வில்பத்து விவகாரம்; சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த முஸ்லிம்கள்.- ரஸ்மின் MISc
கடந்த சில வருடங்களுக்கு முன் பாரியளவில் பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு
எதிரான இனவாத தாக்குதல்கள், பிரச்சினைகள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பேசுபொருளாக மாறியது. மாத்திரமன்றி, மைத்திரி – ரனில் கூட்டணி வெற்றி பெருவதற்கும் இதுவே மிகப் பெரும் காரணமாக அமைந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நடத்தப்பட்ட இனவாத செயல்பாடுகளே பிரச்சார கருப்பொருளாக அமைந்தது. பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய வெற்றியை குவித்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறுபான்மை பகுதிகளில் மைத்திரிபால சிரிசேனவுக்கு கிடைத்த அதிகூடிய வாக்குகள் வித்தியாசம் காரணமாக தோல்வியை தழுவினார். அதே போல் பாராளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகளில் மஹிந்த தரப்பினருக்கு வெற்றிகள் கிடைத்தாலும் சிறுபான்மை பகுதிகளில் குறிப்பாக கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மஹிந்த தரப்பினருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இவை அனைத்திற்கும் இனவாதமே காரணமாக அமைந்தது.

இருப்பினும் கடந்த ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம்கள் தரப்பால் பெரும் எதிர்பார்ப்பு மிக்கதாகவே அமைந்தது. இனவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முக்கிய தலைவராகவே மைத்திரிபால சிரிசேனவை மக்கள் பார்த்தார்கள்.

முஸ்லிம்களின் வாக்கு பலத்தை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இனவாதத்திற்கு எந்தவொரு முடிவும் தராத நிலையில் கடந்த அரசை விட மோசமான முறையில் அரசாங்கமே முன்னின்று முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுத்து வருவது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

✪ பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்கள்

✪ முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு எதிரான இனவாதம்

✪ முஸ்லிம் பாடசாலைகள் மீதான பிரச்சினை

✪ முஸ்லிம்களின் வியாபாரத் தளங்கள் மீதான தாக்குதல்

✪ முஸ்லிம் இயக்கங்கள் மீதான தீவிரவாத முத்திரை குத்தப்படல்

✪ முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான செயல்பாடுகள்

என்று கடந்த மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் எண்ணிலடங்காதவையாக இருந்தன. இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரித்த முஸ்லிம்கள் பல விஷயங்களில் தீர்வுகளை எதிர்பார்த்தார்கள்.

குறிப்பாக மைத்திரியை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதரிப்பதற்கு முன் பொது மக்கள் ஆதரவு நிலை எடுத்துவிட்டார்கள். பொது மக்களின் ஆதரவு நிலைக்கு பின்பே அரசியல் தலைவர்கள் மைத்திரி தரப்புடன் இணைந்து கொண்டார்கள். எந்தவொரு அரசியல் தலைமையும் இல்லாமல் பொது மக்களே மைத்திரியை ஆதரிக்கும் நிலைக்கு மாறும் அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் கால கொடுமைகள் நிகழ்ந்திருந்தன. இந்நிலையில் தான் இனிமேலும் மஹிந்தவுடன் இருந்தால் வெற்றி கிடைக்காது என்ற நிலை வந்த பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மைத்திரியை ஆதரிக்க ஆரம்பித்தார்கள்.

பொது மக்களே முடிவெடுத்து ஆதரவுக் கரம் நீட்டிய ஒரு அரசு பொது மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கலாமா? அதிலும் முஸ்லிம்கள் விஷயத்தில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் இவ்வரசு செயல்படலாமா? என்ற பாரிய கேள்விக்கு இவ்வரசாங்கமும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மௌனத்தை மாத்திரமே பதிலாக தருகிறார்கள்.

✪ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

✪ முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் மீட்டெடுப்பு

✪ பள்ளிவாயல்களுக்கான பூரண பாதுகாப்பு

✪ முஸ்லிம்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படல்

✪ மத உரிமைப் பாதுகாப்பு

✪ கலாசார பாதுகாப்பு

போன்ற உரிமை விஷயங்களில் இவ்வரசு நியாயம் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் இவ்வரசாங்கத்தை தேர்வு செய்தார்கள். ஆனால் “சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாக” முஸ்லிம்களின் நிலை மாறிவிட்டது.

நம் விரல்களை கொண்டு நாமே நமது கண்களை குத்திக் கொண்டோமோ என்று முஸ்லிம்கள் நினைக்கத் தலைப்பட்டு விட்டார்கள்.

26 வருடங்கள் தாண்டியும் தீர்வில்லாத வடக்கு முஸ்லிம்கள்
-----------------------------------

விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இலங்கையின் வடக்குப் பகுதி இருந்த காலத்தில் 72 மணி நேரத்திற்குள் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். சொந்த நாட்டுக்குள்ளேயே முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.

புத்தளம், அனுராதபுரம், கொழும்பு என நாட்டின் பல பாகங்களிலும் வடக்கு முஸ்லிம்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். இன்றைக்கு சுமார் 26 வருடங்களுக்கு முன் இது நடைபெற்று முடிந்தது. சக சிறுபான்மை இனமாக இருந்த முஸ்லிம்களை ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலி தீவிரவாதிகள் சொந்த மண்ணை விட்டும் வெளியேற்றினார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற முடியாத நிலை காணப்படுகிறது.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முஸ்லிம்கள் மாத்திரம் பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக வில்பத்து வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள முஸ்லி்ம்களின் பூர்வீக கிராமங்கள் காடு என்ற பெயரில் கபளீகரம் செய்யப்படும் சூழ்ச்சி கனகச்சிதமாக நடைபெற்று வருகிறது.

