சில தமிழ் நண்பர்கள் குர்ஆனின் மீது வைக்கும் விமர்சனமும் அதற்கான அழகிய பதிலும்.


BY: AHAMEDSHA AHAMED JAMSATH ( AL AZHARI )
அண்மையில் இலங்கையில்  நடந்த ஐ எஸ் பயங்கரவாத தாக்குதலின் பின்
சில தமிழ் நண்பர்கள் குர்ஆனை பேசுபொருளாக எடுத்துள்ளனர். இந்த பயங்கரவாதத்துக்கு குர்ஆன்தான் தூண்டுகிறது, அதில் இருக்கும் ஜிஹாத் பற்றிய வசனங்கள் மூலம்தான் ஐ எஸ் பயங்கரவாதிகள் தூண்டப்பட்டனர் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இந்தக் கருத்து எந்தளவு அடிப்படை அற்றது, எந்தளவு மேம்போக்கானது, எந்தளவு  பிறமத புனிதத்துவ நூல் பற்றிய கரிசனையற்றது, எந்தளவு வாசிப்பற்ற விமர்சனம் என்பதை பேசுவதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.


ஓ எல் பரீட்சையில் கணிதப்பாட நூலை பார்த்து படித்துவிட்டு பரீட்சை எழுதிய மாணவன் பெfயில் ஆகிட்டான் என்பதட்கு அந்த கணித நூலே பிழை என்று சொல்வதுபோல உள்ளது விமர்சனம் செய்யக்கூடிய உங்களது கருத்துக்கள். அதே நூலை படித்து சித்தியடைந்தவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்க்க முன் இப்படி நூலில் குறை சொல்வதுதான் அறிவுபூர்வமா? குர்ஆனில் பயங்கரவாதம் செய்பவர்களுக்கு 72 சொர்க்க கன்னிகள் உள்ளதாக யார் சொன்னது? இப்படி விமர்சன அடிப்படைகள் அற்ற, விமர்சன நெறிகள் பேணப்படாத கருத்துக்களே குர்ஆனின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாக காணமுடிகிறது.


எந்த ஒரு நாட்டின் ஓரு அரசும் தனது நாட்டு மக்களை, தனது நாட்டு இறையாண்மையை பாதுகாக்க எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள யுத்தம் செய்யத்தான் செய்யும், இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏட்பட்டால் மாத்திரம் முஸ்லீம் நாடு ஒன்றுக்கு யுத்தம் செய்ய அனுமதியை குர்ஆன் கொடுத்துள்ளதே தவிர பொதுமக்கள் நினைத்தவாறு ஆயுதம் தூக்க குர்ஆன் எங்கும் போதிக்கவில்லை. ஐ எஸ் காரன் செய்றது பிழை என்று தெரிந்த உங்களுக்கு அவன் குர்ஆனை பிழையாகத்தான் விளங்கி இருப்பான் என்று புரிய நேரமா செல்லும்? 99.99 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை குர்ஆனின் புரிதலாக எடுப்பீர்களா? ஒரு வீதமும்கூட இல்லாத இவர்கள் செய்யும் பயங்கரவாதம்தான் குர்ஆனில் இருக்கிறது என்று எண்ணுவீர்களா?


குர்ஆன் போதிக்கும் ஆயுத போராட்டம் தமது அரசாங்கத்தை எதிர்த்து வந்த எதிரிப்படைகளுக்கு எதிராக சொல்லப்பட்டது.


"உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(2:190)


"மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்".(60:8)


இந்த வசனங்களை எல்லாம் சாதாரணமாக மேலோட்டமாக வாசித்தாலே பொது மக்களை கொலை செய்வதாக எந்த புத்தியுள்ள வாசிப்பாளனும் புரிய மாட்டான், ஒரு அரசாங்கம் தனது நாட்டையும், தனது மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க செய்யும் யுத்தகால கட்டளையாகவே ஒரு சிறந்த வாசிப்பாளன்இந்த வசனங்களை புரிய முடியும்.


