மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்?

சயீட் முஹம்மட் முபாரக் – சூழலியலாளர்
“உலக வங்கியால் நிராகரிக்கப்பட்ட
நிறுவனத்திடம் சம்பிக்கவினால் இத்திட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது”

1996 ஆம் ஆண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டு பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட Criteria வில் எந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி குறிப்பிட்டுள்ள 24 கட்டளை விதிகளில் 16 ஐ சம்பிக்க ரணவனக்கவின் அமைச்சு மீறியுள்ளது. சுண்ணாம்புக் கற்பாறை, நிலக்கீழ் நீர், வளி அதிகம் வீசும் இடங்களில் குப்பை போடக்கூடாது என்கின்ற விடயம் மேற்படி உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகளை முற்றாக மீறும் வகையில் அவ்வமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுதவிர இத்திட்டத்தினால் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. அருவக்காடுவை அண்மித்த வகையில் உள்ள வில்பத்து வனாந்திரத்திற்கு குப்பையின் துர்நாற்றம் வீசுகின்ற போது அங்குள்ள யானைகள் மோப்பம் பிடித்து, மக்கள் குடியிருப்புக்களையும் நாசப்படுத்திக் கொண்டு குப்பை மேடுகளை கிளற வரும். அண்மையில் பொலன்னறுவை மற்றும் கல்முனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் குப்பை மேடுகளில் சஞ்சரித்து அவற்றை கிளறிக் கொண்டிருக்கும் காட்சிகளை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. யானை மனிதப் பேராட்டத்திற்கு அப்பால் இதுவும் மிகப்பெரும் தலையிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

புத்தளம் பிரதேசம் உலர் வலயமாக காணப்படுகிறது. தற்போது 32 – 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப் படுகின்றது. குப்பை மேடுகளில் மீதேன் வாயு உருவாக்கத்தால் வெடிப்பு ஏற்படு வதை நாம் அறிவோம். அண்மையில் மீதொட்டமுள்ளையில் இந்நிகழ்வு அரங்கேறி 45 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கண்டி குகாகொட என்னுமிடத்திலும் இவ்வெடிப்பு ஏற்பட்டது. ஓரிரு தினங்களுக்கு முன்பும் யன்தம் பலாவ என்ற இடத்தில் இவ்வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அருவக்காட்டிவில் குப்பை மேட்டை உருவாக்கும் பட்சத்தில் அங்கு மீதேன் வாயுவின் உருவாக்கமும் அதிகமாக இருப்பதோடு, வெடிப்பும் பலமாக இருக்கும். இப்பகுதியில் காற்றும் அதிகமாக வீசுவதால் மிகப் பாரிய காட்டுத் தீ பரவலுக்கு அடிப்படையாக அமைந்து விடும்.

மேலும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளில் குவியும் குப்பைகளை கொண்டு வந்து இன்னுமொரு குடியிருப்புப் பகுதியில் போடுவதால் அது எல்லா வற்றுக்கும் தீர்வாக அமைந்துவிடாது. குப்பைகளை பிரித்தெடுத்து மீள்சுழற்சி செய்யும் பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. அதற்கான கிரயமும் குறைவு. உலகில் இதற்கு உயர்வான இயந்திர உபகரணங்களும் காணப்படுகின்றன. இப்படி மீள்சுழற்சி செய்யும் போது அதனை வரு மான வழிமுறையாகவும் பயன்படுத்த முடியும். நாடும் முன்னேற்றமடையும். ஆனால் தற்போதைய குப்பை கொட்டும் திட்டதில் எவ்வித வருமானமும் இல்லை. இதற்கு இன்னும் எமது நிதிகளை செலவு செய்துகொண்டிருக்க வேண்டியேற்படும். எவ்வித வருமான வழிகளும் இல்லாமல் சுமார் 10 வருட காலங்களுக்கு இந்தத் திட்டம் வரையப்பட்டிருக்கிறது. குப்பை களை எரித்தாலும் கூட அதன் மூலம் சிறு அளவு மின்சாரத்தையேனும் பெற முடி யும். ஆனால் முழுக்க முழுக்க பாதிப் புக்களை அதிகம் சுமந்த இந்தத் திட்டம் நாட்டை இன்னும் பின்னடைவுக்கு இட் டுச் செல்லும் எண்பது திண்ணம்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் குப்பை களை கொண்டு போய் அருவக்காட்டில் கொட்டுமாறு நகர அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டிருந்தது. மூன்று மாத காலங் களுக்கு இந்தச் செயற்பாடு அவதானிக்கப் பட்டு பின்னர் 2020 இல் கொழும்பு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதாக தற்போது தெரிவித்து வருகின்றனர்.

