ஐ.நா. சபையில் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் -இணை அனுசரணை வழங்கியது இலங்கை




ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப்
பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40/1 என்ற புதிய தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி நேற்று நிறைவேற்றப்பட்டது.

"தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இலங்கை அரசால் காலவரையறை குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்” என்ற வாசகம் புதிய தீர்மானத்தின் முன்னுரையில் புதிகாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னைய தீர்மானத்தின் உள்ளடக்கங்களே.

பிரிட்டன், ஜேர்மனி, கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்குவதற்கு இலங்கை அரசு இறுதி நேரத்தில் இணங்கிக் கொண்டது.

இதற்கான தீர்மான முன்வரைவு,  ‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கை அரசு மீதான ஐ.நாவின் கண்காணிப்பு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சபையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில், 2021 மார்ச் மாதம் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், சபையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்தில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனிவா நேரப்படி நேற்றுப் பிற்பகல் புதிய தீர்மான வரைவு மீது விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார்.

அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.


ஐ.நா. சபையில் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் -இணை அனுசரணை வழங்கியது இலங்கை ஐ.நா. சபையில் புதிய தீர்மானம்  வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்  -இணை அனுசரணை வழங்கியது இலங்கை Reviewed by Madawala News on March 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.