இது தவிர போராட்ட களத்தில்கூட ஒரு அரசு எதிரி அணியினருக்கு உதவி செய்ய வந்த பெண்களைக் கூட கொல்லுமாறு அனுமதிக்கவில்லை. இதனையே அந்த வசனத்தில் அத்துமீறவேண்டுமாம் என்றும் கூறுகிறது. எதிரிக்கு போர்க்களத்தில் உதவி செய்ய வந்தவர்களையே கொலை செய்யக் கூடாது என்று சொல்லும் குர்ஆனா பொதுமக்களை கொலை செய்ய சொல்லும்? சிந்திக்க மாட்டீர்களா? போராட்டத்தை அறிவிக்காத எவருடனும் போர் புரிய வேண்டாம் என்றும் அவர்களுடன் உதவி ஒத்தாசையுடன் நடக்குமாறும் கூறும் குர்ஆன் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை போதிப்பதை காண முடிக்கிறது. இந்த குர்ஆனா மாற்று மதத்தவர்களை கொலை செய்ய சொல்கிறதாக நீங்கள் நம்புகிண்றீர்கள்?


"“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்” என்றும், “ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்”(5:32)


அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்தால் மனித சமூகத்தையே அவர் கொலை செய்தவர் ஆவார் என்றுதான் குர்ஆன் சொல்கிறது. அதேபோல ஒரு உயிரை வாழவைத்தவர் முழு மனித இனத்தையே வாழவைத்ததாக கருதப்படுவார் என்றும் குர்ஆன் கூறுவதிலிருந்து மனித உயிர் ஒன்றின் பெறுமதி இஸ்லாத்தில் எவ்வளவு உயர்ந்து நிட்கிறது என்பதை தெளிவாக காணமுடிகிறது அல்லவா, இப்படிப்பட்ட இஸ்லாமா மாற்றுமத சகோதரர்களை, குழந்தைகளை, பெண்களை கொலை செய்ய தூண்டியது என்று சொல்ல வருகின்றீர்கள்? காட்டுமிராண்டித்தனமாக அப்பாவிகளை கொன்ற ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கு இந்த குர்ஆன் வசனங்களில் கிஞ்சீற்றும் ஆதாரம் இல்லை என்பதை உங்களில் சிந்திக்கக் கூடிய, புத்தியுள்ளவர்கள் தெளிவாக அறியமுடியும்.


மேலே கூறியதுபோல ஒரு அரசு, இன்னொரு எதிரிப் படைக்கு எதிராக செய்வதுதான் ஆயுத ஜிஹாத், ஐ எஸ் போன்ற கிறுக்குப் பிடித்த பயங்கரவாதிகள் செய்தவை எல்லாம் ஜிஹாத் இல்லை. இதனை இன்னும் கொஞ்சம் விளக்குவதாக இருந்தால் ஒரு அரசு யுத்த காலங்களில் தமது ராணுவத்திடம் எதிரிகளை தாக்கி கொல்லுங்கள், அவர்களை அழியுங்கள் என்று கட்டளையிடும் கட்டளைகளை எல்லாம் இந்த உலகம் எவ்வாறு புரிந்துகொள்கிறது? அதனை புரிந்தால் பல முரணான புரிதல்களை முரண் நிவர்த்தி செய்திருக்கலாம்.


இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடும்போது, விடுதலைப் புலிகளின் கமாண்டோக்கள் தமது படைகளை நோக்கி எதிரிகளை கொல்லுங்கள், அவர்களை வெட்டுங்கள், எதிரியை இரக்கம் இல்லாமல் தாக்குங்கள் என்று சொன்ன கட்டளைகள் எல்லாம் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக எடுப்பதா இல்லை ஒரு அரச தளபதி படைகளுக்கு சொல்லும் யுத்த கால கட்டளையாக எடுப்பதா? இது சாதாரணமாக புரியக்கூடிய விடையம், இதே போன்றுதான் குர்ஆனிலும் ஒரு அரச தளபதிக்கு சொல்லும் கட்டளை உள்ளது. இதனை ஐ எஸ் போன்ற பயங்கரவாதிகள் எப்படி பிழையாக புரிந்தார்களோ அதுபோலவே நீங்களும் புரிகிண்றீர்கள் என்றால் புரிதல் உங்கள் இருவரிலும்தானே தவிர குர்ஆனில் அல்ல.


