வாழைச்சேனையில் தெளஹீத் பள்ளிவாயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் விவகாரம்.


வாழைச்சேனையில் தவ்ஹீத் ஜமாத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றை
கடந்த 15 /03/ 2019 ஆம் தேதி வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் சில உறுப்பினர்களால்  ஒழுங்கு செய்ய பட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பொது மக்களுக்கும் வாழைச்சேனையில் உள்ள எட்டு பள்ளிவாயில்களிலும்  ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அத்தோடு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையிலும் இவ்வார்ப்பாட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் இவ்வார்ப்பாட்ட அழைப்பு பிரஸ்தாபிக்கப்பட்டது .


ஆயினும் இவ்விடயத்தில் வாழைச்சேனை புத்திஜீவிகள் ,சமூக ஆர்வலர்கள், இளைஞர் அமைப்புக்கள், இத்தகையதொரு ஆர்ப்பாட்டம் இன்றைய சூழ்நிலையில் தேவைதானா? என தமது கவலையை வெளிப்படுத்தியதுடன் இவ்வார்ப்பாட்டத்தின் பாரதூர  விளைவுகள் குறித்து தமது அக்கறைகளை பொதுத் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தியிருந்தனர் .பலர் நிர்வாகிகளோடு தொடர்பு கொண்டு இதன் தீய விளைவை விளக்கினர்.


 ஆயினும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என முனைப்பு காட்டிய தீய சக்திகளுக்கு பலியான வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகம் ஆர்ப்பாட்டம் செய்வது என்பதில் உறுதியாக இருந்தது. அதற்கான எல்லா வகையான ஏற்பாடுகளையும் செய்திருந்தது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாகையால் ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்களது அமோக ஆதரவு கிடைக்கும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.

 ஆயினும் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் தெளிவாக இருந்தனர். ஜும்மா தொழுகைக்கு வருகை தந்து கலைந்த மக்களை தமது ஆர்ப்பாட்டத்திற்கான ஆதரவாளர்களாக நினைத்து ஏற்பாட்டாளர்கள் மதி மயங்கினர். ஆயினும் மக்கள் பெருந்திரளானோர் ஜூம்மா கலைந்த கையோடு தங்களது வீடுகளுக்குச் சென்றனர் .வேறு சிலர் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்தனர். குறித்த சிறு தொகையினர் மட்டுமே மகஜரை கையளிக்க பிரதேச சபை செல்ல ஏனையோர் எதிலும் ஈடுபடாமல் புதினம் பார்த்தனர். கோசம் இடுவதற்குக் கூட ஆக்கள் இருக்கவில்லை. கொஞ்சம் சிறுவர்களும் அழைத்து வரப்படவில்லை எனின் பதாதைகள் தூக்கவும் ஆள் இல்லாமல் போயிருக்கும்.


 இந்த வகையில் வாழைச்சேனை பள்ளிவாயலின் ஆர்ப்பாட்ட அழைப்பை அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பல பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .அவர்களது பள்ளிவாயல்களில் கடமையாற்றும் பல இமாம்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தமக்கு தேவையில்லாத  வீண் வம்பு எதற்கு என அவர்கள் நினைத்து பின்வாங்கி இருக்கக்கூடும். அல்லது இன்றைய இலங்கை முஸ்லிம்களின் சூழ்நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் பொருத்தமற்றவை என அவர்கள் சமூக அக்கறையில் சிந்தித்து இருக்கக்கூடும்.

 எவ்வாறு இருப்பினும் இவ்வார்ப்பாட்ட அழைப்பை நிராகரித்த ஏனைய பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் பள்ளிகளில் கடமையாற்றும் இமாம்களுக்கும் பிரதேசத்திலுள்ள சமூக அக்கறை கொண்ட உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் இளைஞர் அமைப்புகளுக்கும்  பிரதேசத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் ஏன் தேசிய மட்டத்தில் செயற்படும் சமூகநல அமைப்புகள் ஒட்டுமொத்த வாழைச்சேனை சமூகத்திற்கும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தமைக்கு தமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

 இவ்வார்ப்பாட்ட அழைப்பானது பிரதேச மக்களின் எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டது என்பதை விட ஒரு சில தனிநபர்களின், சில தீவிர இயக்க செயற்பாட்டாளர்களின்  தேவைக்கு நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே வாழைச்சேனை மக்கள் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை முஸ்லிம்கள் இக்கட்டானதொரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் தம்மைத் தாமே அடையாளப்படுத்தி அந்நிய சக்திகள் முன்னால் கேவலப் படுத்திக் கொள்ளும் அவலத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது சமூக அக்கறையோடு செயற்பட்ட அனைவரும் நன்றிக்கு உரியவர்கள் ஆகும்.

 இதேவேளை தமது ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேச சபை தவிசாளரிடம் தனது மகஜரை கையளிக்க முன்வந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாயல் தலைவரும் ஏனையோரும் வெளிப்படுத்திய கருத்துக்கள் மிகவும் ஆபத்தானவை, தங்களது வெறுப்பு உணர்வுகளையும் கோபதாபங்களையும் வெளிப்படுத்துவதற்காக ,சமூக அக்கறையற்று சொல்லப்பட்ட கருத்துக்களாவே அவை பார்க்கப்படுகின்றன. இவற்றினூடாக அரச நிறுவனங்களையும் அதிகாரிகளையும்
இலங்கை அரசின் பாதுகாப்பு பிரிவையும் இஸ்லாமிய அமைப்புகளின் செயற்பாடுகளையும்சந்தேகத்துக்கு உட்படுத்தி கேள்விக்குறியாக்கி இருப்பது, அவர்கள் மீது அபாண்டங்களை சுமத்தியிருப்பது பள்ளிவாயல் நிர்வாகத்தின் அறிவீனத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் நமது கவலையை வெளிப்படுத்தியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


நடந்தது போக இனிவரும் காலங்களிலாவது
இவ்வாறு பொறுப்பற்றமுறையில் நடந்து கொள்ளாது, இனியும் கோட், பொலிஸ் என்று அலையாது, குரோதப் புத்தி கொண்டோரை புறந்தள்ளி இருதரப்பினரும் விட்டுக் கொடுப்புடனும் சமூக அக்கரையுடனும் செயற்படவேண்டும் என சமூக அக்கரையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
- அஹ்மத் ஆகில் -
வாழைச்சேனையில் தெளஹீத் பள்ளிவாயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் விவகாரம். வாழைச்சேனையில் தெளஹீத்  பள்ளிவாயலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் விவகாரம். Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5