வில்பத்து, அநியாயம் இழைக்கப்படும் முஸ்லிம்கள்
-----------------------------------------

வில்பத்து வனப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் முஸ்லிம்களின் பூர்வீக கிராமங்களில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்கள் மீள்குடியேறி வருகிறார்கள். தாம் வாழ்ந்த இடங்களில் மீள்குடியேறும் உரிமை தாராளமாகவே அவர்களுக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் தான் அவர்களின் மீள்குடியேற்றம் அமைந்துள்ளது.

வில்பத்து வனப்பகுதியைப் பொருத்தவரையில் வில்பத்து வனம் என்று இன்று சூழலியல் ஆர்வலர்களினால் சொல்லப்படும் பகுதிகள் நேரடி நில அளவை மூலம் தீர்மானிக்கப்பட்ட பகுதிகள் அல்ல. அவை GPS தொழிநுட்பத்தை பயன்படுத்தி கொழும்பில் இருந்து காடு என தீர்மானிக்கப்பட்ட பகுதிகளாகும்.

GPS தொழிநுட்பத்தின் மூலம் காடு என தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் நிஜத்தில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்கள் அமைந்துள்ளன. நேரடி நில அளவை மூலம் எது காடு? எது நாடு? என தீர்மானிக்காமல் 
GPS தொழிநுட்பம் கொண்டு தீர்மானிக்கப்பட்டதினால் வந்த விளைவுதான் இதுவாகும். நாட்டை காடு என்று அரசு அறிவிப்பு செய்துள்ளது.

வரலாற்று ரீதியில் வில்பத்து
---------------------------------------

அனுராதபுரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் (கொழும்பில் இருந்து 180 கி.மீ) வட மத்திய, வட மேல் மாகாணங்களில் அமைந்துள்ளது வில்பத்து. இதன் தெற்கு எல்லையாக கலா ஓயாவும், வடக்கு எல்லையாக மோதரகம் ஆறும் , கிழக்கு எல்லையாக அநுராதபுரத்தை கடந்து செல்லும் மல்வது ஓயாவும், மேற்கு எல்லையாக இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது. இது 131693 ஹெக்டெயார்கள் நிலப்பரப்பைக் கொண்ட பகுதியாகும். இது 1905ம் ஆண்டு சரணாலையமாகவும் 1938ம் ஆண்டில் தேசிய பூங்காவாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.


வில்பத்துவே இலங்கையில் உள்ள பெரிய சரணாலயம் ஆகும். இதற்குள் 60க்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் உள்ளடங்கும்.

கி.மு.543ல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விஜயன் வந்திறங்கிய தம்பபன்னி என்றழைக்கப்படும் “குதிரமலை முணை” வில்பத்து தேசிய பூங்காவின் உள்ளேதான் இருக்கிறது. மேலும் வில்பத்து தேசிய பூங்கா என்றழைக்கப்படும் பகுதியில் அல்லிராணி என்ற பெயரில் ஒரு பெண் இராணி ஆட்சி நடத்தியதாகவும் வரலாறு கூறுகிறது.

குறிப்பாக மொல்லி குளம், மரிச்சிகட்டி கரடிக்குளம், கல் ஆறு, கொண்டச்சி, கொக்குபடையான், சிலாவதுறை ஆகிய பிரதேசங்கள் மிகவும் பழமையான கிராமங்கள் என்று வரலாற்று ஆதாரங்கள் நமக்கு தெளிவாக்குகின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையின் ஆளுனர்களில் ஒருவராக கடமையாற்றிய சேர். எமர்சன் டென்னென்ட் ( Sir Emerson Tennent) அவர்களினால் எழுதப்பட்ட Natural History of Ceylon எனும் புத்தகத்தில் மரிச்சிகட்டி முதல் சிலாவத்துறை (அன்று சிலாவத்துறை முதுஹலாவத (මුතු හලාවත) என்று அழைக்கப்பட்டது) வரை மக்கள் குடியிருந்ததாக தெளிவாக குறிப்பிடுகிறார்.

சிலாவத்துறையில் வாழ்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் முத்துகுளியல் தொழிலில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வந்ததாகவும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதே போல், 1926 – 1928ம் ஆண்டுகளில் எழுதி வெளியிடப்பட்ட டிஸ்ட்ரிக்ட் லிஸ்ட் என்ட் விலேஜஸ் ஒப் சிலோன் ( District List and Villages of Ceylon) அதாவது இலங்கையின் மாவட்ட மற்றும் கிராமங்களின் பட்டியல் எனும் நூலில் The Villages in the Nothern Province பகுதியை குறிப்பிடுகையில் முசலி தெற்கு உதயார் கிராம அலுவலக பிரிவில் இருந்த கிராமங்கள் மூன்று பகுதியாக பிரித்து பட்டியிட்டு குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 201ம் இலக்கத்தில் சிலாவத்துறை, 202ம் இலக்கத்தில் கொக்குபைடையான், 203ம் இலக்கத்தில் மரிச்சிகட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரிச்சிகட்டிக்கு கீழே மொல்லிகுலம், தாண்டிக்குலம், புலியாங்குலம், கரடிக்குளி, மரிச்சிகட்டி, பாலைக்குலி, அட்டிக்குளி உள்ளடங்களாக 22 கிராமங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சீ. ஜீ ஊருகொட அவர்களால் எழுதப்பட்ட இலங்கையின் வனவிலங்குகளின் பாதுகாப்பு (ශ්‍රී ලංකාවේ වනජීවි සංරක්‍ෂණය) எனும் புத்தகத்தில் வில்பத்துவின் வரலாற்றையும் அவர் குறிப்பிட்டு கூறுகிறார். அதில் 7ம் அத்தியாயத்தில் கலாஒயா மற்றும் மோதகம் ஆறுக்கு இடைபட்ட பகுதியில் அமைந்துள்ள ஓல்லாந்தர்களின் வீதியை (இது வில்பத்து வனத்தின் நடுவில் அமைந்திருக்கும் ஒரு பாதையாகும்) மரிச்சிகட்டி மக்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மாட்டு வண்டிகள் மூலம் புத்தளத்திற்கு தேங்காய் மற்றும் ஓலைகள் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

1970ம் ஆண்டு கட்டப்பட்ட முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல், மிக பழமையான கிணறுகள், விவசாய நிலங்கள், வீடுகள், வீடுகளுக்கான பத்திரங்கள் மரிச்சிக்கட்டி கரடிக்குளி கிராமங்களிலும் 1830ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கத்தோலிக்க தமிழர்கள் வழிபாடு நடத்திய சர்ச் மொல்லிகுளத்திலும் கிறிஸ்தவர்களின் சர்ச் ஒன்று பாலக்குளி கிராமத்திலும் இருந்தன என்பதற்கு ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றன.

