புதிய சுற்று நிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது, வீட்டில் இருக்கின்றனர். - Madawala News Number 1 Tamil website from Srilanka

புதிய சுற்று நிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது, வீட்டில் இருக்கின்றனர்.


(ஆர்.யசி )
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
விடுத்த சுற்று நிருபம் தொடர்பில் செயலாளருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. 


அரச நிறுவனங்களில் ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் திருத்தங்களை மேற்கொள்வது   தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரட்ணசிறி தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில்  தெரிவுக்குழு கூடியது. இதில் ஜயம்பதி விக்கிரமரட்ன , ரவி கருணாநாயக்க , சரத்பொன்சேகா , எம்.ஏ.சுமந்திரன் , ஆசுமாரசிங்க , நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 பொது நிர்வாக அலுவல்கள் செயலாளர் ரட்ணசிறி  தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்தார். இதன்போது குழு உறுப்பினர்கள் அவரிடம் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அரச நிறுவனங்களில் சாரி அணிவதை கட்டாயப்படுத்தும் வகையில் பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் தொடர்பாக குழு உறுப்பினர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். இதன்போது அவர் பதிலளிக்கையில்,


ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் அரச நிறுவனங்களின் பாதுகாப்பு , அரச ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக எமக்கு பல்வேறு கோரிக்கைகள் கிடைத்தன. இதனை தொடர்ந்து அமைச்சுகளின் செயலாளர்களின் கூட்டத்தில் அது தொடர்பாக தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டன. இதன்படி சீ.சீ.டி.வி கமெராக்களை பொருத்துவது , அலுவலகங்களுக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் பைகளை சோதனையிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வேறு திணைக்களங்கள், செயலகங்களிலிருந்து ஆடை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்மென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட.  இதன்படி முன்னர் இருந்தச் சுற்றுநிருபம் தொடர்பாக மீண்டும் நினைவூட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தோம்.


ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற செயலாளர்களின் கூட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்பட்டது. புத்தளம் , கருவலகஸ்வெவ உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து ஊழியர்கள் சிலரின் கையொப்பங்களுடனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்தே அது பற்றிய சுற்றுநிருபத்தை வெளியிட வேண்டியிருந்தது. பல்வேறு ஆடைகளை அணிந்துகொண்டு வருவதால் அது அச்சுறுத்தலானது என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதன்படி சிறந்த ஒழுக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆடையையும் தடை செய்யாது பொருத்தமான ஆடையை அணிய வேண்டியது தொடர்பாக சுற்றுநிருபத்தின் ஊடாக கூறப்பட்டது என்றார்,

எனினும்   இவ்வாறான சுற்றுநிருபத்தினால் ஏற்பட்ட பிரச்சினையால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். இது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா? இது மனித உரிமை மீறல் விடயம்  என குழு உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்

இதற்கு பதிலளித்த செயலாளர்:- இது மனித உரிமை மீறல் அல்ல, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச்  செல்ல எந்த அவசியமும் இல்லை. இது அரச துறை சார்ந்த சிக்கல். ஆகவே அரச சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் . எனினும் இந்த நெருக்கடிகள் குறித்து  தான் அறியவில்லையெனவும் எவ்வாறாயினும் அது பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன் யாரேனும் இதன்மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களுக்கோ அரச சேவை ஆணைக்குழுவுக்கோ அறிவிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.எனினும் மனித உரிமை விவகாரம் இல்லை என கூறியதை அடுத்து குழு உறுப்பினர்கள் வன்மையான கண்டனத்தை வெளிபடுத்தினார். மனித உரிமை இல்லை என நீங்கள் எவ்வாறு கூறமுடியும். நீங்கள் நினைத்த வகையில் தீர்மானம் எடுக்க வேண்டாம். அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்றனர்.


சுற்றுநிருபத்தால் அரச நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாகவும் குழு உறுப்பினர்கள் அவரிடம் மேலும் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.


இதன்போது குறித்த சுற்று நிருபம் தொடர்பாக பிரதமரோ , அமைச்சரோ , அமைச்சரவையோ ஏற்றுக்கொள்ளாத நேரத்தில் எவ்வாறு இந்த சுற்று நிருபம் வெளியானது என குழு உறுப்பினர் அவரிடம் கேட்ட போது அது செயலாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செய்யப்பட்டது எனவும் இதில் மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக காலம் தாழ்தாது பொருத்தமான உடையென தெரிவித்து புதிய சுற்றுநிருபமொன்றை வெளியிட நடவடிக்கையெடுக்குமாறு குழுவினர் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டு யாரேனும் விடுமுறையில் இருந்திருந்தால் அவர்களுக்கு உரிய மானியங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கையெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய சுற்று நிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது, வீட்டில் இருக்கின்றனர். புதிய சுற்று நிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பலர் தொழிலுக்கு செல்ல முடியாது, வீட்டில் இருக்கின்றனர். Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5