ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையென்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே..!



ரிசாட்  அரசியலில் காலடி எடுத்துவைத்த நாள்முதல் அவருக்கு
எதிரான குற்றச்சாட்டுக்களை அவருடைய அரசியல் எதிரிகளாலும்,இனவாதிகளாலும், அவருடைய அரசியல் பிரவேசத்தில் அச்சம்கொண்ட தமிழ் அரசியல்வாதிகளாலும் அவ்வப்போது அவருக்கு எதிரான ஏதாவதொரு குற்றச்சாட்டை  முன்வைத்துக் கொண்டே வருகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். 

காலத்துக்காலம் நாட்டிலே ஏற்படும் எந்தச் சம்பவங்களாக இருந்தாலும் அதனோடு இவரையும் சம்பந்தப்படுத்தி இவருடை அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டும் என்று துடியாய் துடிப்பர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அந்த வகையில் மஹிந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தபோது, பசீல் ராஜபக்ஸ அவர்கள் ரிசாட் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து செயல்பட்ட விடயத்தை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பல பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து விமர்சிக்க துவங்கினார்கள். அதிலொரு விமர்சனம் என்னவென்றால், யாழ்பாணத்திலிருந்து அகதியாக வரும்போது சொப்பிங் வேக்கோடுவந்த ரிசாட் அவர்கள் கோடீஸ்வராக எப்படி ஆனார் என்ற விமர்சனத்தை முன்வைத்து தாக்கத் துவங்கினார்கள். அடுத்ததாக குடு வியாபாரத்திலும், கஞ்சா போன்ற சட்டவிரோத வியாபரத்திலும் இவர் மறைமுகமாக ஈடுபடுகின்றார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் அதனை நிரூபிக்ககூடிய எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாமல் வெறுமனே குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்து காலத்தை கடத்திவந்தார்களே தவிர அந்த குற்றச்சாட்டுக்களை அவர்களினால் நிரூபிக்க  முடியாமல் போய்விட்டது என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் வில்பத்து காட்டை அழித்து பல ஆயிரம் ஏக்கர் காணிகளை தம்வசம் வைத்துக்கொண்டுள்ள அதேநேரம் அந்தக் காட்டை சட்டவிரோதமாக கையகப்படுத்தி பல ஆயிரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து கொடுத்தள்ளார் என்றுகூறி சிங்கள இனவாதிகளும், அதற்கு ஒத்தாசையாக தமிழ் அரசியல்வாதிகளும் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்து ரிசாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தார்கள். இந்த விடயங்களுக்கு பகிரங்கமான ரீவி விவாதங்கள் மூலமாகவும், பாராளுமன்றத்தின் ஊடாகவும் பதில் கொடுத்தது மட்டுமல்ல, இவர்கள் கூறுவதுபோன்று என்மீது குற்றமிருந்தால் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்து என்னை விசாரித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்று சபாநாயகரிடமே பகிரங்க வேண்டுகோளும் வைத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு இதுவரை யாரும் செவிசாய்த்ததாக தெரியவில்லை. அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களிள் உண்மையிருந்திருந்தால் இந்த வேண்டுகோளை யாரும் நிராகரித்து இருக்கமாட்டார்கள்.  உடனடியாக விசாரணை நடத்தி அவரை ஒருவழி பண்ணியிருப்பார்கள் என்பதே உண்மையாகும். 

இந்த நிலையில்தான் அண்மையிலே நடந்த பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் ரிசாட் அமைச்சருக்கும் சம்பந்தம் இருப்பதாககூறி எதிர்க்கட்சியினால் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதை நாம் அறிவோம். நடந்து முடிந்த பயங்கரவாத பிரச்சினைக்கும் ரிசாட்டுக்கும் எவ்வித சம்மந்தம் இருந்திருக்க வாய்ப்பே கிடையாது என்று, அவருடைய அரசியல் எதிரணியாக செயல்படும் மு.காங் தலைவர் ஹக்கீம் அவர்கள் கூட ஒரு ரீவி விவாதத்தின்போது  தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது காலத்துக்கு காலம் ரிசாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை எப்படியாவது அரசியலை விட்டு ஓரம்கட்டிவிடவேண்டும் என்று முயற்சித்தவர்களுக்கு அது கைகூடாமல் போகவே, தற்போது ஏற்பட்டுள்ள பயங்கரவாத பிரச்சினையிலும் இவரை சம்பந்தப்படுத்தி பழிவாங்கிவிடலாம் என்று முயற்சிப்பதுபோலவே தெரிகின்றது.