தற்போது புத்தளம் உள்ளூராட்சி சபை களுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளைக் காண்பித்து இவற்றையும் நாங்கள் எடுக்கின்றோம் என்பதாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நடவடிக்கை கடந்த மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டா லும் இதுவரை புத்தளம் பகுதி குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்படவில்லை.

இது தவிர இந்தத் திட்டம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் உலக வங்கியால் கருப்புப் பட்டியல் இடப்பட்டுள்ள சீன ஹாபர் நிறுவனத்திடமே கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் எல்லா திட்டங்களும் தோல்வியில் முடிவடைகிறது என்ற காரணத்தால் உலக வங்கி இந்நிறு வனத்திற்கு எவ்விதத் திட்டங்களையும் செய்வதற்கு நிதி வழங்குவதில்லை. இப்படிப்பட்ட நிறுவனத்தை இலங்கைக்கு கொண்டு வந்து அமைச்சர் எதனைச் சாதிக்கப் போகின்றார். உலக வங்கி தனது 115 மில்லியன் டொலர்களையும் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியைப் பெறுவதாயின் அதற்கு அதிக காலம் செல்லும். எம்மால் அவ்வளவு காலம் காத்துக்கொண்டிருக்க முடியாது, அதனால் சீன நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தை ஒப்படைப்பதாக மெகா பொலிஸ் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்தத் திட்டத்தில் உள்ள உப ஒப்பந்த நடவடிக்கைகள் மற்றும் இதர வழிமுறைகளால் அரசியல்வாதிகளுக்கு கமிஷன்கள் கிடைக்கும். இப்படியான நோக்கங்களுக்காகவே இந்தத் திட்டம் அவசர அவசரமாக  அரங்கேற்றப்படுகின்றது.

குப்பைக் கூலங்களை முறையாக நிரப்புவதற்கான உலக வங்கியின் வழிகாட்டல்கள் 1996 (2004 இல் மேம்படுத்தப்பட்டது)

முறையான நிரப்புதல்களுக்கு (Sanitary Landfill) உள்ளாகும் திண்மக் கழிவுகள் சூழலின் முன்னுரிமை அடிப்படையில் A தரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தரத்தின் அடிப்படையில் திட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பின்வரும் செயற்பாடுகள் அவசியமாகின்றன.

1.பின்வரும் விடயங்களில் திருப்தி காணக் கூடிய வகையில் அறிக்கை பெறப்பட்டிருத்தல்.

அ) போக்குவரத்துஇ சிக்கனம், முத லீடுகளைக் கருத்தில் கொண்டு 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும்

ஆ) நிலக்கீழ் நீரைப் பாதுகாக்கும் வகையில் கூலம் நிரப்பும் குழியிலிருந்து நிலக்கீழ் நீர் மட்டம் குறைந்த பட்சம்  1.5 மீற்றராவது இருக்க வேண்டும்.

இ) தற்போது இருக்கின்ற நிலக்கீழ் நீர் பெறும் இடத்தின் எந்த எல்லையிலும் குப்பை நிரப்பும் பகுதி இருக்கக் கூடாது.

ஈ) எந்த பொதுக் குடிநீர் கிணறுகளோ, நீர்ப்பாசனத் திட்டங்களோ, கால்நடைகளுக்கான கிணறுகளோ குப்பைக் குழியின் 500 மீட்டர் நிலக்கீழ் தூரத்துக்கப் பால் இருக்க வேண்டும்.

உ) இம்முக்கியமான பல்லுயிர்த் தன்மையோ மீளுயிர்க்கும் தன்மையோ உள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைச் சூழ அமையக் கூடாது.

