பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை முஸ்லிம் மக்கள் தாமாகவே கண்டிக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருப்பது சந்தோசமான விடயமாகும்.


(எஸ்.அஷ்ரப்கான்) 
பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை முஸ்லிம் மக்கள் தாமாகவே கண்டிக்கின்ற ஒரு நிலைப்பாட்டில்
இருப்பது மிகவும் சந்தோசமான விடயமாகும். இருந்தபோதிலும் இப்பிரதேச ஊர்களின் முக்கிய ஸ்தானங்களில் இருக்கின்றவர்கள், கிராமங்கள் ரீதியாக மக்களை வழிநடத்துகின்றவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் உன்னிப்பாகவும் மிகவும் அவதானமாகவும் இருக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 


கல்முனை பிரதேச அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் தலைமையில் கடந்த (13) திங்கட்கிழமை கல்முனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இக்கூட்டத்தில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.சி. நஜீம், அம்பாறை மாவட்ட கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். ஜசூர், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இதன்போது கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் ஹரீசினால் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 240 வேலைத்திட்டங்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் 25இற்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.


இங்கு இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஓரு தசாப்த காலமாக அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்து, ஒரு இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் நாட்டில் அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்த மட்டில் சகல சமூகங்களும் மத, கலாசார உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் ஏனைய வாழ்வியல், கல்வி சார்ந்த உரிமைகளை மிக உச்சக் கட்டத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.  


பதவியில் இருக்கின்ற அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியாக சில திருத்தங்களைச் செய்து மேலும் ஒரு படி மேல் சென்று குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகார பரவலாக்கம் என்ற அடிப்படையில் இன்னும் பல அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முயற்சியை எடுத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இத்துர்ப்பாக்கிய பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றது. 


வடகிழக்கு பிராந்தியத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் பாரிய ஒரு அசம்பாவிதம் நடைபெற்றது. இந்நிலையில் இப்பிராந்திய மக்கள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் வேறு அசம்பாவிதங்கள் மற்றும் வன்செயல்களை உருவாக்காமல் இன ஐக்கியத்திற்காக பாடுபட்டார்கள். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத் தலைவர்களான ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் போன்றவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கின்றோம். இத்தாக்குதலினால் கிறிஸ்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் சமூகங்களின் இன ஐக்கியத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் விடுத்த அறைகூவலின் காரணமாக இப்பிராந்தியத்தில் ஒரு அமைதியான, ஒற்றுமையான நிலை ஏற்பட்டு சகஜமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. அதே நேரம் தேசிய ரீதியாக பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்களுடைய அறைகூவல் ஓரு அமைதியான செயற்பாட்டிற்கு வழிவகுத்தது. 


தற்கொலைத் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இருந்து வட கிழக்கு தவிரிந்த ஏனையபகுதிகள் இன்னும் வழமைக்கு திருப்பவில்லை, கொழும்பில் இன்றும் குண்டுப் புரலி ஏற்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நாள் முதல் அப்பிரதேசங்களின் செயற்பாடுகள் மந்தகெதியில் உள்ளன. இந்நிலையில் வட கிழக்கு பிரதேசம் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பது இப்பிராந்தியத்தின் சகல இன மக்களுடைய அர்பணிப்பே காரணமாகும்.  


தேசிய பாதுகாப்பு எந்தளவுக்கு விரைவில் உறுதிப்படுத்தப்படுகின்றதோ அப்போதுதான் இந்த நாட்டில் இருக்கின்ற சகல மக்களுக்கும் நிம்மதி ஏற்படும். அல்லாத பட்சத்தில் இது தொட்டம் தொட்டமாக வேறு ஒரு கொள்கையின் தோறனையில் போகின்றபோது அனைவரினதும் நிம்மதி கெட்டுவிடும். 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி என்றவைகயிலும் பாதுகாப்பு பிரதானி என்றவகையிலும் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றார். 


அந்தவகையில் அவர் பல சமூகத் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதோடு நாட்டின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மிக நிதானத்துடன் முன்னெடுத்துவருகின்றார். அதேபோன்று பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் நாட்டில் அமைதியையும் இன ஐக்கியத்தையும் வலியுறுத்தி உளரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி போன்றவற்றின் தலைமைகள் நாட்டில் தொடர்ச்சியான ஒரு இனக்கலவரம் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதனால் தான் இன்று இந்த நிலமை மோசமடையாமல் தடுக்கப்பட்டிருக்கின்றது. இவைகள் எமக்கு ஒரு வித திருப்தியை ஏற்படுத்துவதாக அமைகின்றது.


இருந்தபோதிலும் துரதிஷ்டவசமாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வருகின்ற தேர்தலை மையமாக வைத்து தங்களுடைய விருப்புவாக்குகளை தாங்கள் சார்ந்த பிரதேசங்களில் உயர்த்துவதற்காக இன்று சிறுபான்மை மக்களுக்கு எதிராக மிக மோசமான கருததுக்களை பாராளுமன்றத்தில் பதிந்து வருகின்றனர். இது அவர்களது முகத்திரைகளை அவர்களே கிழிப்பதாக அமைகின்றது. அவர்களுக்கான பதில்களை நாங்களும் வழங்கி வருகின்றோம். அவர்களுடைய கருத்துக்கள் இந்த சூழலை மிகவும் மோசமாக்கின்ற கருத்துக்களாக இருந்தாலும் தலைமைகள் ஓரளவு நிதானமாக இருப்பது எங்களுக்கு ஆறுதலை தருகின்றது. 


இச்சூழலில் பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை முஸ்லிம் மக்கள் தாமாகவே கண்டிக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் சந்தோசமான விடயமாகும். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் இப்பிரதேசத்தில் உள்ளனரா என அதிகாரிகள் தேடவேண்டிய அவசியம் குறைவாகவே இருக்கின்றது. ஏனெனில் மக்களே அவர்களை அடையாளங்கண்டு அறிவித்துவிடுகின்றனர். 


இப்பிராந்தியத்தில் குறிப்பாக கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான தீவிரவாத சிந்தனையில் உள்ள நபர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தாலும் இப்பிரதேச ஊர்களின் முக்கிய ஸ்தானங்களில் இருக்கின்றவர்கள், கிராமங்கள் ரீதியாக மக்களை வழிநடத்துகின்றவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் உன்னிப்பாகவும் மிகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இப்பிராந்திய இளைஞர்களை நாட்டின் ஒருமைப்பாட்டோடு சேர்ந்து பயணிக்கின்றவர்களாக வழிநடாத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை முஸ்லிம் மக்கள் தாமாகவே கண்டிக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருப்பது சந்தோசமான விடயமாகும்.  பயங்கரவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளை முஸ்லிம் மக்கள் தாமாகவே கண்டிக்கின்ற ஒரு நிலைப்பாட்டில் இருப்பது சந்தோசமான விடயமாகும். Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.