இப்படியான நிலைமைகள் ஏற்பட ரிசாட் பதியுதீன் அவர்களின் சில செயல்பாடுகளும் காரணமாகவே அமைந்தள்ளது எனலாம். 2015ம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் போது அவர் நடந்துகொண்ட விதமும்(இதனை விரிவாக பிறகு எழுதுகின்றேன்). கடந்த 52நாள் அரசியல் சூறாவளியின்போது அவர்நடந்து கொண்ட விதமுமானது மைத்திரி அணியினரையும், மஹிந்த அணியினரையும் கோபத்து ஆளாக்கியது என்பதில் சந்தேகம் இல்லையெனலாம். அந்த ஆட்சி மாற்றத்தின் போது ரணிலுக்கு ஆதரவளிப்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ஜனாதிபதி மைத்ரியையும், மஹிந்த அவர்களையும் கடுமையாக விமர்சித்துமிருந்தார். அவருடைய இப்படியான செயல்பாடானது அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவர் செய்யும் செயல்பாடாகவே பார்க்கப்பட்டது எனலாம். காரணம் இலங்கையை ஆட்சி பண்ணப்போவது ஒரு சிங்கள தலைவராகத்தான் இருக்கப்போகின்றார் அது ரணிலாகவும் இருக்கலாம், மைத்ரியாகவும் இருக்கலாம், அல்லது மஹிந்தவாகவும் இருக்கலாம், அல்லது வேறொரு சிங்கள தலைவராகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்குள் ஏற்படும்போது சிறுபாண்மைச் சமூகத்தை சேர்ந்த நாம் விரும்பிய ஒருவருக்கு ஆதரவளிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இன்னொரு சிங்கள தலைவரோடு சேர்ந்துகொண்டு மற்ற சிங்கள தலைவர்களை கடுமையாக குற்றம்சாட்டி பேசுவதையோ அல்லது அவர்களை பொதுவெளியில் விமர்சிப்பதையோ, அல்லது அவர்களை ஏளனம் செய்வதையோ தவிர்த்துக் கொள்ளவேண்டும். இன்று இல்லாது விட்டாலும் நாளையொருநாள் நாம் எதிர்க்கும் ஒருவரே நாட்டின் தலைவராக வரவும் முடியும். அப்போது அவருடைய முகத்தில் முழிப்பதற்குகூட நாம் கூச்சப்படலாம், இப்படியான நிலைமை வந்தால் அது அவர்களை மட்டுமல்ல நமது சமூகத்தையும் பாதிக்கும் செயல்பாடாகவும் அமைந்துவிடலாம். இதன் காரணமாகவே எந்தச் சிங்கள தலைவர்களையும் அரசியலுக்காக கடுமையாக பகைத்து கொள்வதை புத்திசாலி அரசியல்வாதிகள் எவரும் ஏற்படுத்திக் கொள்ளமாட்டார். ஆனால் ரிசாட் பதியுதீன் அவர்கள் இப்படியான நிலைமைகளில் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளவில்லை என்பதே எங்களின் கருத்தாகும்.

இப்போது விடயத்துக்கு வருவோம். ரிசாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை வெற்றியடையுமோ அல்லது தோல்வியடையுமோ தெரியாது,  ஆனால் அவருடைய அரசியல் எதிரிகளான தமிழ் தரப்பினரும், மஹிந்த தரப்பினரும், மைத்ரி தரப்பினரும், சிங்கள இனவாதிகளின் தூண்டுதலினால் ஜே.வி.பியினரும், ஐ.தே.கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் ரிசாட் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது வெற்றியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதே உண்மையாகும். பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பதல்ல அவர்களுடைய பிரச்சினை, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவருக்கு எதிரான சக்திகளையும் ஒன்றுபடுத்தி இந்தப்பிரேரணையை வெற்றிகொள்வதே அவர்களின் நோக்கமாகும். 

இந்தப்பிரேரணையை கொண்டுவரும் மஹிந்த அணியினருக்கு ரிசாட்டை பழிவாங்க இதுவொரு சந்தர்ப்பமாக பயன்படுத்தபடுகின்றது என்றும் கூறலாம். அதநேரம் மைத்ரி அணியினரும் இதனைச் சந்தர்ப்பமாக பயன்படுத்தவும் முடியும், அதேபோன்று மஹிந்த அணியோடு எதிரியாக செயல்படும் தமிழ் தரப்பினரும் இந்த விடயத்தில் எதிர்க்கட்சியோடு இணைந்து வாக்களிக்கவும் முடியும் என்பதே உண்மை. ஆக மொத்தத்திற்கு ரிசாட்டுக்கு எதிரான பிரேரணை என்பது நாட்டு நலனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்படும் ஒரு பிரேரணையல்ல, மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அவருடைய அரசியல்  எதிரிகளால் கொண்டுவரப்படும் ஒரு பிரேரணையாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது என்பதே உண்மை. 

இப்படியான நிலைமைகள் வரும் என்று புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இப்படியான நிலைமைகள் ஏற்படும் என்பதுதான் உண்மையாகும். ஆகவே இந்த விடயத்தில் ரிசாட் பதியுதீன் அவர்கள் பல படிப்பிணைகளைப் பெற்றால்தான் எதிர்காலத்தில் ஜாம்பவான் அரசியலை நடத்தி வெற்றியடைய முடியும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையென்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே..!  ரிசாட்டுக்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையென்பது  அரசியல் காழ்ப்புணர்ச்சியே..! Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.