வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழித்தார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


(எஸ்.அஷ்ரப்கான்)
வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழித்தார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்வோர் மீது அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ ) முதலாவது பொதுக் குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய பொதுக் குழு 24.03.2019 அன்று கொழும்பு, புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சகோ. ரிஸான் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களாக,

வில்பத்து தொடர்பான பொய்யான பரப்புரைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
——————————

வில்பத்து வனத்தை அழித்து முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்தும் முஸ்லிம்கள் வில்பத்து பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் பொய்யான செய்திகளை ஊடகங்களும், அரசியல்வாதிகளும், இனவாதிகளும் மீண்டும் பேசியும், பரப்பியும் வருகின்றார்கள். வில்பத்து பிரச்சினையைப் பொருத்த வரையில் வில்பத்து வனப்பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றவோ, அழிக்கவோ இல்லை. என்பதை அது தொடர்பில் சரியாக ஆய்வு செய்யும் எவறும் அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும், வில்பத்து வன பரப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அங்கு வாழும் முஸ்லிம்கள் பூர்வீகமாகவே அங்கு வாழ்பவர்கள்.

நிலைமை இவ்வாறு இருக்கும் போது அரசியல் காரணங்களுக்காக, இனவாதத்தை தூண்டும் விதமாக வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்று பரப்புரை செய்வதை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன், வில்பத்து பகுதியில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளையும் அரசு உடனடியாக விடுவித்துக் கொடுப்பதுடன், அங்கு வாழும் மக்களுக்குரிய வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் இப்பொதுக் குழு அரசை வேண்டிக் கொள்கின்றது.

புத்தளம் மாவட்ட மக்களின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
——————————

நம் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் குப்பைப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கொழும்பின் கழிவுகளை கொட்டுவதற்கான இடமின்மையே இதற்குரிய பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.

குப்பைகளை மீள் சுழற்சி செய்து, அதன் மூலம் எரிபொருள் முதலான பல தேவைகளை வளர்ந்த நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன. மேற்கு நாடுகளில் அதற்குரிய அறிவியல் ரீதியிலான முறைகள் கடைப்பிடிக்கப்படுவதினால் பல நாடுகளில் குப்பைப் பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சினையாகவே பார்க்கப்படுவதில்லை.

ஆனால் நம் நாட்டில் குப்பைகளை பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய முறையில் மீள்சுழற்சி செய்து பயன்படுத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் மலைகளாக கொட்டி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் முறைமையை இலங்கை அரசும் பயன்படுத்தினால் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைத்து விடும்.

கொழும்பு பிரதேச குப்பைகளையும், சில வெளிநாடுகளின் குப்பைகளையும் புத்தளம், அருவக்காடு பகுதியில் கொட்டுவதற்கான திட்டத்தை ஆளும் அரசு அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகளையும் வேகமாக செய்து வருகிறது. அரசின் இந்த முடிவை எதிர்த்து புத்தளம் வாழ் அனைத்து சமுதாய மக்களும் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்திட்டத்தை எதிர்க்கும் பொது மக்களின் கோரிக்கைகள் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட்டு மாற்றுத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். என இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை (CTA) அனைவரும் இணைந்து தோற்கடிக்க வேண்டும்.

இலங்கையில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக 1979ல் ஜே.ஆர் ஜயவர்தன அவர்களினால் 03 வருடத்திற்கு மாத்திரம் என்று தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடை சட்டம் காலம் நீடிப்பு செய்யப்பட்டு சுமார் 40 ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது. தமிழ் டயஸ்போராவின் கோரிக்கைக்கு இணங்கி ஐ.நா மூலம் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமான தற்போது தீவிரவாத தடைச்சட்டம் (PTA) சில மாற்றங்களுடன் தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் (CTA) என்ற பெயரில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நடைமுறையில் காணப்படும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தை விட தற்போது கொண்டுவர முயற்சிக்கும் தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் மிகவும் ஆபத்தானதாகும்.

கடந்த 2018 அக்டோபர் மாதம் இதற்கான அமைச்சரவை அனுமதியும், செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பும் நடைபெற்று முடிந்து விட்டன. பெரும்பான்மை, சிறுபான்மை என அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் விதத்தில் கொண்டுவரப்படும் தீவிரவாத எதிர்ப்பு சட்டமூலம் CTA சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து வருடக் கணக்கில் சிறைவாசம் அனுபவிக்கச் செய்யும் ஆபத்தான நிலையை உண்டாக்கி விடும்.

குறிப்பாக முஸ்லிம் பள்ளிகள், இயக்கங்கள், மத்ரஸாக்கள் மீதான தீவிரவாத பார்வையை இந்த சட்டம் உண்டாக்கி விடும். இந்த சட்ட மூலத்தினால் அனைத்து சமுதாயத்தினரும் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளானாலும் அனைவரையும் விட அதிக பாதிப்பு முஸ்லிம்களுக்கே ஏற்படப் போகிறது.