ஆரம்ப காலம் முதல் வில்பத்து பகுதியில் மனித வசிப்பிடங்கள் இருந்துள்ளன என்பதற்கு இவை ஆதாரமாக இருக்கின்றன.

1973ம் ஆண்டு வில்பத்து விஸ்தரிப்பு
---------------------------------------

1973ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வில்பத்து தேசிய வனத்தை விஸ்தரிக்கும் போது வடக்கில் மோதகம் ஆறு வரையும் கிழக்கில் மஹாவிலச்சி வரையும்தான் விஸ்தரித்தது. அப்போது மரிச்சிக்கட்டியையோ, கரடிக்குளியையோ, கல்லாறுவையோ வில்பத்து தேசிய வனப்பகுதியாக அரசு தீர்மானிக்கவில்லை.

காரணம், அப்போதும் குறித்த பகுதிகளில் மக்கள் வாழ்ந்த காரணத்தினால் அப்பகுதிகள் தேசிய வனப் பகுதிகளாக உள்வாங்கப்படுவதற்கு தகுதியான இடமாக கருதப்படவில்லை. இதனால் வில்பத்து வடக்குப் பகுதியை மோதகம் ஆறு வரை தேசிய வனப் பகுதியின் எல்லையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் இரண்டு வருடங்கள் தாமதமாகியது. அங்கு குடியிருந்த மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்காக அரசுக்கு இந்த காலம் தேவைப்பட்டது.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், காடழித்தல் குற்றச்சாட்டும்.
---------------------------------------------

யுத்தத்தினால் வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறினார்கள். மீள்குடியேறிய முஸ்லிம்கள் காட்டை அழிக்கிறார்கள், நிலங்களை அபகரிக்கிறார்கள் என்று சில இனவாத அமைப்புகளும், அரசியல்வாதிகளும் குரலெழுப்ப ஆரம்பித்தார்கள். இந்த பிரச்சாரத்தின் அழுத்தம் காரணமாக

2009ம் ஆண்டு வேப்பல் பகுதியை சரணாலையமாகவும், 2012ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி 1759/2 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விலத்திக்குளம், மரிச்சிகட்டி, கரடிக்குளி பகுதிகளை சரணாலையமாகவும் அரசாங்கம் பிரகடனம் செய்தது.

முஸ்லிம்கள் காடுகளை அழிக்கிறார்கள் என்ற இனவாத பிரச்சாரத்தினால் முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து 70000க்கும் மேற்பட்ட ஹெக்டெயர்கள் உள்ளடக்கிய காணிகளை 08 சரணாலயங்களாக அரசு பிரகடனம் செய்தது.

அதனால் தான் இன்று வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக கல்லாறு காண்பிக்கப்படுகிறது. கல்லாறு என்பது மரிச்சிக்கட்டி, கரடிக்குளம் போன்ற மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக பகுதிகளையும் உள்ளடக்கிய ஓர் எல்லையாகும்.

கீழுள்ள வரைபடத்தில் வடக்கில் கல்லாறு எல்லையையும், தெற்கில் மோதரகம் ஆறு எல்லையையும் பார்க்க முடியும். சிகப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோடு மூலம் பிரித்துக்காட்டப்படும் பகுதிதான் 2012ம் ஆண்டு வர்த்தமானி மூலம் புதிதாக சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியாகும்.

இதற்கு ஆதாரமாகவே கடந்த 2012.05.11 அன்று வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் காட்டப்படுகிறது. அப்போதைய சுற்றாடல் அமைச்சராக இருந்த அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு சுமார் 15000ம் ஹெக்டேயர் பரப்பு விலாத்திக்குளம் ஒதுக்கக் காடு என பிரகடனப்படுத்தப்பட்டது. இது 2012 ஜுன் 10 தேதியிலிருந்து அமுலுக்கு வந்தது.

26 வருட யுத்தத்திற்கு பின்னர் தாம் வாழும் பகுதிகளுக்கு மீள்குடியேறும் மக்களின் மனோநிலை கருத்திற்கொள்ளப்படாமல் குறித்த வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டது. நேரடி விஜயத்தின் மூலம் நில அளவையாளர்கள் இதுதான் வில்பத்து வனம் என்று தீர்மானித்திருந்தால் மக்கள் வாழ்ந்த பகுதிகள் வில்பத்து வனம் என்று தீர்மானித்திருக்க முடியாது.

வில்பத்து வனத்தை ஒட்டிய பகுதிகளில் 26 வருடங்களுக்கு முன் முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளின் தடங்கள் இன்றும் பார்க்கக் கிடைக்கிறது. முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் காணப்பட்ட பள்ளிவாயல்கள், வீடுகள், பொது கட்டடங்கள், கினறுகள் என அனைத்தும் இன்றும் ஆதாரமாக அங்கு காணப்படுகிறது. அதே போல் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் அப்பகுதி மக்களுக்காக நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளின் சிதிலங்கள் இன்றும் அங்கு காணப்படுகிறது.