ஊ) சூழலில் அரிதானதாகக் கண்டறியப்பட்ட, அருகி வரும் இனங்களின் பெருக்கத்துக்கான இடங்கள் எதுவும் அருகில் இருக்கக் கூடாது.

எ) காற்று வேகமாகப் பரவக் கூடிய வெட்ட வெளிகள் அதிகமாக உள்ள பகுதியாக இருக்கக் கூடாது.

ஏ) சுண்ணாம்புக் கற்களோ, காபனைட்டுகளோ அவை கழிவு நீரைத் தடை செய்து காற்று வெளியேற்றத்தையும் தடுப்பதாய் இருக்கக் கூடாது.

ஐ) 250 மீட்டர் சுற்று வட்டாரத்தில் எந்தக் குடியிருப்பு வளர்ச்சிகளும் மேற் கொள்ளப்படக் கூடாது.

ஒ) குப்பை நிரப்பும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எந்தக் குடியிருப்புக்களும் தெரியக் கூடாது

ஓ) பொதுமக்களின் அங்கீகாரம் பெற்ற சமூக-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த (நினைவிடங்கள், மதத்தலங்கள், பாடசா லைகள்) இடங்களையும் கலாச்சார முக்கி யத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பாதைகளையும் விட்டு 01 கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும்.

2. குப்பை நிரப்புவதால் வரும் தாக்கம், அதனைக் குறைப்பதற்கான தீர்வுகள் என்பவற்றைக் குறிப்பிட்டு தெரிவு செய் யப்பட்ட இடம் தொடர்பான சூழல் தாக்க அறிக்கை பெறப்பட்டிருக்க வேண்டும்.

3. பொதுமக்கள் அறிவூட்டப்பட்டு அவர்களது கருத்துக்கள் பெறப்பட்டிருக்க வேண்டும். இதற்கென பகிரங்க மன்றமொன்றில் மக்களுக்கு கருத்துச் சொல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

4. பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

5. சூழல் வடிவமைப்பு, இதன் நிதி வகையிலான தாக்கங்கள் தெளிவுபடுத் தப்பட வேண்டும்.

சூழல் தாக்க மதிப்பீட்டில் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன

அருவக்காட்டில் குப்பை கொட்டுவது தொடர்பான சூழல் தாக்க மதிப்பீட்ட றிக்கை முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. பின்னர் அது நிராகரிக்கப் பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  வெளியிடப்பட் டது. இறுதியான சூழல் தாக்க மதிப்பீடு எனக் குறிப்பிடப் படாமல் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைபு என்பதாக அது குறிப்பிடப்பட்டது.

அதாவது சிற்சில விடயங்கள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்பதாகக் கூறப்பட்டு அவை வரைபுக்குள் உட்புகுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டதே ஒழிய அது சரியான இறுதி மதிப்பீடு எனக் குறிப் பிடப்படவில்லை. வி.எம்.ஏ கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் தனியார் நிறுவனமே இச்சூழல் தாக்க மதிப்பீட்டை செய்துள்ளது. இதனை எழுதுவதற்கு அரசாங்கத்தால் சுமார் 4 அல்லது 6 லட்சம் ரூபா பணமும் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடானது வேறு வேறு சூழல் தாக்க மதிப்பீடுகளிலிருந்து பிரதிபண்ணப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.

சூழல் தாக்க மதிப்பீட்டு நுலை தயாரித்ததன் பிறகு அதனை 30 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட வேண்டும். பிரதேச செயலாளர் அலுவலகம், மாவட்ட அலுவலகங்களில் இது வைக்கப்பட வேண்டும். இது அவசர அவசரமாக செய்யப்பட்ட மதிப்பீடு என்றபடியால் காலம் போதாமல் மத வழிபாட்டுத் தளங்களில் வைக்கப்பட்டது. அதற்கு மக்களது கருத்துக்களை பதிய சி.ஆர் புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது.

நாம் அதில் எவ்வளவோ கருத்துக்களை பதவிட்டோம். அது குறித்து எவ்வித பதில்களும் எமக்கு வழங்கப்படவில்லை. கிராம சேவகர் அலுவலகத்தில் ஒரு பிரதி வைக்கப்பட்டு கருத்துப் பதிவுக்கான புத்த கமும் வைக்கப்பட்டது. அங்கும் எமது கருத்துக்களை பதிவுசெய்து கேள்விகளைத் தொடுத்திருந்தோம். அதற்கும் எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை.

