எம் கண்ணீரும் காயவில்லை, பெருமூச்சும் ஓயவில்லை.


21. 04. 2019 மனிதம் தலை குனிந்த நாள். அன்று ISIS மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை இலங்கையில் நடத்தியது.
சிதைந்துபோன பிஞ்சுகள், இளசுகள், பெண்கள், வயதான பெரியவர்கள், மொத்தமாகவே அழிந்துபோன குடும்பங்கள் என அத்தனையும் நினைவுக்கு வரும்போதெல்லாம் உள்ளம் குமைகிறது, நிமிடத்திற்கு நிமிடம் பெருமூச்சே பிறக்கிறது. வாழவேண்டிய வயதில் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன, கொல்லப்பட்டவர்களுக்கு தாம் ஏன் கொல்லப்பட்டோம் எனத் தெரியாது, கொன்றவனுக்கும் அதை ஏன் செய்தான் எனவும் தெரியாது.


இன்னுயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்களை தேற்ற எமக்கு வார்த்தைகள் தெரியவில்லை, முஸ்லிம் பெயர்தாங்கிய முட்டாள்களின் ஈனச் செயலால் வெட்கமும் அவமானமும் என்னை தொற்றிக்கொண்டது, யாரோடும் சச்சரவுப்படாது தானும் தன்பாடுமாய் வாழ்ந்திருந்த பொது மக்கள் அவர்கள், அவ்வுயிர்களைக் காவு கொண்ட காட்டேரிகள் மறு உலகிலும் மன்னிக்கப்படமாட்டார்கள்.

பயங்கரவாதிகள் பயங்கரவாதியைத்தான் பின்பற்றியிருக்கிறார்கள், அவர்கள் உண்மை முஸ்லிமாக இருந்து குர்ஆனை வாழ்வாகப் பின்பற்றியிருந்தால் அந்த குர்ஆன் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கும், மனிதகுலத்திற்கு எதிரான அநியாயத்தை குர்ஆன் எங்குமே பேசவில்லை. “எவன் ஒரு உயிரை நியாயமின்றி கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அத்5:வசனம்32)” என்றவசனம் ஒன்றே அவர்களுக்கு போதுமாக இருந்திருக்கும்.


கறைபடிந்த அத்தியாயத்தை வரலாறு நெடுகிலும் அழியாத்தடமாக எழுதிவிட்டு நரகம் சென்றுவிட்டார்கள் கொலைகாரர்கள், படுகாயமடைந்தவர்களின் வேதனை எம்மனதிலும் வலிக்கிறது, உறவைப் பறிகொடுத்த மக்களின் அழுகுரல்களும் கண்ணீரும் நெஞ்சைப்பிழிகின்றன. மொத்த முஸ்லிம் சமூகமுமே பயங்கரவாதிகளை சபிக்கிறது.

ISIS ஒரு இஸ்லாமிய இயக்கமல்ல, அராபிய தேசங்களில் அது முஸ்லிம்களையே கொன்றொழிக்கிறது, வல்லரசுகளின் ஏவலாளிகளாக ISISசெயற்பட்டு சொல்லொணா அழிவுகளையும் மனிதத் துயரங்களையும் அது பெற்றுக் கொடுத்திருக்கிறது, மக்களுக்கு நல்லது எதையும் அது செய்த வரலாறே இல்லை. இப்போது இந்த நாட்டில் இவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் மீளமுடியாத இக்கட்டில் தள்ளிவிட்டார்கள்.


யுத்தகால கசப்புகளின் பின்னர் சமூகங்களிடையே சகவாழ்வே பிரதான தேவையாக உணரப்பட்டு வருகிறது, உள்நாட்டிலே ஏற்பட்ட இனக்கலவரங்களின் போதெல்லாம் பெரும் உயிர் இழப்புகளையும் பொருட் சேதங்களையும் சந்தித்தபோதும் முஸ்லிம்கள் எந்தவொரு வன்முறைக்கும் செல்லவில்லை, சமாதானமான வாழ்வே எமது தேவை.

இன்று எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலை மிகவும் கவலை தருகிறது. ஒவ்வொரு சமூகத்திலும் கறுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறார்கள், முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்கல்ல, ஆனால் கொலைகாரத் தலைவனின் சகிப்புத்தன்மையற்ற வெறுப்புப் பேச்சுக்கள் பற்றி நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம்கள்தான் முதலில் பாதுகாப்புத் தரப்பிடம் முறைப்பாடும் செய்திருக்கிறார்கள், இவையெல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டுவந்த நிலையில் அன்று ஒரு பெரும் கோரம் நடந்தேறியுள்ளது, கொலைகாரப் பிரகிருதிகளின் எச்ச சொச்சங்களும் முளையிலேயே மொத்தமாக களையெடுக்கப்படவேண்டும், 21ம் திகதிக்கு முன்னிருந்த சுமூகமான சூழல் இந்நாட்டில் மீண்டும் ஏற்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.



முஸ்லிம் சமூகத்தில் ஒருவன் என்ற வகையில் இந்த ஈனப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றேன், பாதிக்கப்பட்டவர்களின் மன அமைதிக்காகப் பிரார்த்திக்கின்றேன், இந்த சம்பவம் தொடர்பில் துயருற்றிருக்கும் அனைவருக்கும் என் அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்கின்றேன், உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.

இறுதியாக, நாம் பின்பற்றும் குர்ஆனின் இரு கட்டளைகளை நினைவுபடுத்தி விடைபெறுகிறேன்.



4:135. பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்.


4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

நன்றி
எஸ். இம்தியாஸ்
ஆசிரியர், கல்முனை
எம் கண்ணீரும் காயவில்லை, பெருமூச்சும் ஓயவில்லை. எம் கண்ணீரும் காயவில்லை, பெருமூச்சும் ஓயவில்லை. Reviewed by Madawala News on April 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.