மின்சாரம் என்ன விலை??


வருடந்தோறும் நல்ல சூரிய ஒளி கிடைக்கப் பெறும் ஒரு நாட்டில் அதை பயன்படுத்தி மின்சாரத்தை தயார்
செய்வதை விட்டுவிட்டு அதே சூரியனை நொந்து கொள்கிறோம்,வெப்பம் அதிகம் என்று..

இந்த மின்தடை இன்று நேற்று வந்ததா? சந்திரிகா அம்மையார் ஆட்சி காலத்திலும் மழையில்லை;மின்சாரம் துண்டிக்கப்பட்டதுதானே.இன்னுமா பாடம் படிக்கவில்லை?
உலகில் பல நாடுகள் கடைசி சொட்டு நீரை சுவைப்பதாக தகவல்களையும் எதிர்வுகூறல்களையும் செவிமடுத்த பின்பும் வானம் பார்த்துக் கொண்டிருக்கிறது தேசம்.

பெய்யும் மழை விவசாயத்திற்கே போதவில்லை.வருடந் தோறும் விவசாயிகளுக்கே நஷ்ட ஈடு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம்.இதில் மின்சாரத்திற்கும் அதே மழைதான் வேண்டுமெனும் வறட்டுப் பிடிவாதம்.

அப்படியே விளைந்தாலும் விளைச்சல் போதாதென்று அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் தான் நகர்கிறது நாட்கள்.

மதியம் 11 மணி முதல் பி.ப 3 மணி வரை சூரியனின் கதிர்த்தாக்கம் உச்சத்திலிருப்பதால் வெளியில் செல்வதை தவிர்த்து உட்புறங்களில் இருக்குமாறும் வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் சூழலியலாளர்களும் சுகாதார பிரிவினரும் அறிவுறுத்திக் கொண்டிருக்க  சில பகுதிகளில் 11.30 ற்கு துண்டிக்கப்படும் மின்சாரம்  பி.ப 2.45 ற்கு பின்னரே இணைக்கப்படுகிறது.வெளியில் போனாலும் சுகாதார சீர்கேடு உள்ளேயே இருந்தாலும் மூச்சு முட்டுகிறது.சாவாதற்கு வழி சொல்லும் அரசாங்கம்.

இதுவே பாடசாலைகளின் நிலவரம் நினைக்கும் போது மனம் பதறுகிறது.ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஐந்து மாணவ மாணவியர் தலைவலி ,உடல் எரிவு என தினமும் மருந்தெடுக்க வருகிறார்கள்.சொறிச்சலென்றும் தோலில் விஷப்பரு என்றும் தோல் வைத்திய க்ளினிக்குகளில் மக்கள் அலைமோதுகிறார்கள்.மருந்துக்கென அரசாங்கம் கணிசமான தொகையை ஒதுக்கியே ஆக வேண்டியிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலும் சரி வேறு சில நாடுகளிலும் சரி எப்போதாவதுதான் அடைமழை பெய்வதுண்டு.வருடம் தோறும் அனல் தெறித்தாலும் மின்சாரத்திற்கு தட்டுப்பாடில்லை.குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கிறது.தன்னிடமுள்ள வளத்தைக் கொண்டு மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.power cut இல்லை power drop கூட அங்கில்லை. 

இலங்கை போன்ற சூரியன் உச்சம் கொடுக்கும் அயன மண்டல நாட்டில் துணி காய வைக்கவும் கருவாடு காய வைக்கவும் தான் சூரிய ஒளியை பயன்படுத்துகிறோம்.

பல மில்லியன் செலவிட்டு கட்டும் வீட்டுக்கோ அரச நிறுவனங்களுக்கோ சில லட்சம் செலவில் சூரிய படல் இணைப்பது பற்றி சிந்திப்பதில்லை.

திருகோணமலை கிண்ணியா வலய பாடசாலைகளில் நேற்றும் இன்றும் நடக்க வேண்டிய முதலாம் தவணை பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன-மின் துண்டிக்கப்படுவதால் Exam papers print பண்ண முடியவில்லையாம்.
இப்படி எத்தனை அரச பணிகள் ஸ்தம்பிதம் அடைந்ததோ தெரியவில்லை.

மின்னுற்பத்திக்கு நீர் போதவில்லை என்று தாய்லாந்து பொறியியலாளர்களை கொண்டுவந்து பல இலட்சம் செலவில் நீரேந்து பகுதிகளில் செயற்கை மழை வேறு பெய்விக்கப்படுகிறதாம்.

இப்படி இத்தனை நஷ்டங்களையும்  செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கமே சலுகை விலையில் வீடுகளுக்கு சூரிய படலை விநியோகித்தாலும் நஷ்டமில்லை.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் வீட்டுப் பாவனைக்கு போக எஞ்சுவதை CEB யே கொள்வனவு செய்தால் சூரிய படலுக்காக அரசாங்கம் செலவிட்ட தொகையையும் பெற்றுக் கொள்ள முடியுமென நினைக்கிறேன்.

சரி அப்படியே நஷ்டமே என்றாலும் பரவாயில்லை. இவ்வளவு காலம் அரசாங்கமும் இலங்கை மின்சார சபையும் இலாபத்திலா இயங்கின??

வீடுகளில் இரண்டு மின்குமிழ்களை அணைத்து மின்சாரம் சேமிப்பதென்னவோ நல்ல யோசனைதான்.ஆனால் மக்கள் வரிப்பணத்தில் அமைச்சர் வீடுகளின் சமையலறைகளிலும் களஞ்சிய அறைகளிலும் இடைவிடாது இயங்கும் குளிரூட்டிகளையும் .அவர்களின் அரண்மனை கழிவறைகளில் இயங்கும் exhaused fan களையும் ,ஆள் பார்த்து மிளகாய் பொடி தூவுவதற்காக எரிய வைக்கப்பட்ட பாராளுமன்ற மின்குமிழ்களையும் அணைத்து விட்டால் இன்னும் அதிகமாக மின்சாரத்தை சேமிக்கலாம் தானே??

அது சரி ..
இரண்டு மாதம் மழையில்லை என்றால் வறண்டு போகும் அதே குளங்களும் நீர்த்தேக்கங்களும் தான் நான்கு நாள் மழை பெய்தால் அணை உடையும் அளவு நிரம்பி வழிகிறது.
மகாசேனனும் பராக்கிரமபாகுவும் குளம் கட்டினார்களா குழி தோண்டி வைத்தார்களா?..

நிர்வாகம் சரியில்லையென்றால் மின் துண்டிக்கப்படாமலேயே  இருந்தாலும் இருண்டு தான் விடுகிறது வாழ்க்கை.

Fauzuna Binth Izzadeen
2019/03/29

மின்சாரம் என்ன விலை?? மின்சாரம் என்ன விலை?? Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.