சொந்த நாற்றமென்றாலும் சொல்லியாக வேண்டும்!

By : முஜீப் இப்ராஹிம்–
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றிற்கு மாலை 4
மணியளவில் நானும், நண்பரும் குடும்பங்களோடு அஸர் தொழச்சென்றோம்.


பெண்கள் பகுதிக்கு தொழச்சென்றவர்கள் போன வேகத்திலேயே திரும்பி வந்தார்கள்.
அங்கே பாத்ரூம் (வுழூ எடுக்கும் பகுதி) படு மோசமாக இருப்பதாக சொன்னார்கள்.


குழந்தைகளின் பெம்பர்ஸ், பெண்களின் மாதவிடாய் பேட்ஸ்(pads) என்பவற்றையெல்லாம் அந்த பகுதிகளில் யாரோ வீசிச்சென்றிருப்பதாக சொன்னார்கள்.


இதனை நாங்கள் பள்ளிவாயல் இமாமிடம் முறையிட்டு பெண்களுக்கு தொழ ஒரு இடத்தை கேட்டோம். அவர் ஆண்கள் பகுதியில் ஒரு மறைவான இடத்தை ஏற்பாடு செய்து தந்தார்.


இந்த படுபாதகச்செயலை செய்கின்றவர்கள் வேறு யாருமல்ல முஸ்லிம் பெயர்களை கொண்ட பெண்கள்தான் என்பது அவருடனான தொடர் உரையாடல் மூலம் அறியக்கிடைத்தது.


“ உம்ராக்கு போற குரூப்பெல்லாம் இங்க வந்து தங்குற, அவங்க போற நேரம் எதையும் சுத்தம் பண்றதும் இல்ல, அதேபோல பயணம் வாற பெண்களும் சுத்தமில்லாத வேலைகள் பாக்குறாங்க. எங்கட பள்ளி மோதின்சாப்தான் எல்லாத்தயும் க்ளீன் பண்ண வேணும். அவர் எத்தன வேலையத்தான் பார்ப்பார்” என்று சலித்துக்கொண்டார் பள்ளி இமாம்.


கடும் ஆத்திரமாக இருந்தது.
அல்லாஹ் இந்த சமூகத்தை கடுமையாக சோதிப்பான், சோதிக்கவே வேண்டுமென்று மனசு அல்லல் பட்டது.


உம்ரா குரூப் நடத்துற உனக்கு பயணிகள தங்க வைக்க இந்த பள்ளிகள தவிர வேற இடமில்லையா? 


மாபோல, வத்தள , நீர்கொழும்பு, மினுவங்கொட பகுதி பள்ளிவாயல்கள்தான் இந்த உம்ரா வியாபாரிகளின் பலி பீடங்கள்.


நீங்கள் லட்சக்கணக்கில் பணத்தை சுளையாக கறந்துதானே இந்த வணிகத்தை செய்கின்றீர்கள்? உங்களது பயணிகளை ஹோட்டல்களில் தங்கவைக்க வேண்டியதுதானே?


தவிர்க்க முடியாத சூழலில் ஓசியில் பள்ளிவாயலை பாவிக்க நேர்ந்தால் அதற்குரிய முறையில் அதனை பராமரிப்பது உனது கடமை இல்லையா?


அது போலவே இலங்கை முழுக்க போக்குவரத்து பிரதான வீதிகளில் இருக்கிற பள்ளிகளில் பெண்களுக்காக பிரத்தியேக தொழும் அறைகளை/ வசதிகளை வைத்திருக்கிறார்கள்.


இவற்றில் பெரும்பாலானவற்றை தொழ முடியாத இடங்களாக நமது தீன்குலத்து பெண்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள்.


பிள்ளைகளுக்கு பெம்பர்ஸ் மாற்றவும் தங்களுக்கு பேட் ( pad) மாற்றவும் உரிய இடங்களாக பலர் இதனை மாற்றிவைத்திருக்கிறார்கள்!


சில பெண்கள் அங்கே வந்து தொழுவதும் இல்லை மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு போவதாக பள்ளிகளுக்கு பொறுப்பானவர்கள் வேதனையோடு சொல்கிறார்கள்.

_________________________________________

ஏபர்ல் 21, ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெற்றது.


அதற்கு பிறகு முஸ்லிம் சமூகம் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மாற்று மதத்தவர்கள் கூறி வருகிறார்கள்.


