மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியதுஇலங்கையின் மிகப்பெரிய முதலீட்டு வலயமாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிங்கிரிய முதலீட்டுவலயத்தில் முதலீடு செய்ய இதுவரை 30 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இம்மாத இறுதியில் பாரிய கைத்தொழிற் பேட்டையொன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இரண்டு மாத இறுதியில் திருகோணமலையில் வர்த்தக வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.


இலங்கையை 2025ஆம் ஆண்டாகும்போது முழுமையாக முன்னேற்றுவோம். எமது நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை பங்களாதேஷூக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது வியட்னாமுக்கோ இனிமேல் வழங்கப்போவதில்லையென்றும் பிரதமர்


இந்த முதலீட்டு வலயம் ஆயிரத்து 200 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில்ஸ்தாபிக்கப்படும். இதில் ஆடை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முதலீட்டாளர்ஒருவர் பத்துக் கோடி டொலரை முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக பிரதமர்குறிப்பிட்டார்.


நேற்று பாராளுமன்றத்தில் இடமபெற்ற தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.


இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் தடை விதிக்கப்பட்டதால் அதன் பலன் பங்களாதேஷூக்கே சென்றது. மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் இதற்கு காரணம், தற்போதைய சூழலில் பங்குச் சந்தை படிப்படியாக பலமடைந்து வருகிறது.


பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கமும் இருவேறு விடயங்களாகும். கடன்சுமை அதிகரித்தபோது பங்குச்சந்தை அதிகரித்திருந்தது. 


தற்பொழுது நாட்டின் பங்குச் சந்தை படிப்படியாகப் பலமடைந்து வருகிறது. மஹிந்தவின் ஆட்சிக்காலம்தான் எமது நாட்டின் சொர்க்கபுரியாகவிருந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கூறியிருந்தார். ஆனால் 2004ஆம் ஆண்டு தைத்த ஆடைகள் மற்றும் கைத்தறி மூலம் 2800 மில்லியன் டொலர்கள் வருமானம் நாட்டுக்குக் கிடைத்தது. இது 2015இல் 4600 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்தது. 


ஆனால் வியட்னாம் 2004ல் 4900 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதுடன் 2015ல் 27,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அதேபோன்று பங்களாதேஷ் 2004ல் 5700 மில்லியன் டொலரை வருமானமாகப் பெற்றதோடு, 2105ல் இதனை 25,500 மில்லியன் டொலர்களாக அதிகரித்துக் கொண்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது மஹிந்த ஆட்சியால் பங்களாதேஷ்தான் சொர்க்க புரியாக மாறியது Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5