அது மட்டுமன்றி, முஸ்லிம்களின் காணிகளுக்கான பதிவுகளும் காணப்படுவதுடன், அங்கு வாழ்ந்த முஸ்லிம்களின் ஆள் அடையாள அட்டைகளும் இன்றும் காணப்படுகின்றன. ஆள் அடையாள அட்டைகளில் குறித்த மக்கள் வாழ்ந்த இடங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வளவு ஆதாரங்கள் மிகத் தெளிவாக அம்மக்கள் மத்தியில் கொட்டிக் கிடந்தும் அது பற்றிய எவ்வித கரிசனையும் அற்று குறித்த பகுதி வனப்பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டது. அது மாத்திரமன்றி கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் குறித்த பகுதிவாழ் முஸ்லிம்களுக்காக அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

மரிச்சுக்கட்டி, மாவில்லு, வெப்பல், கொண்டச்சி, கரடிக்குளி, பாலக்குளி, விலாத்திக்குளம், பெரியமுறிப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் யாரும் வனப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்று முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னால் சூழல் அமைச்சரும் இன்னால் அமைச்சருமான பாட்டலி ஷம்பிக ரனவக்க மற்றும் அமைச்சரான ராஜித சேனாரத்ன போன்றவர்கள் அடித்துக் கூறியுள்ளார்கள்.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கலாநிதி ஜஹான் பெரேரா மற்றும் கலாநிதி ஹஸ்புல்லாஹ் போன்றோரும் வில்பத்து வனப்பகுதிகளில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்பதை ஆய்வு ரீதியாக முன்வைத்துள்ளார்கள்.

பிரபல சிங்கள பத்திரிக்கையான ராவய இது தொடர்பில் தெளிவான, விரிவான ஆக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

முன்னால் சூழல் அமைச்சராக இருந்த பாட்டலி ஷம்பிக ரனவக்கவின் பொருப்பில் அங்கிருக்கும் மக்களுக்காக மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டன.

இங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் காணிக் கச்சேரி நடத்தப்பட்டு ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளின் மூலமே மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசாங்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டது. யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற 2013 / 2014ம் ஆண்டுகளில் ஜனாதிபதி விசேட செயலணி மூலம் 3437 ஏக்கர் காணிகளை அரசு விடுவித்தது.

2013 மே மாதம் 13ம் தேதி முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் 280 ஏக்கர்களும், முசலி பிரதேசத்தில் 700 ஏக்கர்களும் விடுவிக்கப்பட்டன. முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு கிடைத்த 1/2 ஏக்கர் காணியில் குடியேறினார்கள். இவை அரசினால் விடுவிக்கபட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளாகும்.

அரசினால் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகள் குடியேறிய மக்கள் வீடுகள் அமைக்கும் படங்களைத் தான் ஊடகங்களில் வெளியிட்டு, முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழிப்பதாக இனவாதிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

GPS தொழிநுட்பத்தில் கொழும்பிலிருந்து பார்வையிடும் போது 26 வருடங்கள் வாழ்வதற்கு மக்கள் இன்றி காணப்பட்ட பகுதிகள் காடு வளர்ந்த காரணத்தினால் வில்பத்து வனப்பகுதி போன்று தான் தென்படும், தென்பட்டது. ஆனால் உண்மையில் அப்பகுதியில் 26 வருடங்களுக்கு முன் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான பாரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் நிஜத்தை வைத்து முடிவெடுக்காமல் நிழலை வைத்து முடிவெடுத்த காரணத்தினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

ஆதாரங்களின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது. அரசியல் தலைவர்கள், சூழலியல் வனவிலங்கு அதிகாரிகள் போன்றவர்களும் முஸ்லிம்கள் காடுகளை அழிக்கவில்லை அது அவர்கள் வாழ்ந்த சொந்த பூமி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

கலாநிதி ஜஹான் பெரேரா, ஹஸ்புல்லாஹ் போன்றவர்கள் ஆய்வு ரீதியாத முஸ்லிம்கள் காடுகளை அழிக்கவில்லை அது அவர்களின் சொந்த நிலம் என்பதை உறுதி செய்துள்ளார்கள். ஊடக தர்மம் பேணும் ராவய போன்ற பத்திரிக்கைகளும் முஸ்லிம்கள் காடுகளை அழிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வளவுக்கும் மேலதிகமாக கடந்த அரசு அங்குள்ள மக்களுக்கு மின் இணைப்பு போன்றவற்றையும் வழங்கியுள்ளது.

இவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று, இத்தனை ஆதாரங்களை புரக்கணித்து விட்டு பொது மக்கள் வாழ்ந்த பகுதிகளை 
GPS தொழிநுட்பத்தை நம்பி காடுகள் என பிரகடனம் செய்வது என்பது தெளிவான இனவாதமே தவிர வேறில்லை.

2012ம் ஆண்டு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மக்களுக்கு எவ்வித அறிவிப்பும் செய்யப்படாமல் தான் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக ஆப்தீன் அசோசியேஷன்ஸ் எனும் தனியார் நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கள் செய்யப்பட்டு, குறித்த வர்த்தமானி பிரகடனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கின் விசாரனை நிழுவையில் இருக்கிறது.

இந்நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக சூழலியல் அமைப்பொன்று தாக்கள் செய்த வழக்கில் மீள்குடியேற்றம் சட்டப்படிதான் நடைபெற்றுள்ளது என்று சட்டமா அதிபர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தவறானது என்பது உறுதியாகிறது. இருப்பினும் குறித்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வெளியிடப்படவில்லை.