எப்படி உடுக்க வேண்டும், எப்படி படுக்கவேண்டும் என்றெல்லாம் அவர்கள் பாடம் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

நீங்கள் அளவுக்கு மீறி பாவங்களில், அக்கிரமங்களில் ஈடுபடும் போது எதிரிகளை உங்கள் மீது சாட்டி விடுவோம் என்று ஏக இறைவனே கூறுகிறான்.

இன்று முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு கடுமையான மீள்பரிசீலனை தேவை என்பதை இலங்கை முஸ்லிம் சமூகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

நடந்த தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

அந்த பொறுப்பு என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் “சம பங்கானது அல்ல”!

றிஸ்வி முப்தியுடைய பங்கும் மாரக்கட்டில் மரக்கறி விற்கின்ற றிஸ்வி நாநாவின் பங்கும் ஒன்றல்ல, பருமனில் வேறுபட்டதாயினும் நம் எல்லோருக்கும் பங்குண்டு.

இந்த பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள் எங்கிருந்து தங்களை மீளக்கட்டமைக்கலாம் என்று கேட்டால் அதற்குரிய ஒரே பதில் “பள்ளிவாயல்கள்”.

பள்ளிவாயல்கள்தான் நமது மார்க்கத்தின் அச்சாணி.
அது மத்திய நிலையம், அது சரியாக செயற்பட்டால் சமூகமும் சரியாக வழிநடாத்தப்படும்.


பள்ளிவாயல்களை புனர்நிர்மாணம் செய்ய வேண்டியதே நமது முதல் பணியாகும்.

பள்ளிவாயல்களை புனர்நிர்மாணம் செய்வதென்றால் புதிதாக மாபிள் பதித்து பெயின்ட் அடிப்பதல்ல.

*முதலில் தரமான தகுதியுள்ள அறிவுள்ளவர்கள் பள்ளிவாயல்களின் நிர்வாகிகளாக செயற்படவேண்டும்.

*மார்க்கத்தில் நன்கு தேர்ச்சியுள்ள, இஸ்லாத்தை பக்குவமாக போதிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் பள்ளிவாயலின் இமாமாக நியமிக்கப்பட வேண்டும். அவருக்கு தற்போதைய சூழலில் மாதமொன்றிற்கு ஐம்பதாயிரத்திற்கு குறையாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். ( உஸ்மானிய கிலாபத்தில் துருக்கி பள்ளிவாயல் ஒன்றிற்கு இமாம் தேடி பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தில் பத்தில் ஒரு பங்கு தகுதியாவது வேண்டும்)

*பள்ளிவாயலுக்கு நியமிக்கப்படும் முஅத்தின் அழகான குரலில் அதான் சொல்லக்கூடியவராக இருக்க வேண்டும்.
அவருக்கு கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலைகளை கொடுக்க கூடாது.

*பள்ளிவாயலை சுத்தப்படுத்தும் பணிகளுக்கு வேறாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

*பள்ளிவாயல்களை பெண்களுக்காக திறந்துவிடவேண்டும்.

*அனைத்து பள்ளிவாயல்களிலும் சரியான மார்க்கத்தை கற்பிக்கும் நிலையமொன்றையும், அறிவைத்தேடும் நூலகமொன்றையும் நிறுவுதல் வேண்டும்.

_________________________________________

தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகம் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொல்கின்ற மாற்று மதத்தவர்களின் ஆலோசனைகள் பலவற்றில் மத்ரசாக்களின் பாடத்திட்டமும் அடங்குகிறது.

அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி பாடத்திட்டத்தை மாற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும். மத்ரசாக்கள் வினைத்திறன் கொண்ட உலமாக்களை உருவாக்கும் இடங்களாக மாற வேண்டும்.

மத்ரசா கல்வியை நிறைவு செய்த மெளலவி ஒருவர் பள்ளிவாயல்களில் மாத்திரம் தொழிலை நாடி தலைசொறிந்து கொண்டு நிற்கும் நிலை மாற்றப்படவேண்டும்.

ஜாமிஆ நழீமிய்யாவின் பட்டதாரிகளை பாருங்கள்... அவர்கள் பள்ளிவாயல்களில் வேலை தேடுவதில்லை. நழீமிய்யாவில் மார்க்கத்துறையில் பட்டம் பெறுவதற்கு சமாந்தரமாக வெளிவாரிப்பட்டமொன்றையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

அரச தனியார் துறைகளில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளை அவர்கள் தேடிக்கொள்கிறார்கள்.

