தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

" தாக்குதல் பற்றிய  தகவல்களை  அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். ஜனாதிபதி-பிரதமருக்கிடையிலான  அரசியல் இழுபறிகள் நாட்டின் பாதுகாப்பை பாதிப்பதனை அனுமதிக்க முடியாது"

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  தெரிவிப்பு.
-ஊடகப்பிரிவு-

“ஈஸ்டர் தின  குண்டுத்தாக்குதல்களை   தடுத்து நிறுத்துவதற்கான போதிய புலனாய்வு தகவல்களும், கால அவகாசமும் அரசாங்கத்திற்கு இருந்திருக்கின்றது. அதைச்செய்ய தவறியமையானது   அரசாங்கத்தின் படுமோசமான பொறுப்பற்ற செயலாகும். இதன் விளைவு நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்து, மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காயத்திற்குள்ளாக்கிய சோக வரலாற்றை சுமந்து, முழு இலங்கை தேசமும் கண்ணீர்வடிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறான அழிவுகளை தவிர்த்திருக்கக் கூடிய முன்னைய சில சந்தர்ப்பங்களிலும் இவ்வாறே அவை  அலட்சியப்படுத்தப்
பட்டிருக்கிறது. ‘நாட்டு மக்களின் பாதுகாப்பு’ என்ற உச்சக்கடமையை அலட்சியம் செய்யும் அரசாங்கங்களின் இந்த போக்கு வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.   ஜனாதிபதியும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தேசிய பாதுகாப்பு எனும் கூட்டுப்பொறுப்பிலிருந்து நழுவமுடியாது. அத்தோடு, நாட்டில் ஏற்பட்டிருக்கும் துரதிஸ்டவசமான இந்த நிலமைகளை இன வாத சக்திகள் பயன்படுத்தி கொள்ளாதிருப்பதனையும் உறுதி செய்ய வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.


கடந்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இன்று (24.4.2019) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NFGGயின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“ ஈஸ்டர் ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மீதும் தலைநகரின் பிரதான ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 350 பேரளவில் கொல்லப்பட்டும் 500ற்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தும் இருக்கிறார்கள். சில
தேவாலயங்கள் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன. மிகக்கொடூரமான இந்தத்தாக்குதல்களின் போது கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயப்பட்டவர்களில் குழந்தைகள்,சிறுவர்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,வெளிநாட்டவர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.

 தெற்காசியாவில் நடைபெற்ற படு மோசமான தொடர் குண்டுத்தாக்குதல் எனச்சொல்லப்படும் இத்தாக்குதலானது, இலங்கையினை மாத்திரமன்றி  முழு சர்வதேசத்தையும் உலுக்குகின்ற கோரமான தாக்குதலாகவும் மாறியுள்ளது. 


தாக்குதலைத்  தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் இன்னும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இத்தாக்குதல் தொடர்பான நம்பகமான   தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்ததாக தற்போது உறுதியாக தெரிகிறது .   அரசாங்க அமைச்சர்களே இதனை பகிரங்கமாக  ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தாக்குதலை  தடுத்து நிறுத்துவதற்கான போதிய புலனாய்வு தகவல்களும் கால அவகாசமும் அரசாங்கத்திற்கு இருந்திருக்கின்றன. குறைந்த பட்சம் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பொறுப்பானவர்களிடமாவது இம்முன்னெச்சரிக்கை தகவல்கள் சொல்லப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்க  வேண்டும். அதைச்செய்ய தவறியமையானது   அரசாங்கத்தின் படுமோசமான பொறுப்பற்ற செயலாகும். இதன் விளைவு நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களை இழந்து, மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காயத்திற்குள்ளாக்கிய சோக வரலாற்றை சுமந்து, முழு இலங்கை தேசமும் கண்ணீர்வடிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.


அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. தற்போது இந்த பாரிய இழப்புக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கே இருக்கிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் நீடிக்கும் அரசியல் கயிறிழுப்புகளே நாட்டு மக்களின் உயிர்களை பலி கொடுக்க காரணமாக அமைந்துவிட்டதோ என  சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
 ஜனாதிபதி தரப்பும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதன் மூலம் தேசிய பாதுகாப்பு எனும் கூட்டுப்பொறுப்பிலிருந்து நழுவமுடியாது.

நாட்டை அழிவிற்கு இட்டுச்செல்லும் தீவிரவாதிகளின் திட்டங்கள் பற்றிய புலனாய்வுத் துறை தகவல்களையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் தகவல்களையும் முன்னெச்சரிக்கை வேண்டுகோள்களையும்  அரசாங்கம்  பொறுப்பற்ற முறையில் இவ்வாறு உதாசீனம் செய்து செயற்பட்டமை இது முதற் தடவையல்ல. 

2014 ஆம் ஆண்டு  இனவாதிகளால் அளுத்கமை தாக்கப்படுவதற்கு முன்னரும்,  2018 ஆம் ஆண்டு கண்டி- திகன பிரதேசம் தாக்கப்படுவதற்கு முன்னரும் முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு  தாக்குதலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை  பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர். இருந்த  போதிலும்  பொறுப்பிலிருந்த அரசாங்கங்கள் மிகவும் அலட்சியமாகவே நடந்து கொண்டன. 


இவ்வாறே இம்முறையும் பாரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தத் தக்க  தாக்குதல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படுவதான  புலனாய்வுத் தகவல்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும் அரசாங்கம் காத்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்டுள்ளது. இது மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்துள்ளது. 

அத்துடன்  இந்த  சூழ்நிலையைப் பயன்படுத்தி பல்வேறு குழுக்களும் மக்களிடையே மேலும் இனவாத, மதவாத பிரிவினைகளை ஏற்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடவும் வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் சிவில் தலைமைகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது. 

குறுகிய அரசியல் நோக்கு கொண்ட சக்திகளின் சதிவலையில் சிக்கி கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதும் அனைத்து மக்களினதும் கடமையாகும். 

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிலேட்சத்தனமான பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாம் ஒரு தேசத்தின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் தேவையான சகல உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு தீவிரவாத,  பயங்கரவாத கருத்துக்கள் செயற்பாடுகள் அனைத்தையும் இந்நாட்டிலிருந்து துடைத்தெறிந்து நாம் வென்றெடுத்த  சமாதானத்தையும் பாதுகாப்பான சூழலையும் நிரந்தரமான ஒன்றாக நிலை நிறுத்துவதற்காக இன, மத, மொழி பேதம் கடந்து நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்றஅடிப்படையில் ஒன்றிணைந்து உழைப்போம்.
தாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தாக்குதல் பற்றிய  தகவல்களை  அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். Reviewed by Madawala News on April 25, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.