எதிர்கால சந்ததிகளை நிம்மதியான நாட்டில் விட்டுச் செல்ல ஒன்றினைவோம் - Madawala News Number 1 Tamil website from Srilanka

எதிர்கால சந்ததிகளை நிம்மதியான நாட்டில் விட்டுச் செல்ல ஒன்றினைவோம்எதிர்கால சந்ததிகளை நிம்மதியான நாட்டில் விட்டுச் செல்ல ஒன்றினைவோம்.


பூச்சி புழுக்கலைகூட கொல்லாதே என்று சொன்ன புத்த மதத்தின் பெயரில் அரங்கேற்றப் படும் பயங்கரவாதம், புத்த மதத்தின் பெயரில் இந்நாட்டில் பயங்கரவாதக் குழுக்கல் உள்ளன என்பதற்கான சான்றாகும். 

இஸ்லாத்தின் பெயரால் உருவான பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க பாதுகாப்புத் துறையினருக்கு தோல் கொடுத்து உதவிய முஸ்லிம்களைப்போல், புத்த மதத்தின் பெயரால் அரங்கேறும் பயங்கரவாதத்தை அடியோடு அழிக்க சிங்கள மக்களில் நல்லோர்கள் ஒன்று சேர வேண்டும். இதுவே எமது நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் உகந்தது. 

அன்றேல்! எமது வாரிசுகளை ஒரு பயங்கரவாத சூழலில் தவிக்கவிட்டு உலகைப் பிரிவோராகவே எம் நிலை இருக்கப் போகிறது.

இப்பயங்கரவாதத்தின் பின்னால் மதச் சிந்தனை, இனவெறி, அரசியல் சூழ்ச்சி, வெளிநாட்டு தந்திரம் என்று எது இருந்தாலும் பாதிக்கப் படப்போவது நாட்டின் வாழும் அனைத்து இன மக்களும் நாடும்தான். வன்முறைகளால் தீர்வு பெற்ற எந்த வரலாறும் உலகில் எங்கும் பதியப் படவில்லை. சமயோசிதமும் புரிந்துணர்வுமே பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் மிகப்பெரிய செல்வமாகும்.

 கப்பலில் பயனிக்கும்போது தாகம் எடுத்தால் கப்பலைத் துவாரமிட்டு தாகத்தை தீர்த்துக் கொள்ள முட்டால்கள் முனைவார்கள். அதில் நாங்கள் தலைபோட முடியாது என புத்திஜீவிகள் தூரநோக்கும், சமயோசிதமும் இன்றி பார்த்துக் கொண்டிருந்தால் அழிவு யாவரையுமே தொற்றிக் கொள்ளத்தான் போகிறது. அதே நிலைதான் இன்றைய நாளில் இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது.

வன்முறையாளர்களது மௌடீகத்தால் நாட்டின் வளங்கள் எறிக்கப் படுகின்றன. இனங்களுக்கு மத்தியிலான உறவுகள் கேள்விக்குறியாக்கப் படுகின்றன. தடுத்து நிறுத்த வேண்டிய பெரும்பான்மை மக்களும் அரசும் கையாளாகாது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எல்லாம் நடந்து முடிந்தபின்னர் அனுதாப அறிக்கைளும், கண்ணீர் வடித்து கயவர்களை சாடும் வீடியோக்களும் வெளியிடுவதால் மீண்டும் இந்நிலை ஏற்படாதிருக்க வழியமையப் போவதில்லை.

அரசின்மீது அனைத்தின மக்களும் நம்பிக்கையிழந்து நிற்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். இதே நிலை இனங்களுக்கிடையிலும் தோற்றம் பெற்று வருகின்றமைக்கு இதுபோன்ற வன்முறைகள் காரணமாகின்றன. இந்நிலையானது எம் நாட்டின் சுபீட்சத்துக்கு மிகப்பெரும் கேள்விக் குறியாகும். அரசு தன்னை எவ்வாறு சுயபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதோ அதே போன்று! இந்நாட்டின் பெரம்பான்மை மக்களும் தம்மை சுயபரிசீலனை செய்து அக்கிரமங்களுக்கும், இனவாதங்களுக்கும் எதிராக ஒன்றினைவதினூடாகவே அனைத்தின சந்ததிகளையும் நிம்மதியான இலங்கையில் விட்டுச் செல்லலாம்.