மாவில்லு பேணட்காடு பிரகடனம் மரத்தால் விழுந்தவனை மாடு முட்டிய நிலையில் முஸ்லிம்கள்
---------------------------------------

இந்நிலையில் கடந்த 24.03.2017 அன்று ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது வெளிநாட்டு பயணத்திற்கு மத்தியில் மாவில்லு பேணட்காடு வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

இதில் மாவில்லு, மரிச்சிக்கட்டி, வெப்பல், விலாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. குறித்த ஐந்து பகுதிகளும் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் “3அ” பிரிவின் பிரகாரம் மாவில்லு பேணட் காடு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாவில்லு பேணட்காடு பிரதேசத்தின் எல்லைகளாக வடக்குப் புறமாக 08 தனியார் ஆதன எல்லைகளும், கிழக்குப் புறமாக அருவி ஆற்றின் வவுனியா, மன்னார் எல்லைகள் முதல் அநுராதபுர மாவட்டத்தின் எல்லைகள் வரையிலும், தெற்குப்புற எல்லைகளாக மோதர ஆற்றுப்படுக்கை மற்றும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் வடக்கு எல்லைகளும், மேற்குப் புறமாக 202 தனியார் ஆதன எல்லைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தல் பிரகாரம் பாரியளவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு தற்போது ஜனாதிபதி வெளியிட்டுள்ள மாவில்லு பிரகடனத்தின் மூலம் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது முஸ்லிம்களே.


“மாவில்லு பேணட் காடு” என்ற பெயரில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முசலிப் பிரதேசத்தின் 82 வீதமான பகுதிகள் காடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 சதவீதமான நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு வீதமானவை வயல் நிலங்களாகும். ஒரு பகுதியில் தான் முஸ்லிம்கள் வாழ முடியும்.

இதுவரை முசலிப் பிரதேச மொத்த சனத்தொகையில் வெரும் 40 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இன்னும் 60 சதவீதமானவர்கள் மீள்குடியேற வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஜனாதிபதியின் மாவில்லு பிரகடனத்தின் மூலம் மீதமுள்ள 60 வீதமானவர்களின் மீள்குடியேற்றம் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. மட்டுமன்றி ஏற்கனவே குடியேறியவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

கால அவகாசத்திற்கு முன் கையெழுத்திட்ட ஜனாதிபதி
-----------------------------------------

கடந்த 13.03.2017 ம் திகதியிட்டு முசலிப் பிரதேச சபையினால் அப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாயல்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. குறித்த கடிதத்தில் 13.03.2017ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் குறித்த பகுதி காடுகளுக்கு சொந்தமாக்கப்படவுள்ளது என்றும் இதில் மாற்றுக் கருத்துக்கள், ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் இருப்பின் தெரிவிக்கும்படியும் கோரப்பட்டிருந்தது.

இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு குறித்த காலக்கெடு முடிவெதற்கு முன்பாகவே ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்.

மக்கள் வாழும் பகுதியை காடு என பிரகடனம் செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டு ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் இருப்பின் தெரிவிக்கும்படி பிரதேச செயலகத்தினால் கடிதம் அனுப்பிவிட்டு இரண்டு வார காலம் முடிவெதற்கு முன்பாகவே ஜனாதிபதி கையெழுத்திட்டு குறித்த பகுதியை மாவில்லு வனப் பகுதி என பிரகடனம் செய்து விட்டார்.

அங்கு வாழும் மக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுப்பது தான் அரசின் நிலைபாடாக இருந்திருந்தால் ஏன் கால அவகாசம் முடிவடைய முன்னால் ஜனாதிபதி கையெழுத்திட்டார்? என்கிற சந்தேகம் வலுப்பெருகிறது.

முஸ்லிம்கள் என்ன எதிர்ப்பு வெளியிட்டாலும் நாங்கள் உங்கள் பூர்வீக நிலத்தை காடு என அறிவிப்போம் என்கிற நிலையில் இருந்து கொண்டுதான் முசலி பிரதேச சபை குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது என்பதும் இங்கு தெளிவாக புரிந்து விடுகிறது.

ஆக மொத்தத்தில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு தெளிவாக செவி சாய்க்கிறார் ஜனாதிபதி மைத்ரி என்பது மிகத் தெளிவாக புரிந்து விடுகிறது.

முசலிப் பிரதேசத்தை சோமாலியாவாக மாற்றும் முயற்சியே “மாவில்லு பிரகடனம்”
------------------------------------

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள மாவில்லு பேணட்காடு பிரகடனம் மீள்குடியேற்றத்தில் பாரிய சிக்கல்களை உண்டாக்குவதுடன் ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.

உதாரணத்திற்கு, முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மொத்த மக்கள் தொகையில் 80 வீதமானவர்கள் விவசாயிகளாகும். 20 வீதமானவர்கள் மீனவர்கள். அங்குள்ள விவசாயிகள் வருடத்திற்கு ஒரு போகம் மாத்திரமே விவசாயத்தில் ஈடுபடுவார்கள். விவசாயத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் நீர்பாசனத் திட்டங்கள் இரண்டும் “மாவில்லு பேணட் காடு” பகுதிக்குள்ளாகியுள்ளது. விவசாயம் செய்யும் காலத்தில் தேவையான தண்ணீரை இப்பகுதி மக்கள் எப்படி பெற்றுக் கொள்வது? என்கிற பாரிய பிரச்சினையும் இங்கு எழுந்துள்ளது.

இலங்கையின் அரிசி உற்பத்தியில் சுமார் 6.4 வீதத்தை இப்பகுதி விவசாயிகளே உற்பத்தி செய்கிறார்கள். மாவில்லு பேணட் காடு சட்டத்தின் மூலம் குறித்த அரிசி உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்படும்.

அது மாத்திரமன்றி மீன்பிடியில் ஈடுபடும் அப்பகுதி மீனவர்களும் இதன் மூலம் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள். வனப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “மாவில்லு” பகுதியில் தான் தமது வாழ்வாதார நண்ணீர் மீன்பிடியை இவர்கள் மேற்கொள்வார்கள். காடுகள் சட்டப் பிரகாரம் இனிமேல் இவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாது. காடுகளுக்குள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதும் குற்றமாகும்.

