கல்முனை விடயத்தில் மிக கச்சிதமாக காய்நகர்த்தும் தமிழ் அரசியல்வாதிகள்..! - Madawala News Number 1 Tamil website from Srilanka

கல்முனை விடயத்தில் மிக கச்சிதமாக காய்நகர்த்தும் தமிழ் அரசியல்வாதிகள்..!எந்தப் பகுதி மக்களும் தங்களுடைய பகுதியின் முன்னேற்றத்துக்காக உள்ளூராட்சி மன்றங்களை கோருவதில்
நியாயம் இருக்கலாம். ஆனால் கல்முனை தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் உள்ளூராட்சி மன்றம் தாருங்கள் என்று கோருவதற்கு பதிலாக, பிரதேச செயலகத்தை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதன் மர்மம்தான் என்ன? 

உள்ளூராட்சி மன்றத்தை கோரினால் அதற்கான எல்லைகள் நிலத்தொடரான எல்லையை கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாகும். அந்த வகையில் கல்முனை தமிழ் பிரதேசங்கள் அனைத்தும் நிலத்தொடர்பற்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதன் காரணமாக தமிழ் மக்களுக்கான ஒரு உள்ளூராட்சி மன்றம் ஒன்றை வழங்க முயற்சிக்கும் போது, அந்த உள்ளூராட்சி மன்றமானது தனித் தமிழ் பிரதேசங்களாக அமைவது முடியாத காரியமாகவே அமையும். அப்படியொரு சபையை பெறுவதாக இருந்தால் 1987ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததுபோல் பிரிப்பதுதான் நியாயமானதும் சரியானதுமாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தவொரு விடயம்தான். அந்த சபையை பெற்றதன் பின் அதற்கான பிரதேச செயலகமானது இயல்பாகவே கிடைத்துவிடும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அவர்கள் உள்ளூராட்சி மன்றம் ஒன்றைக் கோராமல் பிரதேச செயலகம் ஒன்றை அவர்கள் ஏன் கோருகின்றார்கள் என்றால், அந்த பிரதேச செயலகமானது தமிழ் மக்கள் வாழும்  29 ஜிஎஸ் பிரிவுகளையும் நிலத்தொடர்பற்ற முறையில் ஏற்கனவே 'உப தமிழ் பிரதேச செயலகம்' என்ற பெயரில்  நிர்வகித்து வருகின்றார்கள். அந்த அடிப்படையில் நிலத்தொடர்பற்ற முறையில் அமைந்துள்ள அத்தனை ஜி.எஸ் பிரிவுகளையும் தங்களுடைய ஆளுமைக்குள் கொண்டுவருவதாக இருந்தால், பிரதேச செயலகம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதன் மூலமே அது சாத்தியப்படும் என்று நினைத்து செயல்படுவதோடு, அதனைச் சாத்தியப்படுத்தியதன் பின் அதற்கான நகரசபையை பிறகு கேட்டுப்பெற்றுக் கொள்ளலாம் என்றும் நினைக்கின்றார்கள்.

இதற்கான உள்நோக்கம் என்னவென்றால், கல்முனை நகரில் 90%மான பொருளாதார வளங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு சொந்தமானதாக இருப்பதனால், அந்தப் பகுதிகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே முயற்சிக்கின்றார்கள் எனலாம். அதனால்தான் 100%முஸ்லிம்கள் வசிக்கும் கடற்கரைப்பள்ளி வீதியின் பெயரை மாற்றுவதற்குகூட தடையாக உள்ளார்கள் என்பது மட்டுமல்ல, அந்த வீதியைத்தான் தமிழர்களின் ஜிஎஸ் பிரிவு எல்லையாகவும் கொண்டு நிர்வகித்தும் வருகின்றார்கள். ஒருவேளை அவர்களுக்கான பிரதேச செயலகம் கிடைக்கப்பெறுமாக இருந்தால், நிலத்தொடர்பற்ற முறையில் அவர்கள் நிர்வகித்துவரும்  29 ஜீ.எஸ் பிரிவுகளின் பகுதிகளும் அவர்களுடைய ஆளுகைக்குள் வரலாம், அதன் காரணமாக முஸ்லிம்களின் பெரும்பாலான பொருளாதரங்களைக் கொண்டுள்ள கல்முனை நகரின் பகுதிகளையும் அவர்களின் ஆளுகைக்குள் கொண்டுவரவே முயற்சிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை உண்டுபண்ணுவதாகவே இருக்கும் என்பதே உண்மையாகும்.
ஆகவே கல்முனைப் பகுதியைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சமூகத்துக்கு சேவைகளை வழங்கவேண்டும் என்ற என்னத்துக்கு மாறாக, முஸ்லிம்களின் பெரும்பாலான பொருளாதாரங்களை கொண்டுள்ள கல்முனை நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முயற்சிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். இந்த சதி விடயங்களை சமூக ஒற்றுமையை விரும்பும் கல்முனைத் தமிழர்களும், முஸ்லிம்களும் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மையே.  

எனவே, இந்த திட்டத்தில் உள்ள சதியை புரிந்துகொண்டும். எதிர்கால சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டும்  கல்முனை பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே எங்களின் அவாவாகும். அதே நேரம் 1987ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகளைக் கொண்டு சபைகள் பிரிக்கப்படுவதே சிறந்ததுமாகும். அதற்கு தமிழ் அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்கி இதற்கான தீர்வுகளை அடைந்துகொள்வதற்கு முயற்சிக்கவேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..
கல்முனை விடயத்தில் மிக கச்சிதமாக காய்நகர்த்தும் தமிழ் அரசியல்வாதிகள்..! கல்முனை விடயத்தில் மிக கச்சிதமாக காய்நகர்த்தும் தமிழ்  அரசியல்வாதிகள்..! Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5