பிரதமர் சந்திப்பினூடாக புத்தள மக்களின் போராட்டம் திசைமாற்றப்பட்டதா...?ஒரு சில விடயங்களை வெளியில் நின்று சாதாரணமாக நோக்கும் போது,
அது குறித்த விடயத்துக்கான தீர்வு போன்று ஊடகங்களால் காட்டப்படும். உள் நுழைந்து ஆராய்ந்து பார்த்தால், அதுவே அப் போராட்டத்தை மழுங்கடிக்கும் ஒரு செயலாக அமைந்திருக்கும். அப்படியான ஒரு விடயம் தான், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமருக்கும் கிளீன் புத்தளம் அமைப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையாகும்.


அருவக்காலு குப்பை கொட்டும் திட்டத்துக்கு இம் முறை நிறைவேற்றப்பட்டுள்ள பட்ஜட்டில் 7600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜட்டை தோற்கடித்தாலோ அல்லது குறித்த விடயத்தை பட்ஜட்டிலிருந்து நீக்கியிருந்தாலோ இத் திட்டத்தை இவ்வருடம் நிறைவேற்ற முடியாத தற்காலிக உறுதியான தீர்வொன்று கிடைத்திருக்கும். இதனை மையப்படுத்தியே புத்தள மக்களின் போராட்டமாகவும், கோரிக்கையாகவும் அமைந்திருந்தது. 

இந்த பட்ஜட்டை எதிர்க்கும், தோற்கடிக்கும் திராணி எமது அரசியல் வாதிகளிடமில்லையென்பது வெளிப்படையான உண்மை. இவ்வருட பட்ஜட்டில் அவர்களின் அமைச்சில் கடும் மழையென்பது நாமறியாததுமல்ல. இந்த பட்ஜட்டை எதிர்க்காமல் அந்த மக்களிடம் சென்றால், அந்த மக்கள் பழைய தும்புக்கட்டை தூக்குவார்கள். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். அந்த பட்ஜட்டை தோற்கடிக்க வேண்டுமென்ற சரியான போராட்டப் பாதை மழுங்கடிக்கச் செய்யப்பட வேண்டும். அதற்காகவே குறித்த தினம் ஒரு பேச்சுவார்த்தை பிரதமருடன் ஏற்பாடு செய்யப்பட்டதெனலாம். இதனை சில விடயங்களை வைத்து அறிந்துகொள்ள முடியும்.

குறித்த பேச்சு வார்த்தையின் போது கிளீன் புத்தளம் அமைப்பினர் நம்பும்படியாக பிரதரும் ஒரு சில கதைகள் சொன்னார். கிளீன் புத்தளம் அமைப்பினரின் கண் எதிரே, தங்களை அழிக்கும் பணத்தை செலவு செய்வதற்கான அங்கீகாரம் எமது முஸ்லிம் அரசியவல் வாதிகள் உட்பட பெரும்பான்மை அரசியல் வாதிகளால் வழங்கப்பட்ட போதும், அதை வேடிக்கை பார்த்துவிட்டு, ஏதோ தீர்வு கிடைத்தாப்போல் செய்தி வெளியிடுகின்றனர். குறித்த விடயத்தில் தீர்வு கிடைக்கும் நம்பிக்கை யிருப்பதாக முகநூல் நேரலை பதிவுகளையும், செய்திகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் பலர் ஒரு கட்சியிற் ஆதரவாளர்களென்பதை நன்கு உற்று நோக்கினால் அறிந்துகொள்ள முடியும். 

பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்துகொள்ளலாம். பட்ஜட்டிலிருந்து குறித்த விடயத்தை நீக்குவது, குறித்த தினம் செய்ய வேண்டிய ஒன்று. பிரதமரை அன்று தான் மக்களோடு சந்திக்க வைக்க வேண்டிய அவசியமென்ன என்பதை உற்று நோக்கினாலே, அது வேறு ஒன்றை நோக்கிலான காய் நகர்த்தலென்பதை அறிந்துகொள்ளலாம். அல்லாது போனால், பட்ஜட்டை பேசு பொருளாக வைத்து எமது முஸ்லிம் அரசியல் வாதிகளால் சாதிக்க முடிந்தது, பிரதமரை சந்திக்கச் செய்வது தானோ?

பலர் புகழும் படியாக அன்று பிரதமர் வழங்கிய தீர்வு தான் என்ன? குறைந்தது இத் திட்டத்தை நிறுத்துவேன் என்ற போலியான வாய் மூல வாக்குறுதியாவது வழங்கப்பட்டதா? இல்லையே! "Environmental Impact Assessment (EIA)" அறிக்கையை தனக்கு வழங்குமாறு பிரதமர் கோரியுள்ளார். இது என்ன தீர்வை வழங்கிவிடப் போகிறது? மீண்டும் இரண்டு வாரகாலத்துக்குள் கூடி ஆராயப்போகிறார்களாம். அத் திட்டம் பற்றி இப்போது தான் ஆராயப் போகிறார்கள். அப்படியால், இத் திட்டத்தின் பாதகம் பற்றி இத்தனை நாளும், எமது முஸ்லிம் தலைவர்கள் அரச தலைமைகளிடம் விளக்காமல் தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்களா? பட்ஜட்டை வைத்து, பேரம் பேசி சாதிக்க வேண்டிய நேரத்தில், அது பற்றி ஆராய்வோம் என்ற பிரதமரின் வாக்குறுதியை பெரிய சாதனையாக கூறுவதானது, எமது அரசியல் வாதிகளின் இயலாமையை வெளிப்படுத்துகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பானது இவ் வரவு செலவு திட்டத்தை வைத்தை இலங்கை அரசை ஜெனீவா தீர்மானத்தையே ஏற்க செய்துவிட்டது. நாம் எங்குள்ளோம்?
குறித்த பேச்சு வார்த்தையினூடாக பட்ஜட்டை தோற்கடிக்க வேண்டுமென்ற கோரிக்கை மழுங்கடிக்கப்பட்டுள்ளது மேலுள்ள விடயங்களை வாசிக்கும் போதே தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். இதுவே மக்களின் கண்களை கட்டி திசை திருப்பும் அரசியல் மாயாஜால கண் கட்டி வித்தையாகும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
பிரதமர் சந்திப்பினூடாக புத்தள மக்களின் போராட்டம் திசைமாற்றப்பட்டதா...? பிரதமர் சந்திப்பினூடாக புத்தள மக்களின் போராட்டம் திசைமாற்றப்பட்டதா...? Reviewed by Madawala News on April 07, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.