நான் அஞ்சுவதெல்லாம் ஸஹ்ரான்களும், இல்ஹாம், இன்ஸாப்களும் இந்நாட்டில் மீண்டும் உருவாகிவிடக் கூடாது என்பதனைத்தான். மூன்று தசாப்தகால யுத்தத்தால் கதிகளங்கியிருந்த நாடு வெறும் ஒரு தசாப்தம் மட்டுமே சற்று நிம்மதியாக வாழ்ந்த நிலைமையில் அவ்வப்போது அரங்கேறும் மௌடீகத்தனமான இனவாத, அரசியல்வாத சூழ்ச்சிகளால் மீண்டுமொரு நிம்மதியற்ற காலத்தை இலங்கை மக்களுக்கு வழங்கி விடுவார்களோ என நினைக்கும்போது மனசு பதைபதைக்கிறது.

குடத்தை தலைகீழ் புரட்டி வைத்து நீர் நிறைப்பதைப்போல் சிலருக்கு புத்தியில் எதுவும் ஏறுவதில்லை. இந்நிலையில் உள்ளவர்கள் அனைத்து இனங்களிலும் உள்ளார்கள். அவர்களது புத்திக்கு ஏறாது என்பதற்காக புத்திஜீவிகள் மௌனித்து இருக்கலாமா? அவ்வாறு மௌனித்து நிற்பதுதான் இன்றைக்கு இந்நாட்டில், ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் மௌடீகமும் பயங்கரவாதமும் மதங்களின் பெயராலேய உருவாவதற்கு மிகப்பெரும் காரணியாகின்றது.

இனியேனும் கண் விழிப்போம். சீர்த்திருத்தங்கள் என்பது புத்திஜீவிகளுக்கு இறைவனால் வழங்கப் பட்டுள்ள கடமைகளில் ஒன்று என்பதனை உணர்வோம். பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட அரக்கர்களுக்கு அடிமையாவதில் இருந்தும், நம்நாட்டை வேட்டையாட முற்படும் வெளிநாட்டுக் கழுகுகளிடம் இருந்தும் நம் நாட்டை காக்க முன்வருவோம். மதங்களால், மொழிகளால், வேறுபட்டாலும் நாம் மனிதர்கள் எனும் மனிதத்தால் வழுவாக இணைந்து, நாம் இலங்கையன் எனும் அடைமொழியால் நாட்டைக் காக்க சபதமேற்போம்.

உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு. அவரவர் கலாசாரம் அவரவர்களுக்கு. மேலைத்தேய கலாசாரங்களுக்கும், அரேபிய கலாசாரங்களும் அடிமைப் படாது, அவரவர் மார்க்கத்தின் கலாசாரம் எதுவோ அதனை புரிந்துணர்வுடன் நடைமுறைப் படுத்தி இலங்கையன் எனும் சொல்லால் இணைந்து வாழ்வோம். 

இருதியாக...


எந்த இனத்தவரும் தத்தமது மார்க்கத்தையோ கலாச்சாரத்தேயோ பிறருக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறு விட்டுக் கொடுக்க வேண்டும் என மற்றவர்கள் நினைப்பது சர்வாதிகாரமாகும். சர்வாதிகாரம் என்றும் எங்கும் நித்திய ஜீவனாக வாழ்ந்த சரித்திரமில்லை. எனவே நமக்குள் தேவையானது நான் சொல்வது போல்தான் அடுத்தவன் வாழ வேண்டும் என்கின்ற அசாத்தியமான சிந்தனையல்ல. மாறாக! அவன் அப்படித்தான் இருப்பான். அது அவனது மதம். அது அவனது கலாசாரம்.நான் அதனை புறிந்து ஏற்று, நான் எனது மதத்துக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ப இருக்கிறேன் எனும் புரிந்துணர்வே நமக்குத் தேவையானது.


இறைவா அனைத்தின மக்களையும் இத்தீவில் ஒன்றாக வாழச் செய்திருக்கிறாய். அதே போன்று ஒற்றுமையுடனும் புரிந்துணரவுடனும் இந்நாட்டு மக்கள் வாழ துணை நிற்பாயாக றஹ்மானே.

அபூ ஸுமையா- மடவளை பஸார்.
15/05/2019
எதிர்கால சந்ததிகளை நிம்மதியான நாட்டில் விட்டுச் செல்ல ஒன்றினைவோம்  எதிர்கால சந்ததிகளை நிம்மதியான நாட்டில் விட்டுச் செல்ல ஒன்றினைவோம் Reviewed by Madawala News on May 15, 2019 Rating: 5