நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பா உறுப்பினர்/ அமைச்சர் பதவிகளும். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பா உறுப்பினர்/ அமைச்சர் பதவிகளும்.

–வை எல் எஸ் ஹமீட் –
ஒரு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அது வெற்றிபெற்றால்
அது அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அல்லது அமைச்சர் பதவியை சட்டரீதியாக பாதிக்குமா?

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாகுதல்
———————————————————
(1) அவரது கட்சி அவரை தனது அங்கத்துவத்தில் இருந்து விலக்குதல். ( ஒரு மாதத்திற்குள் நீதிமன்றம் சென்றால் அத்தீர்ப்பின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்)
(2) பா உ, தனது கைப்பட ராஜினாமா செய்தல்.
(3) பாராளுமன்றத்தின் முன் அனுமதியின்றி தொடர்ச்சியாக மூன்று மாதம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாமை
(4) அவரது தேர்தல் தெரிவு செல்லுபடியற்றதெனத் பிரகடனப்படுத்தப்படல்.
(5) ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் சிபாரிசுக்கமைய குடியியல் உரிமை பறிக்கப்படுதல் ( Civic disability)
(6) ஒரு வாக்காளராக இருக்க அல்லது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட தகுதியில்லாத நிலையில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருத்தல்.
(7) அரச சேவையில் பதவி பெறுதல்

இவ்வாறான காரணங்களால்தான் ஒருவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பார்.

இங்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பாராளுமன்ற உறுப்புரிமை இழப்பது தொடர்பாக அரசியலமைப்பில் எங்கும் எதுவும் கூறப்படவில்லை.

எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பாதிக்காது.

அமைச்சுப் பதவி
———————-
அரசாங்கத்திற்கெதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு வெற்றிபெற்றால் பிரதமர் உட்பட மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும்.

அதேநேரம், அரசாங்கத்திற்கெதிராக அல்லாமல் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து வெற்றிபெற்றாலும் பிரதமர் பதவியிழக்கமாட்டார்.

அதேபோல் ஒரு அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து வெற்றிபெற்றாலும் அந்த அமைச்சர் பதவியிழக்கமாட்டார். ஏனெனில் சரத்து 48(2) இல் “ அரசாங்கத்திற்கெதிராக” நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பிரதமருக்கெதிராக அல்லது ஒரு அமைச்சருக்கெதிராக என்ற எந்த வார்த்தைப் பதமும் இல்லை.

எனவே, நம்பிக்கையில்லாப்பிரேரணை வெற்றிபெற்றாலும் சட்டரீதியாக அமைச்சுப்பதவி இழக்கப்படமாட்டாது.

ஜனாதிபதி நீக்குதல்
—————————
அவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றதன் பின்பும் அதாவது இவர் அமைச்சராக இருப்பதில் நம்பிக்கை இல்லை, என்று பாராறுமன்றம் கூறியதன் பின்பும் அப்பதவியில் இருப்பது முறையா? என்றொரு கேள்வி எழலாம். ( Is it ethically correct to hold onto the portfolio?)

கேள்வி நியாயமானது. ஆனாலும் சட்டரீதியாக பதவி இழக்கமாட்டார். பிரதமர் நம்பிக்கையை இழந்தால் ( அவர் ராஜினாமா செய்யாதபோது) ஜனாதிபதி பதவி நீக்கலாம். அதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது.

ஒரு அமைச்சர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்து அவராக ராஜினாமா செய்யாவிட்டால் ஜனாதிபதியால் அவரைப் பதவி நீக்கம் செய்யமுடியாது; பிரதமரின் சம்மதமல்லாமல்.

பிரதமர் சம்மதிப்பாரா? என்பது ஒரு கேள்வி. அதேநேரம் தனது அரசாங்க அமைச்சரொருவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அது அரசாங்கத்தின் கௌரவப்பிரச்சினையாக மாறும். அந்தவகையில் அதனைத் தோற்கடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்யும்.

எனவே, இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் ஒரு வெறும் அரசியல் விளம்பரமாகத்தான் பொதுவாக கொண்டுவரப்படுவது வழக்கமாகும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பா உறுப்பினர்/ அமைச்சர் பதவிகளும். நம்பிக்கையில்லாப் பிரேரணையும் பா உறுப்பினர்/ அமைச்சர் பதவிகளும். Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5