சம்பிக்க ரணவக்க இதனை பலவந்தமாகச் செயற்படுத்தப் பார்க்கின்றார். ஏற்கனவே அனல் மின்சார நிலையம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவினது காலத்தில் தட்டப்பட்டதன் பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனது காலப்பகுதியில் அதனை அமுல்படுத்தினார். அதே அடிப்படையில் சம்பிக்கவும் இந்தத் திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மறுப்புக்களை கவனத்திற்கொள்ளாமல் எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் அதனை செய்தே தீருவேன் என்று தன்னை ஒரு வீரனாகக் காட்டிக் கொள்ளப் பார்க்கின்றார். தான் பெரியவன் எனக் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றார். அண்மையில் அவர் இராணுவத்தை அமர்த்தியேனும் இந்தத் திட்டத்தை அமுல் படுத்தப் போவதாகக் கூறியிருக்கின்றார்.

சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொண்ட போது அதில் சரியான தகவல்கள் எழுதப்படவில்லை. சூழல் தாக்க மதிப்பீட்டு நூலை தயாரிக்கின்ற போது ஒரு திட்டம் எந்த இடத்தில் உருவாக்கப்படுகின்றதோ அங்குள்ள மக்களிடம் அது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தில் கலந்துரையாடல் விடயம் என்பது பூசிமெழுகப்பட்டுள்ளது.

அருவக்காட்டை அண்டிய சேரக்குளி கிராமம் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமாகும். சூழல் தாக்க மதிப்பீட்டை எழுதியவர்கள் முதலாவது இந்தப் பகுதி மக்களை சந்திக்க வேண்டும். அவர்களுடைய கருத்தறிய வேண்டும். ஊர்மக்களை சந்தித்திருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாலும்  8 பேர்களை மாத்திரமே சந்தித் திருக்கிறார்கள். இவர்களுள் ஒருவர் பௌத்த துறவி, மற்றையவர் ஊர்வாசி, ஏனையவர்கள் அரசாங்க ஊழியர்கள். அந்த ஊர்வாசி தனக்கு இது தொடர்பில் போதிய அறிவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொண்டவர்களுக்கு அப்பகுதியின் எல்லைகள் கூட சரியாக தெரியவில்லை. ஏனெனில் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குப்பை கொட்டும் இடத்திற்கு மேற்கு எல்லையாக டச்பே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கற்பிட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதனை எழுதியவர்களுக்கு அப்பகுதி தொடர்பாக ஆழ்ந்த அறிவு காணப்படவில்லை என்  பது புலனாகிறது.

இன்னும் சொல்லப் போனால் வண்ணாத்துவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்கான எல்லையாக கிழக்கு பக்கத்தில் புத்தளம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது பிழையான பதிவு. அடுத்ததாக 1.3 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடையில் ஊர்மனைகள் கிடையாது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பிழையான பதிவு. சேரக்குளி என்னும் கத்தோலிக்க மீன்பிடிக் கிராமம் அருவக்காட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது.

ஒரு நீர் நிலைக்கு 250 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் குப்பை இடும் தளம் காணப்பட வேண்டும் என்று உலக வங்கி தனது ஒழுங்கு விதியில் குறிப்பிட்டுள்ளது. அருவக்காடு குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் புத்தளம் களப்புக்கும் இடையில் 190 மீற்றர் தூரம் மாத்திரமே காணப் படுகின்றது. இன்னும் அவ்வறிக்கையில் குப்பை மேட்டிற்கு யானை வராமல் இருப்பதற்கு மின்சார வேலி அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் வில்பத்து காட்டிலிருந்தே வர வேண்டும். வில்பத்து காட்டிற்கும் அருவக்காட்டிற்கும் இடையிலான தூரம் 5 கிலோமீற்றர்களாகும்.

