில் இந்துக்களின் வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தாம் செய்வது பிழையென தெரிந்தும், ‘காவி உடை’ மீது அரசாங்கமும், காவல்துறையும் கைவைக்காது என்ற நம்பிக்கையில் சட்டத்தை கையிலெடுத்து பிக்குகள் செயற்பட்டுவருகின்றனர்.


இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்து தர்மத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்து சமய விவகார அமைச்சு மேற்கொள்ளும். சமரச முயற்சியில் இறங்கும் அதேவேளை சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.


அநீதி இழைக்கப்படுமானால் முன்பிருந்தவர்களைபோல் நாம் கைகட்டிவேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். நீதிக்காக பொங்கியெழுந்து போராடுவோம். இதுதான் எங்களின் அரசியல் ஸ்டைல்.அரச பங்காளி என்பதால் ‘ ஆமாம் சாமி’ மட்டுமே போடுவோம் என கனவு கண்டுகொண்டிருப்பவர்களுக்கு, உரிமைகளுக்காக அரசின் கழுத்தையே இறுக்கிப்பிடிக்கும் அரசியல் தற்துணிவு எங்களுக்கு இருக்கின்றது. கள விஜயமும் இதை உறுதிப்படுத்தியது.


தாங்கள்  சொல்வதுதான் வேதம் என்றும், தாங்கள் காட்டுவதுதான் தர்மத்தின் வழி என்ற மமதையில் செயற்படும் இத்தகைய பிக்குகளால் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கும், நல்லிணக்கத்துக்கும் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது.  இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் அவ்வப்போது முரண்பாடுகள் தலைதூக்க செய்யும் என்பதே கசப்பான உண்மையாகும்.

எனவே, பௌத்த கோட்பாட்டைமீறி, அந்த மதத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தி, ஏனைய மதங்கள்மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் பிக்குகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவிடயத்தில் மகாநாயக்க தேரர்களும் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவேண்டும்.

நாம் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.  பௌத்த பிக்குகளை எதிரியாகவும் பார்க்கவில்லை. ஆனால், பௌத்தத்தின் பெயரில் ஒரு சில பிக்குகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள்தான் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சாபக்கேடாக  அமைந்துள்ளது.” என்றார் வேலுகுமார் எம்.பி.
"ஒரு சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளானவை நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக மாறியுள்ளன" "ஒரு சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளானவை நாட்டுக்கு பெரும்  சாபக்கேடாக மாறியுள்ளன" Reviewed by Madawala News on June 12, 2019 Rating: 5