அதே போல், விவசாய காலம் தவிர்ந்த நாட்களில் இங்குள்ள மக்கள் ஆடு, மாடு போன்ற மேய்ச்சலில் ஈடுபடுவார்கள் தற்போது ஜனாதிபதி அறிவித்துள்ள “மாவில்லு பேணட் காடு” சட்டப்படி இனிமேல் குறித்த பிரதேசத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

தற்போது ஜனாதிபதி விடுத்துள்ள காடுகள் பிரகடனத்தின் மூலம் அப்பகுதி மக்கள் விவசாயத்திற்கான நீரைப் பெற்றுக் கொள்ளவோ, மீன்பிடிக்கவோ, விறகு தேடுவதற்கோ, ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காகவோ, மேய்க்கும் போது காட்டுக்குள் சென்று விடும் மாடுகளைத் தேடியோ குறித்த பகுதிக்குள் நுழைய முடியாது. அவ்வாறு நுழைந்தது உறுதி செய்யப்பட்டால் குறைந்தது 07 வருட சிறைத் தண்டனைக்குறிய குற்றமாக அது மாறிவிடும்.

ஆக மொத்தத்தில் குறித்த பகுதியை சோமாலியாவைப் போல் மாற்றி பட்டினியில் செத்து மடிந்தாலும் பரவாயில்லை உங்கள் உரிமை உங்களுக்கு இல்லை என்ற நிலைபாட்டில் தான் ஜனாதிபதி இருக்கிறார் என்பது தெளிவாக புரியும் ஒன்றாகும்.

வில்பத்து, மாவில்லு பிரகடனங்களில் பூக்குலம் இல்லாமல் போனது ஏன்?
------------------------------

வில்பத்து வனப் பகுதி பற்றிய 2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரகடனத்திலும், 2017ல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள மாவில்லு பேணட் காடு பிரகடனத்திலும் முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் பல உள்ளடங்கியுள்ள நிலையில் வில்பத்து வனத்திற்குள் இருக்கும் பூக்குலம் கிராமம் இந்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களிலும் இடம்பெறவில்லை.

வில்பத்து வனப்பகுதியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது பூக்குலம் கிராமம். இது வில்பத்து நடு காட்டில் கடலோரத்தை ஒட்டியிருக்கிறது. வில்பத்து வனத்தின் எல்லைக்குள் தெளிவாக இது அமையப்பெற்றுள்ளது. இக்கிராமத்திற்கு செல்வதாக கடல் வழியாகவும் பயணிக்கலாம். தரை வழிப் பாதையும் இதற்கு உண்டு. தரை வழியாக பயணிப்பது மிகவும் ஆபத்து நிறைந்த ஒன்றாகும். காரணம், தரை வழிப்பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடுமையாக இருக்கும். காட்டு யானைகளை எதிர்கொண்டு பயணிப்பதில் உள்ள சிரமம் காரணமாக கடல் வழிப்பாதையைத் தான் அங்குள்ளவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

பூக்குலம் கிராமத்திற்கு செல்வதற்காக வில்பத்து நடுக்காட்டில் ஆரம்பிக்கும் பாதை
குறித்த கிராமம் மீனவர்களை பெரும்பாலும் உள்ளடக்கிய ஒன்றாகும். இங்கு பாடசாலைக்கான கட்டடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், கிருத்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராம சேவகரும் அங்கு வந்து செல்வதாகவும், அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை உள்ளிட்டவையும் இருப்பதாகவும் அங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். 

வில்பத்து நடு காட்டின் கடல் பகுதியை ஒட்டியிருக்கும் இக்கிராமத்திலிருந்து பார்த்தால் புத்தளத்தின் கடல் பகுதிகளை தெளிவாக பார்க்க முடியும். அத்துடன் இக்கிராமம் நிர்வாக அலகின்படி புத்தளம் மாவட்டம் வண்ணாத்தி பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகிறது.

வனப் பகுதிக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் காலா காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் பூர்வீக பூமியை வனப்பகுதியென்று திட்டமிட்டு வர்த்தமானியில் அறிவித்த ஜனாதிபதியும் ஆளும் நல்லாட்சி (?) அரசாங்கமும் உண்மையில் நடுக் காட்டுக்குள் காட்டை அழித்து வாழ்ந்து வரும் பூக்குலம் மக்கள் பற்றியோ, அந்த கிராமம் பற்றியோ வாய் திறப்பதில்லையே அது ஏன்?

உண்மையில் காடழித்தவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். தெளிவாக காட்டை அழித்திருக்கிறார்கள். அந்த ஆதாரங்களை நேரடியாக சென்று எந்த வனத்துறை அதிகாரியும் பார்வையிட முடியும் என்றிருந்தும் அது பற்றி யாரும் வாய் திறக்கவில்லையே அது ஏன்?

எந்தவொரு ஊடகமும் அவர்களைப் பற்றி பேசாமல், பூர்வீகக் இடத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களை காடழிக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் பொய்யைப் புனைந்து சொல்லிக் கொண்டிருப்பது ஏன்?

முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் சொந்த இடத்தில் குடியேறினாலும் அவர்களை காடழித்தவர்கள் என்று காட்சிப்படுத்துவதும், முஸ்லிம்களின் பூர்வீக இடத்தினை கொழும்பில் இருந்து கொண்டு GPS மூலம் பார்த்தே காடு என்று வகைப்படுத்தி வர்த்தமானியில் அறிவிப்பதும், ஆட்சேபனைக்குறிய நாட்கள் முடிவதற்கு முன்பே வர்த்தமானியில் அறிவிப்பதும் ஏன்? அவர்கள் முஸ்லிம்கள் என்கிற இனவாதப் பார்வை மாத்திரம் தான் இதற்குறிய பதிலாக அமைய முடியும்.