புத்தளம் பகுதியில் கச்சான் காற்று என்பதாக ஒரு காலப்பகுதியில் காற்று 20 கிலோமீற்றர் வேகத்தில் பலமாக வீசும். இப்படியான காலத்தில் யானைகள் மோப் பம் பிடித்து வரும். ஐந்து விவசாய கிராமங்களை கடந்துகொண்டே யானைகள் குப்பை மேட்டை வந்தடையும். இவ்வாறு வரும் போது எவ்வளவு உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் ஏற்படும் என்பது மட்டிட முடியாமல் போகும். இது தொடர் பில் எவ்வித தகவல்களும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

தொம்பே பகுதியில் சிறந்த முறையில் குப்பை போடப்பட்டு சரிவு நிலம் நிரப்பப்படுவதாக சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொம்பே பகுதி கடினமான நிலப்பிரதேசமாகும். இங்கு 2 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டப்படுகின்றது. ஆனால் அருவக்காட்டில் 64 ஏக்கர் நிலத்தில் பொலிதீன் கொட்டப்பட வேண்டும். உலக வங்கியின் ஒழுங்கு விதியில் முருகைக்கல் அகழும் பகுதியில் குப்பை போடக்கூடாது என்கின்ற விடயம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயங்கள் பற்றி எவ்வித மாற்றுக் கருத்துக்களும் தெரிவிக்கப்படாமல் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீருக்கு கீழாலும் சுண்ணக்கல் படிவு காணப்படுகிறது. அது நொருங்கக் கூடிய பொருளாகும். சுண்ணக்கல் அகழப்பட்ட குழிக்கு கொங்கிரீட் இட்டு பொலிதீன் விரிப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டொன் கழிவு வீதம் ஒரு வருடத்திற்கு கொட்டக்கூடிய கூலத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி அதற்கு காணப்படுகின்றதா என சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கையில் சொல்லப் படவில்லை. அதாவது பாரத்தை தாங்கக் கூடிய சக்தி எந்தளவுக்கு காணப்படுகின்றது என்பது அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. 

இன்சீ சீமென்ட் நிறுவனம் சுண்ணக்  கற்பாறையை அகழ்ந்தெடுப்பதற்கு டைனமைட் வெடிபொருளை பயன்படுத்துகிறது. இந்த வெடிபொருளின் அதிர்வால் அருகிலுள்ள சேரக்குளி என்னும் கத்தோலிக்க மீன்பிடிக் கிராமத்திலும் கூட அதிர்வுகள் ஏற்படும்.

அவ்வளவு தூரம் அதிர்வு ஏற்படும் போது பக்கத்திலுள்ள அகழிகளை நிரப்பக் கட்டப்பட்டிருக்கும் கொங்கிரீட் தட்டுக்களும் அதிர்வால் வெடிக்க ஆரம்பிக்கும். இது வெடிக்கும் போது கசிவு நீர் கடலில் கலக்கும் ஆபத்துள்ளது. இதனால் மீன்வளம் பாதிப்படைகிறது. அத்துடன் புத்தளம் முதல் மன்னார் வரையில் நிழத்தடி நீர் (டியுப் வெல்) காணப்படுகின்றது. இதனால் புத்தளம் முதல் மன்னார் வரையான நிலத்தடி நீர் பாதிப்படையும் சாத்தியமும் உள்ளது. இவை குறித்து சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

எனவே இது பரிபூரணமானதொரு சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை அல்ல. சரியான முறையில் இது மேற்கொள்ளப் படவில்லை. சூழல் தாக்க மதிப்பீட்டில் அதிகமான பிழைகள் காணப்படுகின்றன. மக்களை முறையாக சந்திக்காமல் தயாரிக்கப்பட்டுள்ளது. முறையான எல்லைகள் குறிப்பிடப்படவில்லை. என்றவாறு அதிலுள்ள பிழைகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

அருவக்காடு குப்பை விவகாரம்  தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்க கொண்டு செல்ல அவரை சந்திப்பதற்கு 2016ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகின்றோம். எவ்வித பதில்களும் இல்லை. ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியாவது அவரை சந்திக்கலாம் என்றெண்ணி புத்தளத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அவரை சந்திக்க சென்ற போது பொலிஸார் எம்மை தாக்கினார்கள். உள்ளூர் அரசியல்வாதிகள்  குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று செயற்பட்டார்கள்.
மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்? மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்?  Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.