உதாரணத்திற்கு இலங்கை வெளிநாட்டுச்சேவையில் இருக்கும் அஷ்ஷெய்க் அமீர் அஜ்வத் ஒரு நழீமியா பட்டதாரி. அத்தோடு சட்டத்தரணியாகவும் சட்டமுதுமானியாகவும் அவர் திகழ்கிறார்.

இப்போது இருக்கும் சாதாரண மத்ரசாக்களின் கட்டமைப்பில் OL, AL பரீட்சைகளை கூட எழுதுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்புகள் இல்லை. இந்த பின்புலத்தில் மார்க்க கல்வியை மாத்திரம் பயின்று வெளியேறும் மெளலவி ஒருவர் பள்ளிவாயலை தவிர வேறெங்குதான் தொழிலை தேடி போக முடியும்?

வெளியாகும் ஆயிரக்கணக்கான மெளலவிமார்களையும் உள்வாங்கிக்கொள்ள எத்தனை பள்ளிவாயல்கள் இருக்கின்றன?

ஆகவே மத்ரசாக்களின் பாடத்திட்டங்களை மீள்பரிசீலனை செய்யும் போது தொழிற்சந்தைக்கு ஏற்றால் போலவும் அவற்றை வடிவமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

_________________________________________

மேற்சொன்ன இரண்டு விடயங்களும் அதாவது  பள்ளிவாயல்கள் மற்றும் மத்ரசாக்கள் தொடர்பான மீள்பரசீலனை/ புனர்நிர்மாணம் என்பது நிச்சயமாக ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும் புனர் நிர்மாணமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மாறாக இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை இனிமேலும் கணக்கில் எடுக்காது வழமையான பல்லவிகளை பாடிக்கொண்டிருந்தால் இஸ்லாத்தை பிழையாக அதி தீவிரத்தன்மையோடு விளங்கிக்கொள்ளும் மனிதர்களின் உருவாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஒரு பக்கம் தொடர்ந்தும் பயங்கரவாதம் வளரும்!

மறுபக்கம் தொடர்ந்தும் கஷ்ட காலங்களில் போதிக்கப்படும் ரெடிமேட் பொறுமை போதனைகளும், முஸ்லிம்கள் சகவாழ்வு என்றெண்ணி செய்கின்ற ஆபத்துகால காரியங்களும் படுமோசமான கோழைச்சமுதாயமொன்று உருவாகி விட வழிவகுக்கும்!

இஸ்லாம் போதிப்பது பயங்கரவாதத்தையும் அல்ல கோழைத்தனத்தையும் அல்ல.

இஸ்லாம் வீரத்தை போதிக்கிறது.

இஸ்லாம் தன்மானத்தை, தற்காப்பை, எதிரிகளை எப்படி எதிர்கொள்வது என்பவற்றை பற்றி போதிக்கிறது.

இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை சரியாக எடுத்துச்சொல்ல உரியவர்கள் தவறும் போது இந்த சமூகம் பயங்கரவாதத்திற்கு அல்லது கோழைத்தனத்திற்கு அடிமையாகும் சூழல் தவிர்க்கமுடியாமல் உருவாகும்.

கடந்த கால தவறுகளின் விளைவாக 
“அல்லாஹ் காப்பாத்துவான்” என்று எழுதினால் கூட பொலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போகின்ற சமகால நிலவரங்கள் தோன்றியுள்ளன.

இவை அனைத்தும் நாம் தேடிக்கொண்டவை.

மீண்டும் சொல்கிறேன் நம் எல்லோருக்கும் நமது மீள்வாசிப்பு தொடர்பில் பொறுப்பு இருக்கிறது.

அவை அனைவருக்கும் சமமானவை அல்ல, பருமனில் வேறுபட்டவை. விரைந்து சரிசெய்யப்பட வேண்டியவை.

(ஏப்ரல் 19 இல் நீர் கொழும்பு பள்ளியில் கனத்த மனதின் பாரம் இப்போது விழுகிற ஒவ்வொரு அடியிலும் மெல்லென இறங்குகிறது!)

( முடியுமானவரை இதனை பகிருங்கள்)
சொந்த நாற்றமென்றாலும் சொல்லியாக வேண்டும்! சொந்த  நாற்றமென்றாலும் சொல்லியாக வேண்டும்! Reviewed by Madawala News on May 19, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.