ஆனால், முஸ்லிம் அல்லாதவர்கள் உண்மையில் காடழித்து, வீடு கட்டி, பாடசாலை கட்டி, வணக்கத் தளம் எழுப்பியுள்ளார்கள் அந்த பூக்குலம் மக்கள் பற்றியோ அவர்கள் காடழித்தது பற்றியோ எந்தவொரு அரசியல்வாதியோ, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியோ, சூழலியல் செயல்பாட்டாளரோ, ஊடகங்களோ வாய் திறக்காமல் இருப்பதற்கும் இனவாதம் மாத்திரமே காரனமாக அமைகிறது என்றால் மிகையில்லை.

மொத்தத்தில் மாமி உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழி முஸ்லிம்கள் விஷயத்தில் மிகப் பொருத்தமாக அமைந்து விட்டது.

நாமல்கம மற்றும் நந்தமித்திரிகம ஆகியவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லையே ஏன்?
----------------------------------------

வடக்கு முஸ்லிம் மீள்குடியேற்றம் பற்றி பேசப்படும் போது, வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்றும், முஸ்லிம்கள் காடழிக்கிறார்கள், இடம் பிடிக்கிறார்கள் என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கும் சூழலியல் ஆர்வளர்களும், சில அரசியல்வாதிகளும் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும் நாமல்கம பற்றியோ நந்தமித்திரிகம பற்றியோ ஏன் பேசுவதில்லை? என்ற அடுத்த வினாவும் இங்கு எழுகிறது.

வவுனியாவில் 5000 ஏக்கர்கள் மக்கள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் மீள்குடியேற்றத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத ஹம்பாந்தோட்டையை சேர்ந்த மக்கள் நாமல்கமையில் 470 குடும்பங்களும், போகஸ்வெவ இல. 1ல் 500 குடும்பங்களும், போகஸ்வெவ இல. 2ல் 560 குடும்பங்களும், வேரதென்னையில் 520 குடும்பங்களும் செலலிஹினிகமையில் 450 குடும்பங்களும் நந்தமித்ரகமையில் 360 குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களைப் பற்றி எந்தவொரு சூழலியலாளர்களோ, இனவாதிகளோ, அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ ஏன் வாய் திறக்க வில்லை?

மாவில்லு பிரகடனத்தில் இந்த ஊர்கள் ஏன் இணைக்கப்பட வில்லை?

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், முஸலிப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் அப்போதைய தலைவருமான ஹுனைஸ் பாருக் அவர்கள் வில்பத்து பிரச்சினை பூதாகரமாக்கப்பட்ட கடந்த 2015 மே மாதம் 25ம் தேதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த இரு கிராமங்கள் பற்றியும் தெளிவாக விபரித்துக் கூறியிருந்தார்.

பாராளுமன்றத்தில் முன்னால் உறுப்பினர் ஹுனைஸ் பாருக் வில்பத்து தொடர்பில் ஆற்றிய உரை!
----------------------------------------------

வில்பத்து சரணாலயம் என்பது மன்னார் மாவட்டத்திற்குள் இல்லை. புத்தளத்தையும் மன்னாரையும் பிரிக்கின்ற மோதரகம ஆறு, உப்பாறுதான் வில்பத்து சரணாலயத்துக்கான எல்லையாக இருக்கின்றது.

ஆற்றுக்குக் கிழக்குப் பக்கமாகத்தான் வில்பத்து சரணாலயம் இருக்கின்றது. மேற்குப் பக்கத்தில்தான் முசலி என்ற பிரதேசம் இருக்கின்றது. எனவே வில்பத்து சரணாலயத்துக்கும் மறிச்சிக்கட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் இன்னுமொரு பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றார்கள். அதாவது அந்தப் பிரதேசத்தில் ஒரு கிராமம் மாத்திரம்தான் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்கள்.

முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, கொண்டச்சி என்று பல நூற்றாண்டு காலம் பழைமையான கிராமங்களும் இருந்தன. அவற்றுக்கான எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன. அதாவது அங்கு விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் இன்னும் காட்சியளிக்கின்றன. 50 – 100 வருடங்கள் பழமைவாய்ந்த கிணறுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

வீடுகள் நொருக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அங்கு சென்றால் அந்த அத்தனை எச்சங்களையும் பார்க்க முடியும்.

இன்று முசலியைப் பற்­றிய பூதாகரமாகப் பேசுகின்றார்கள். அங்கு வனங்கள் அழிக்கப்பட்டதாகச் சொல்கின்றார்கள். காடுகள் அழிக்கப்பட்டதாகச் சொல்கின்றார்கள். இது சுற்றாடலுக்குப் பெரிய பிரச்சினை என்று சொல்கின்றார்கள். அவ்வாறு சொல்கின்றவர்களிடம் நாம் ஒன்றைக் கேட்கின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் ‘நந்தமித்திரிகம” என்ற ஒரு கம இருக்கின்றது. ‘நாமல்கம” என்ற ஒரு கம இருக்கின்றது. அதேபோன்று இன்னும் பல புதிய சிங்களக் கிராமங்கள் இருக்கின்றன. வெலி ஓயாவில் புதிய கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களை உருவாக்குவதற்கு எந்த வன பிரிவில் அனுமதி எடுக்கப்பட்டது. எந்த சூழலியல் பிரிவில் அனுமதி எடுக்கப்பட்டது. எங்கு எப்படிக் காணிக்கச்சேரி வைக்கப்பட்டது. பயனாளிகள் எப்படி தெரிவு செய்யப்பட்டார்கள் என்று நான் கேட்கிறேன்.