ஆகவே இந்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த சட்டமூலத்திற்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்பதுடன், குறித்த சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

20வது அரசியல் சீர்திருத்தம் சிறுபான்மை உரிமைகளை பறிக்கும்.
——————————

20வது அரசியல் யாப்பு சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 20வது அரசியல் சீர்திருத்தம் என்பது சிறுபான்மை மக்களுக்கான உரிமையை பரித்து பாதுகாப்பை இல்லாமலாக்கச் செய்யும் ஒன்றாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது 20வது அரசியல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது என்பது எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பரிப்பதற்கும், சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள முடியாமல் திண்டாடுவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடும்.

பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் போது அது சிறுபான்மை மக்களை அனைத்து விதங்களிலும் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்க செய்து விடும். ஆகவே நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக் குழு வேண்டிக் கொள்வதுடன், ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குதல், மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதின் மூலம் "ஒருமித்த நாடு" என்ற கோஷத்தின் கீழ், நாட்டை ஒன்பதாக பிரிப்பது, வடகிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல். அரசியல் யாப்பு நீதிமன்றம் என்ற பெயரில் தனியான நீதிமன்ற உருவாக்கம். அரசியல் யாப்பு நீதிமன்ற நீதிபதிகளை வெளிநாடுகள் விசாரணைக்கு உட்படுத்தும் வகையிலான திருத்தத்தின் மூலம் நாட்டின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இவையனைத்தும் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி பெரும்பான்மை மக்களுக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதுடன், இனப் பிரச்சினைக்கான தீர்வாக இல்லாமல் இனப் பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும் காரியமாகவே இருக்கப் போகிறது. ஆகவே புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் நபிவழிக்கு மாற்றமான எந்தத் திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
——————————

முஸ்லிம் தனியார் சட்டத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணாக அமைந்திருக்கும் சில சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. குறித்த திருத்தங்கள் கண்டிப்பாக திருமறைக் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் அடிப்படையிலேயே அமையப் பெற வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமாக அமையப் பெரும் எந்தவொரு திருத்தத்தையும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது .

 முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில், திருமறைக் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளை பூரணமாக கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய கருத்துரைகள் பற்றிய இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாத குறித்த திருத்த கருத்துரைகளுக்கு எக்காரணம் கொண்டும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று இப்பொதுக் குழு வேண்டிக் கொள்கிறது.

அனைத்து வகையான போதைப் பொருள் பயன்பாட்டாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
——————————

இலங்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் போதைப் பொருள் பயன்பாடு பல்வேறு வகைகளில் அதிகரித்துள்ளதுடன், குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும் போதைப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல் காரர்கள் என்று ஹெரோயின் போன்றவற்றை கடத்துபவர்களை மாத்திரம் கணக்கிட்டு தண்டனை வழங்குவதை விடுத்து எந்தவொரு போதைப் பொருளாக இருந்தாலும்,  போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் மேற்கண்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்ற வகையில் சாராயம், ஹெரோயின் என அனைத்து வகையான போதைப் பயன்பாட்டாளர்களும் இத்தண்டனைக்குரியவர்களாக அறிவிக்கப்பட வேண்டும்.

ஹெரோயின் போன்றவற்றுக்கு தடை விதித்து, தண்டிக்க முற்படும் இலங்கை அரசாங்கம் சாராய தயாரிப்புக்காக அனுமதி வழங்கியுள்ளது. சிகரட், பீடி போன்ற புகையிலை பொருட்களுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது. இது போன்ற அனைத்து வகையான போதைப் பொருட்களும், புகையிலை சார்ந்த பொருட்களும் தடை செய்யப்படுவதுடன், சாராய மற்றும் சிகரட், பீடி கம்பனிகளுக்கும் தடை விதித்து போதையற்ற, புகையிலையற்ற சிறந்த தேசத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கோரிக்கை வைக்கிறது.

திகன, அம்பாறை, காலி கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்.
——————————

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் முடிவுக்கு வராமல் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ஆளும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 03 வருடங்களுக்கு காலி, அம்பாறை மற்றும் திகன ஆகிய பகுதிகளில் பெரும் கலவரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்தன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அளுத்கமை கலவரத்தில் முஸ்லிம்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அளுத்கமை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையுமளவு முஸ்லிம்கள் தங்கள் வாக்குப் பலத்தை மஹிந்தவின் அரசுக்கு எதிராக பயன்படுத்தி புதிய நல்லாட்சி அமைய உதவினார்கள்.

ஆனால் நல்லாட்சி அரசுக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்கள் மீது இந்த ஆட்சியின் போதே காலி, அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் பெரும் கலவரம் தூண்டப்பட்டு பல்லாயிரக் கணக்கான கோடி சொத்துக்களை இழந்து உயிர் சேதங்களையும் முஸ்லிம்கள் சந்தித்தார்கள். ஆனால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை எவ்விதமான நிவாரணங்களையும் ஆளும் அரசு முறையாக வழங்கவில்லை.

ஆளும் அரசு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பூரணமான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என இப்பொதுக் குழு அரசை வேண்டிக் கொள்கிறது.

இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழித்தார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழித்தார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்வோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.