முஹம்மது நபி ஸல் அவர்கள் ஆட்சியாளராக இருந்த நேரங்களில் மதீனாவை நோக்கி எதிரிகள் படை எடுத்து வந்தபோது நாட்டின் எல்லையில் நின்று
தமது நாட்டு மக்களை காப்பாற்ற தற்காப்பு யுத்தம்தான் செய்தார்கள், அது நேரடியாக யுத்த பிரகடனம் செய்யப்பட்ட பின் இரண்டு நாடுகளின் ராணுவங்கள் மோதிக்கொள்ளும் நிலைதான் உருவானது. பொதுமக்கள் தாக்கப்படும் எந்த சம்பவம் அங்கு நடக்க வாய்ப்பே இல்லை ஏனெனில் யுத்தம் மிகதூரமான எல்லையில் நடக்கக் கூடியதாக இருந்தது. முஹம்மது நபி ஸல் அவர்கள் ஒரு நிலத்தை ஆட்சி செய்தார்கள், அந்த நாட்டுக்கு என்று தனி ராணுவம், ஆயுதம், தனி சிவில் வாழ்க்கை இருந்தது, அந்த நாட்டுக்கென்று "மதீனா சாசனம்", பல்லின சமூகத்துடனான ஒப்பந்தங்கள், சகவாழ்வு என்று பல கட்டுக்கோப்புகள் இருந்தது. முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், மஜுஸுகள், காட்டறபிகள் என பல தரப்பட்ட மக்களை உள்வாங்கிய ஒரு அரசாக அது இருந்தது. இவர்களை சுற்றி இருந்த எதிரிகளால் அச்சுருத்தல் இருந்தபடியால் போர் மேகச்சூழல் காணப்பட்டது. இந்த நிலையில் தனது நாட்டு மக்களை ஒரு நாட்டின் ஜனாதிபதியாக, ராணுவ தளபதியாக காப்பாற்றும் பொறுப்பு முஹம்மத் நபி ஸல் அவர்களுக்கு இருந்தது. முடியுமானவரை சாமாதான ஒப்பந்தம் செய்து சுபிட்சமாக வாழவே முயட்சி செய்தார்கள். குர்ஆனும் அவ்வாறே சொல்கிறது:


"அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக!(8:61)


இதனால்தான் இஸ்லாத்தின் பெயரிலேயே சமாதானம், கட்டுப்பாடு என்ற அர்த்தம் பொதிந்துள்ளது.


ஆனால் இந்த ஐ எஸ் பயங்கரவாதிகள் இப்படியா யுத்தம் செய்கின்றனர்? இவர்களுக்கு என்று தனி நிலம், ராணுவம், அதிகாரம் உள்ளதா? இவர்கள் இலங்கையின் அதிகார நில எல்லைக்குள் இருந்துகொண்டு, ஒழிந்துகொண்டு கோழைகளாக
அப்பாவி பொதுமக்களை, குழந்தைகளை, பெண்களை, வயோதிபர்களை முதுகுக்குப் பின்னால் நின்று கொலை செய்துள்ளனர். இதட்கு எந்த வகையில் குர்ஆன் பொறுப்புக்கூற முடியும்? இப்படி ஒரு யுத்த முறையை எந்த இடத்திலும் குர்ஆன் கூறவே இல்லை. அப்படி ஒரு வசனத்தை அணுவளவும் குர்ஆனில் கண்டுகொள்ள மாட்டீர்கள்.


மதீனா அரசொன்று உருவாக முன்பு மக்காவில் தமக்கெதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அத்துமீறப்படும் மிகப்பெரும் அநீதிகளை சகிப்புத்தன்மையுடன் சுமந்து வாழ்ந்த நபியவர்கள் அந்த நாட்களில்கூட எதிரிகளை தாக்குவதட்கு எவரையும் தூண்டவில்லை, அடித்தால் அடிவாங்கி பொறுமையாக இருங்கள், இல்லை என்றால் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றுதான் அந்த மக்களுக்கு கூறினார்கள். மதீனா அரசு உருவான பின்புகூட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக அத்துமீறி யுத்தம் செய்ததாக வரலாறு இல்லை. மதீனாவை தாக்க வந்த எதிரணி படைகளை மதீனாவின் எல்லையை தாண்டி வரவிடாமல் தடுக்கும் யுத்தம் மாத்திரமே நபி ஸல் அவர்களின் யுத்தமாக இருந்தது.