இன்று முசலியில் குடியேறிய மக்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்துக்காகவே அவர்களுக்குக் கல்லெறியப்படுகின்றது. வவுனியாவில் நாமல்கமவுக்குப் போய் பாருங்கள். நந்தமித்திரிகமவுக்குப் போய்ப்பாருங்கள்.  வெலி ஓயாவுக்குப் போய்ப்பாருங்கள். அங்கு எல்லாம் அந்தக் காணிகள் முறைப்படி வழங்கப்படவில்லை. அங்கு காணிக் கச்சேரிகள் வைக்கப்படவில்லை. இதனை நாங்கள் சவாலாகச் சொல்கின்றோம்.

அங்கு குடியேற்றப்பட்டவர்களோ குடியேற்றப்பட்டவர்களின் பரம்பரையோ அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களல்லர். அவர்கள் வெளிமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டுக் குடியேற்றப்பட்டவர்கள். அந்த குடியேற்றங்கள் நடக்கும் பொழுது வெளிமாவட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படுகின்றார்கள்  என்று நாங்கள் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டோம். அன்று அதற்கு ஒரு முடிவும் இல்லை. ஆனால் மறிச்சிக்கட்டி மக்கள் சொந்த மண்ணைச் சேர்ந்­த­வர்கள். அந்த மண்ணில் வாழ்ந்தவர்கள். அவர்களுடைய மனம் நோகக்கூடியவாறு  நடந்து கொள்கின்றார்கள்.

இவ்வாறு பாராளுமன்றத்திலேயே அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் விபரித்துக் கூறினார்.

வில்பத்துவில் மாத்திரம் தான் காடழிக்கப்பட்டதா?
-----------------------------------------

வட மாகாணத்தின் பதவிய சரணாலயத்தில் காடழிப்பு செய்து குடியேற்றங்கள் நடைபெறுகிறது. அங்கே முஸ்லிம்கள் யாரும் குடியேறாத காரணத்தினால் அது பற்றி சர்ச்சைகள் உருவாக்கப்படவில்லை.

சிங்கராஜ சரணாலயத்தின் எல்லைக்குள்ளே “டங்காகம” எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இதுவும் காடுகள் அழிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கிராமமாகும். இதை பற்றி வனவிலங்கு மற்றும் சூழலியளாளர்கள் பேசுவார்களா?

கந்தலாய் பிரதான வீதியின் இரண்டு பக்கங்களில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுக் கொள்ளவில்லையே ஏன்?

மின்னேறிய தேசிய வனத்தின் நடுவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டே அந்த பாதை அமைக்கப்பட்டது. இதைப் பற்றி ஏன் சூழலியலாளர்கள் கவலைப்படுவதில்லை? காட்டு விலங்குள் இரவு நேரத்தில் பாதையில் வந்து நிற்குமளவுக்கு அந்தப் பாதையினால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக யாரும் ஏன் குரலெழுப்ப வில்லை.

மின்னேறிய தேசிய வனத்தின் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவே அவற்றைப் பற்றி எந்தவொரு ஊடகமும் காடழிப்பு நடைபெறுகிறது என்று பேசவில்லையே ஏன்?

LTTE தீவிரவாதம் கடந்த 2009ம் ஆண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தபின், வில்பத்து தேசிய வனத்தின் வடக்கு பகுதியிலிருந்து சிலாவத்துறை வரைக்கும் புதிதாக ஒரு பாதை அமைக்கப்பட வேண்டிய தேவையேற்பட்டு, பாதுகாப்பு காரணங்களினால் அரச அனுமதியுடன் இராணுவமே குறித்த பாதையை அமைத்தது.  குறித்த பாதைக்காக இரண்டு புறமும் 200 மீட்டர் வரைக்கும் காடுகளை இராணுவத்தால் அழிக்கப்பட்டன. இந்தக் காடழிப்பு முஸ்லிம்களினால் செய்யப்படவில்லை. ஆனால் இன்று காட்டுக்காக குரல் கொடுக்கும் எவறும் அன்றும் இன்றும் இந்தக் காடழிப்பு பற்றி வாய் திறக்கவில்லை.

இவை எதிலும் முஸ்லிம்கள் தொடர்புபடவில்லை. பெரும்பான்மை சமுதாயம் காட்டை அல்ல நாட்டையே அழித்தாலும் அதைப் பற்றி வாய் திறக்காதவர்கள் தான் சொந்த பூர்வீகக் காணியில் குடியேறும் முஸ்லிம்களை காடழிப்பதாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியில் அமரவைத்தவர்களை அமைதியாய் வாழ விடுங்கள்
--------------------------------------------

கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக்காட்டியதைப் போல் நல்லாட்சி (?) என்ற பெயரில் தற்போது நடத்தப்படும் இந்த ஆட்சியின், ஆட்சியாயர்களை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்த பெரும்பங்கு முஸ்லிம்களையே சாறும். இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆட்சிக்கு அமரச் செய்த முஸ்லிம்களை காட்டுக்காக அழிக்க நினைப்பது, வாழ்வாதாரத்தை நசுக்க நினைப்பது என்பது மனசாட்சிக்கு விரோதமான செயல்பாடாகும்.

ஆகவே, எதிர்கால ஆட்சி அதிகாரத்தின் தேவையை அரசியல்வாதிகள் உணர்ந்திருந்தால் குறிப்பாக ஜனாதிபதியவர்கள் உணர்ந்தால் வில்பத்து, மாவில்லு மாத்திரமல்லாமல் அனைத்து பிரச்சினைகளிலும் சிறுபான்மை மக்களின் உரிமை காக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுடன், சிறுபான்மை மக்களின் உரிமை பறிக்கப்படும் போது, அதன் விளைவு ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை இழக்க நேரிடும். மஹிந்த ராஜபக்ஷவைப் போல்!
வில்பத்து விவகாரம்; சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த முஸ்லிம்கள். வில்பத்து விவகாரம்; சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த முஸ்லிம்கள். Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.