இஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் !



நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில்
உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.

அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.

அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த "துப்பாக்கிதாரி"(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: "அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்..." குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.

அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ- நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய/ ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை "முஸ்லிம்கள்" என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.

அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு "முஸ்லிம்" தான்! இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். "இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்" என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.

நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.

எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.

அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ- நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா? இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.
இஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் ! இஸ்லாத்திற்கு எதிரான திட்டமிட்ட பரப்புரைகளே நியுசிலாந்து தாக்குதலுக்கு காரணம் ! Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.