குர்ஆனில் ஆயுதம் ஏந்தி போராடுவதட்கு மட்டும் ஜிஹாத் என்று சொல்லப்படவில்லை, மனிதர்களுக்கு நன்மை செய்வது, பெற்றோருக்கு, உறவுகளுக்கு, பக்கத்து வீட்டாருக்கு உதவி செய்வது, மனித நேயத்துடன் நடப்பது இவை எல்லாத்துக்கும் ஜிஹாத் என்றுதான் சொல்லப்படும். குர்ஆனில் நீங்கள் சொல்லும் கருத்துத்தான் உள்ளது என்றால் ஐ எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் வரும்வரை முஸ்லிம்கள் அதனை செய்யாமல் இருந்தார்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?


உண்மையில் ஜிஹாத் என்பது எதனைக் குறிக்கிறது, யாருக்கு, எச்சந்தர்பத்தில் என்பதுபற்றிய தெளிவுகளை இஸ்லாமிய சமூகத்தின் அறிஞர்கள் அழகான முறையில் விளக்கித்தான் உள்ளார்கள். அவ்வாறுதான் 99.99 வீதமான மக்கள் நம்பியும் வருகின்றனர். எனவே உங்கள் குற்றச்சாட்டும் ஐ எஸ் பயங்கரவாதிகளின் புரிதலும் ஒன்றுதான் என்பதையே இது காட்டுகிறது. இதன் பின்பும் நீங்கள் ஐ எஸ் சொல்லும் விளக்கம்தான் சரி என்பீர்களா, அல்லது முழு முஸ்லிம்களும் சொல்லும் விளக்கம் சரி என எடுப்பீர்களா? ஐ எஸ் சொல்லுவதுதான் சரி என்று நீங்கள் கருதினால் அவர்கள் சரியாக புரியக்கூடிய புத்திசாலிகள் என்று சொல்ல வருகின்றீர்களா?


அப்படி என்றால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? முழு மனித குலத்துக்கே எதிரான காட்டுமிராண்டி தாக்குதலை செய்த இவர்கள் குர்ஆனை நிச்சயமாக அறிவுபூர்வமாக, புத்திஜீவித்துவ பின்னணியில் நின்று புரிந்திருக்க வாய்ப்பில்லை, இவர்கள் புத்தியில்லாத மூடர்கள் என்றுதானே நீங்கள் முடிவு எடுத்திருக்க வேண்டும். இத்தனை நூற்றாண்டுகாலம் சகவாழ்வு, சகிப்புத்தன்மையுடன் வாழும் முஸ்லிம்கள் சொல்லும் விளக்கம்தான் சரியாக இருக்கும் என்றுதானே முதலில் நீங்கள் நினைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையே சகவாழ்வும், சகிப்புத்தன்மையும்தான் என்று இத்தனை நூற்றாண்டுகளாக நாங்கள் வாழ்ந்து காட்டியதைத்தான் நீங்கள் கவனித்திருக்க வேண்டும். மாறாக நேற்று வந்த காட்டுமிராண்டி ஐ எஸ் சொல்வதை குர்ஆனின் புரிதலாக நீங்கள் பிரச்சாரம் செய்வது கலாசாரங்களுக்கு இடையில் நல்லதொரு உரையாடலை ஊக்குவிக்காது என்பதை உங்களில் சிந்திக்கக் கூடியவர்கள் நிச்சயம் அறிவர்.
சில தமிழ் நண்பர்கள் குர்ஆனின் மீது வைக்கும் விமர்சனமும் அதற்கான அழகிய பதிலும். சில தமிழ் நண்பர்கள் குர்ஆனின் மீது வைக்கும் விமர்சனமும் அதற்கான அழகிய பதிலும். Reviewed by Madawala News on May 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.